நேற்று (செப்டம்பர் 10) காசாவில், இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் வசிக்கும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள அல்-மவாசி கடற்கரையோரப் பகுதிமீது இஸ்ரேல் கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அல்-மவாசி பகுதி கான் யூனிஸ் நகருக்குத் தெற்கே உள்ளது. இது, இஸ்ரேலின் தாக்குதல் இலக்கில் இல்லாத, ‘மனிதாபிமான’ மற்றும் ‘பாதுகாப்பு’ வளையப் பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இஸ்ரேலும் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தது. அதனை நம்பி, காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் பெரும் எண்ணிக்கையில் அல்-மவாசி கடற்கரையோரப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
ஆனால், இவ்வாறு தஞ்சம் புகுந்திருந்தவர்கள் மீதுதான், இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தி, 40 உயிர்களைப் பறித்துள்ளது. இதனைப் பாலஸ்தீனத்தின் வாபா செய்தி ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் குண்டு வீச்சால் கிட்டத்தட்ட 50 அடி அகலத்திற்கு பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதும், மக்களின் கூடாரங்கள், உடைமைகள் அழிக்கப்பட்டிருப்பதும் இந்த புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குச் சர்வதேச அளவில் கண்டனங்களும் எழுந்துள்ளன.
படிக்க: காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை
மனிதாபிமான பகுதி என்றாலும் அங்கிருந்து ஹமாஸ் கமாண்டோக்கள் இயக்குவதாகவும், அதை வான்வழி கண்காணிப்பில் உறுதிப்படுத்தியதன் காரணமாகவே துல்லியமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தனது கொலை வெறி தாக்குதலை வழக்கம்போல் நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால், அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி காசா மீது போரைத் துவங்கிய இஸ்ரேல், இதுவரை, 40 ஆயிரத்து 972 பேருக்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்துள்ளது. 94 ஆயிரத்து 761 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவர்.
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 11 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP- The World Food Programme) அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் இனப்படுகொலையை இன்னும் நிறுத்தவில்லை. ஆனால், இந்த கொலைவெறித் தாக்குதல்கள் ஒருபோதும் பாலஸ்தீன விடுதலை உணர்வை மங்கச்செய்யாது.
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram