காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை

காசா மீதான 10 மாதகால இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரின் போது பலமுறை இஸ்ரேல் இராணுவம் "பாதுகாப்பான" பகுதிகளுக்கு மக்களை வெளியேற்ற உத்தரவிட்டது. ஆனால் காசாவில் தற்போது எங்குதான் பாதுகாப்பான பகுதி இருக்கிறது என்பது பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்திற்கே வெளிச்சம்.

0

க்டோபர் 7, 2023 முதல் காசா முனையில் இருந்த பல மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. முதல் முறை தாக்குதலுக்குள்ளான அல்-ஷிஃபா மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் உட்படப் பலர் கொலைகார இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். பலர் தாக்குதலில் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் இருக்கும் நிராயுதபாணியான மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்கு உலகம் முழுவதிலும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு நாடுகளின் மக்கள் “காசா மீதான போரை நிறுத்து” என்ற முழக்கத்துடன் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தற்போது மத்திய காசாவில் செயல்பட்டுவரும் ஒரே மருத்துவமனை அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை ஆகும். இங்கு நோயாளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்குப் போர் சூழலிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


படிக்க : பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய மாணவர்களை ஒடுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்


ஆனால், தற்போது மத்திய காசாவில் உள்ள டெய்ர் எல்-பலாஹ் பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. எனவே, அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையும் தாக்குதலுக்குள்ளாகும் என்ற அச்சத்தில் பாலஸ்தீன மக்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

காசா அரசாங்க ஊடக அலுவலகம், அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை சிவப்பு மண்டலம் என்று இஸ்‌ரேலால் வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், “வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதியான பிளாக் 128-இல் உள்ள டெய்ர் அல்-பலாஹ் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்களுக்கு…., உங்கள் பகுதியில் உள்ள இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும். இது ஆபத்தான போர் பகுதி..,” என்று X தளத்தில் இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே (Avichay Adraee) கூறினார். “உங்கள் பாதுகாப்பிற்காக, [அல்-மவாசியின்] மேற்குப் பகுதிக்கு உடனடியாக செல்லவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாலஸ்தீன மக்கள் “பாதுகாப்பான பகுதிகளுக்கு” செல்லும் வழியில் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கழகம் தீர்மானம் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், கடந்த ஆண்டு 2023 அக்டோபர் முதல் காசா முனையில் இஸ்ரேல் தனது கொடூர தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.


படிக்க : காசாவின் டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்கள் | படக்கட்டுரை


இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40,400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 93,500 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காசா மீதான தொடர்ச்சியான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரின் காரணமாக உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் பெரும்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

***

இஸ்ரேலிய தரைப்படை தாக்குதலுக்கு அச்சம் கொண்டு பாலஸ்தீன நோயாளிகள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறுகின்றனர்.

***

கிழக்கு டெய்ர் எல்-பாலாவில் உள்ள ஒரு பகுதியை காலி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவம் கோரியதை அடுத்து, அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மக்கள் வெளியேற்றுகின்றனர்.

***

***

காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 93,500 பேர் காயமடைந்துள்ளனர்.

***

ஒரு பெண் நோயாளி தனது மருத்துவமனை படுக்கையில் தனது உடைமைகளால் சூழப்பட்டுள்ளார். அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் நோய்வாய்ப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

***

அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயந்து நோயாளிகள் வெளியேறுவதை ஒரு நபர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

***

எல்லைகளற்ற டாக்டர்கள் சங்கம் (MSF) அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதை, இந்த “நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியது.

***

அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்த நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறி வருகின்றனர்.

***

காசாவில் ஒவ்வொரு மணி நேரமும் 15 பேர் கொல்லப்படுகிறார்கள் – அவர்களில் ஆறு பேர் குழந்தைகள் – 35 பேர் காயமடைகின்றனர்.

***

கிழக்கு டெய்ர் எல்-பாலாவில் உள்ள ஒரு பகுதியை காலி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவம் கோரியதை அடுத்து, அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மக்கள் வெளியேற்றுகின்றனர்.


கல்பனா

நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க