கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்புப் போரை எதிர்த்து பல நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் பெரும் வீச்சாக நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகங்களில் மட்டும் இன்றி நகரங்களின் முக்கியச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்ட ஆர்ப்பாட்டங்களையும் மாணவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.
1960களில் வியட்நாம் யுத்த காலத்தில் இருந்து போர்களுக்கு எதிராகவும் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமெரிக்க மாணவர்களின் போராட்டம் உலகறிந்ததாகும். அதே போன்று இப்போது பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் மிருகத்தனமான இன அழிப்புப்போரை எதிர்த்தும் மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இப்பொழுது அமெரிக்க மாணவர்களின் இந்த ஜனநாயக உணர்வெழுச்சியை அமெரிக்க ஆளும் வர்க்கமும் அரசும் எப்படி கையாளுகிறது என்பதை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதுகுறித்து அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (Council of American – Islamic relations), அரபு அமெரிக்க மக்களின் பாகுபாட்டு எதிர்ப்புக் குழு (Arab American committee for anti discrimination) பாலஸ்தீனத்துக்கான அமைப்பு (Palestine league) ஆகிய அமைப்புகள் இணைந்து ஆகஸ்டு 14 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர். அதில் இஸ்ரேல் எதிர்ப்பு பாலஸ்தீன ஆதரவு என போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் எவ்வாறு நடத்துகின்றன என்பதை பற்றி உலகுக்கு எடுத்துக் கூறினர்.
ஆகஸ்ட் 10 அன்று வெளிவந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி
- ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்- வாஷிங்டன்
- கலிபோர்னியா பல்கலைக்கழகம்- லாஸ் ஏஞ்சல்ஸ்
- எமோரி பல்கலைக்கழகம் -அட்லாண்டா- ஜார்ஜியா
ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகளை மட்டும் விவரித்தனர்.
படிக்க: காசா பள்ளியின் மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த இஸ்ரேல்
குறிப்பாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான மாணவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர் கொண்டாக வேண்டும் என்று கூறி, அவர்களை இக்கல்வியாண்டில் மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு அபராத தொகையுடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
அதாவது விடுதியில் உள்ள உணவகத்துக்கு செல்லக்கூடாது, படிப்பதற்காக நூலகத்திற்குள் நுழையக்கூடாது, வளாகத்தில் உள்ள தேநீரகங்களில் நண்பர்களுடன் தேநீர் அருந்த செல்லக்கூடாது; மற்றபடி அறையில் தங்கிக் கொள்ளலாம் வகுப்புக்குச் செல்லலாம் மீண்டும் அறைக்கு சென்று விட வேண்டும். உடல் நலமற்று போனால் மருத்துவமனைக்குச் செல்வதற்கும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கும் மட்டும் விலக்களிக்கப்படுகிறது என்று மிகவும் கொடூரமான நிபந்தனைகளை விதித்துள்ளது.
எதிலும் மற்ற மாணவர்களுடன் கலந்துறவாடக்கூடாது என்பதுதான் நிபந்தனைகளின் நோக்கம். அதாவது போராடிய மாணவர்களை தனிமைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி படிப்பை விட்டே ஓடி விடச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால்தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய முடியும் என்று நிர்வாகம் கூறியுள்ளது என்பதை எடுத்துரைத்தனர்.
இந்த நிபந்தனைகள் ஒருவரை வீட்டு காவலில் வைப்பதன் இன்னொரு வடிவமே ஆகும்.
இந்த நிபந்தனைகளை ஆறு மாத காலம் பற்றியொழுகினால் அதன் பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராத தொகை ரத்து செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது. அபராத தொகை பற்றி உத்தரவாதம் அளிக்காமல் வேண்டுமென்றே தான் ரத்து செய்யப்படலாம் என்று கூறியிருக்கிறது. எந்த உறுதியும் கிடையாது எப்பொழுது வேண்டுமானாலும் ஏதாவது காரணத்தை சொல்லி அதை மாற்றிக் கொண்டு விட முடியும் என்ற வகையில் தொங்கலில் விடுவதற்காக தான் அப்படி சொல்லி இருக்கிறது நிர்வாகம்.
இத்தனைக்கும் அது ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். அங்கு வருடத்திற்கு 70,000 டாலர் அளவில் கட்டணம் பெற்றுத்தான் சேர்க்கிறார்கள். (அமெரிக்காவில் வால்மார்ட்டில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 2000 லிருந்து 3000 டாலர் வரை தான் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த கட்டணம் எவ்வளவு அதிகம் என்பதை நாம் உணர முடியும்).
இவ்வளவு கட்டணத்தை வாங்கிக் கொண்டு, மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு அநீதிக்கு எதிராக போராடியதற்காக நிர்வாகம் அவர்களை ஒதுக்கி வைக்கின்றது. சக மாணவர்களுடன் எத்தகைய நட்பும் ஏற்படாத வகையில் தடுத்து வைக்க விரும்புகிறது. அவர்களுக்கு இடையில் எத்தகைய உறவு நிலவும் என்பதை நமது நாட்டில் உயர் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களின் அனுபவங்களை காணும் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
படிக்க: இஸ்ரேலின் தாக்குதலால் காசாவின் நகரங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள் | புகைப்படக் கட்டுரை
பல்கலைக்கழக நிர்வாகங்கள் அவற்றுக்கு நிதியளிக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், சில வெளி தரகு குழுக்களின் அழுத்தத்தினால் தான் தங்களின் வளாகங்களுக்குள் பாலஸ்தீன ஆதரவு அல்லது இஸ்ரேல் எதிர்ப்புணர்வு வளர அனுமதிக்க முடியாது என்று கட்டளையிடுகின்றன என்று கூறுகிறார் பாலஸ்தீன சட்டப் பணியாளரும் (Attorney general) வழக்குரைஞருமான டைலான் சபா.
மேலும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் அவ்வாறு செய்வது மாணவர்களின் கருத்துரிமைகளை, பொதுவான குடிமக்களுக்குரிய சிவில் உரிமைகளைக்கூட மறுப்பதும் நசுக்குவதுமே ஆகும் என்று கண்டனம் செய்திருக்கிறார்.
இன்னும் இது போன்று போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை செலுத்தி துன்புறுத்தி கட்டுக்குள் வைப்பதற்காக வெளி ஆட்களை அதாவது குண்டர் படைகளை அனுமதிக்கின்றன. மற்றும் தமது வளாகத்திற்குள் இஸ்ரேல் ஆதரவோ பாலஸ்தீன ஆதரவோ எதற்கும் போராட அனுமதி இல்லை என்று ஒட்டுமொத்தமாக தடை விதித்து விடுகின்றன.
நிர்வாகத்தின் இத்தகைய அடாவடித்தனங்களை எதிர்த்து மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயே தற்காலிக குடில்களை அமைத்துக் கொண்டு பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராகவும் அதற்குத் துணை போகும் நிர்வாகத்துக்கு எதிராகவும் தங்களின் எதிர்ப்பை அமைதியான முறையில் பதிவு செய்தனர். அதையும் ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் போலீசை வளாகத்திற்குள் வரவழைத்து குடில்களை அடித்து நொறுக்கி குடில் அமைத்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது அடக்கு முறையை ஏவி கைது செய்தன.
இப்பல்கலைக்கழகங்களில் இந்த நடவடிக்கைகள் சுதந்திரமான கருத்துரிமைகளையும் அரசியல் சார்புகளையும் ஆதரித்து அனுமதிக்கின்ற பல்கலைக்கழகங்களுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
அரபு அமெரிக்க பாகுபாட்டுக்கு எதிரான குழுவின் சட்ட இயக்குனர் கிரிஸ் காட்ஷல் பென்னெட், பல்கலைக்கழக நிர்வாகங்கள் எவ்வித விசாரணையும் இல்லாமல் மாணவர்கள் மீது அபாண்டமாக கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன என்று குற்றம் சாட்டுகிறார். குறிப்பாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மிருகத்தனமான தண்டனைகளை வழங்கியுள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த நடத்தையையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது என்று சாடியுள்ளார்.
அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சிலின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை இயக்குனர் கோரி செய்லர் (Corey Saylor), பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் பலவும் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராகப் போராடுபவர்களை இலக்கு வைத்து தாக்குகின்றன என்பதுடன் கூடவே பாலஸ்தீன எதிர்ப்பு இன வெறியையும் இஸ்லாமிய மதவெறுப்பையும் ஊக்குவிக்கின்றன என்று கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள 600 பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கும் ஈமெயில் அனுப்பி உள்ளார். உண்மையில் அப்படி உணர்வுடன் போராடிய மாணவர்களை பல்கலைக்கழகங்கள் வரவேற்றிருக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
எனினும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர்களின் அம்பலப்படுத்தல்கள் குறிப்பான மூன்று பல்கலைக்கழகங்களின் நடத்தையைப் பற்றி மட்டுமே இருந்தது. வரும் வாரங்களில் இன்னும் பல கல்வி நிறுவனங்களின் யோக்கியதையை வெளிக்கொண்டு வருவோம் என்று சூளுரைத்துள்ளார் கோரி செய்லர்.
செய்தி ஆதாரம்: கவுன்டர் கரண்ட்ஸ்
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube