தெற்கு மற்றும் மத்திய காசாவில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இஸ்ரேலிய படைகள் அழுத்தத்தை அதிகரித்து வருவதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டு வரும் தெற்கு நகரமான கான் யூனிஸின் கிழக்குப் பகுதிகளில் ஜூலை 28 அன்று கடுமையான தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களை தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி நெரிசலான பகுதிகளான மேற்கில் உள்ள அல்-மவாசி (al-Mawasi) அல்லது வடக்கே உள்ள டெய்ர் எல்-பலா (Deir el-Balah) நகரங்களை நோக்கித் தள்ளியது.
இஸ்ரேலிய டாங்கிகள் நகரின் கிழக்கில் உள்ள அல்-கராரா (கிசுஃபுயிம்) [al-Karara (Kissufuim)], அஸ்-ஸன்னா [az-Zanna] மற்றும் பானி சுஹைலா [Bani Suheila] ஆகிய நகரங்களுக்குள் நுழைந்ததால், கடந்த 24 மணி நேரத்தில் இராணுவத் தாக்குதல்களில் 66 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு கான் யூனிஸில் டஜன் கணக்கான போராளிகளைக் கொன்றதாகவும், இராணுவ உள்கட்டமைப்புகளை அழித்ததாகவும் இஸ்ரேலிய படைகள் கூறுகின்றன.
இதற்கிடையில், எகிப்து எல்லைக்கு அருகிலுள்ள ரபாவில், இஸ்ரேலிய படைகள் நகரத்தின் வடக்குப் பகுதிகளுக்குள் ஆழமாக முன்னேறின. அங்கு அவர்கள் இன்னும் முழு கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவில்லை.
மத்திய காசா பகுதியில் டாங்கிகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாலும், இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்ததாலும், அங்கு உள்ள புரைஜ் முகாம், நுசிராத் முகாம் மற்றும் ஜுஹோர் அத்-திக் கிராமம் பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காசாவின் 86 சதவிகித பகுதிகள் இப்போது வெளியேற்ற உத்தரவின் (evacuation orders) கீழ் உள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமை (யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ) தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 39,324 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 90,830 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வளவு பேரைக் கொன்று குவித்த பின்னரும் இரத்த வெறி அடங்காமல் இஸ்ரேல் காசாவில் நடத்தி வரும் இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி வருகிறது.








நன்றி: அல்ஜசீரா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube