காசாவில் பள்ளியின் மீது நேற்று (ஆகஸ்ட் 10) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 39,800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு காசாவில் பள்ளிக்கூடம் ஒன்று அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கான புகலிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அங்கு மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி மக்களை படுகொலை செய்துள்ளது.
பள்ளியில் இருந்தால், தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று பொதுமக்கள் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்தனர். ஆனால் இஸ்ரேல் விமானப்படை இந்த பள்ளியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து காசா அதிகாரிகள் கூறுகையில், “தராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள அல்-தபின் பள்ளியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 907 கிலோ எடை கொண்ட மூன்று குண்டுகள் இப்பள்ளி மீது விழுந்துள்ளது. இது கொடூரமான படுகொலை” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் காசாவில் 4 பள்ளிக்கூடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி இஸ்ரேலிய தாக்குதலில் அகதிகளாக்கப்பட்ட மக்களின் புகலிடமாக செயல்பட்ட 2 பள்ளிகள் தகர்க்கப்பட்டன. இதில் 30 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய தினம் (ஆகஸ்ட் 3) காசா நகரின் ஹமாமா பள்ளியில் நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி தலால் அல் முக்ராபி பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கடந்த சில வாரங்களாகவே பாலஸ்தீன மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் பள்ளிகளை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இது போன்ற தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் காசாவின் குடிநீர் தேவையில் 90 சதவிகிதம் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. எனவே அங்கு மிகமோசமான சுகாதார நிலை நிலவி வருகிறது என ஐ.நா தெரிவித்திருக்கிறது.
காசவில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பரிசோதித்ததில் அதில் போலீயோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடனடியாக அங்கிருந்து சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐ.நா கூறியிருந்தது. இவ்வளவு பெரிய அபாயம் ஏற்பட்ட பின்னரும் கூட பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்த இனவெறி இஸ்ரேல் முன்வரவில்லை.
ஒருபுறம் இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். மறுபுறம், இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடான நிலைமைகளால் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை விட அதிகமானார் தொற்று நோய்களால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube