டந்த செப்டம்பர் 19ஆம் தேதி, சென்னையில் இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் குமரன் குடில் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரத்தக்கரையுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட அப்பெண்ணின் உடல் பாலியல் தொழிலில் ஈடுபடும் தீபா (30) என்பது தெரியவந்துள்ளது.போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வந்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் தீபாவைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மணிகண்டன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, “நான் ஒரு டேட்டிங் செயலி மூலம் தீபாவை என்னுடன் தனிமையில் இருக்க அழைத்தேன். அவர் என்னுடன் தனிமையில் இருக்க ரூபாய் 6 ஆயிரத்துக்கு ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி இரவு துரைப்பாக்கத்தில் நான் வசித்த வீட்டுக்கு தீபாவை இரவு 9.30 மணிக்கு வரவழைத்து, அவருடன் தனிமையில் இருந்தேன். பின்னர் தீபா என்னிடம், ரூ.12 ஆயிரம் தருமாறு வலியுறுத்தினார். நான் தரமறுத்ததும் எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடன் தனிமையில் இருந்ததை வெளியே சொல்லி விடுவேன் என்று தீபா மிரட்டியதால், அங்கு கிடந்த சுத்தியலால் அவரது தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உடலை எப்படி அப்புறப்படுத்துவதெனத் தெரியாமல் சூட்கேஸில் அடைத்துத் தூக்கியெறிய முடிவெடுத்த போது உடலை முழுமையாக அடைக்க முடியாததால் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து எனது வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்த பகுதியில் வைத்திவிட்டு வந்துவிட்டேன்” என மணிகண்டன் கூறியுள்ளார்.

இந்த சைக்கோ (மணிகண்டன்) தீபாவின் மூளையை வறுத்து சாப்பிட்டதாகவும் செய்திகளில் கூறப்படுகிறது. இவ்வாறு மூளையை வறுத்துச் சாப்பிடும் அளவிற்கு அவனது மனநிலை இருந்துள்ளது மனித விழுமியங்கள் அற்று, ஏன் சொல்லப்போனால் விலங்குகளை விட மோசமான மனநிலையில், அவன் இருந்திருப்பதையே உணர்த்துகிறது.


படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்


தற்போது, பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 26 வயதான பெண்ணின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், அவர் யாரால் கொல்லப்பட்டார், கொலைக்கான பின்னணி என்ன உள்ளிட்ட இந்த வழக்குகள் குறித்து வேறு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த பெண் மேற்கு வங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்ணின் பெயர் மகாலட்சுமி என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்விரு சம்பவங்களும் ஷ்ரத்தா வால்கர் கொலை சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. டெல்லியில், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி அன்று அப்போது 27 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவருடன் லிவ்-இன் உறவிலிருந்த காதலன் அஃப்தாப் என்பவன் கொலை செய்து, 35 துண்டுகளாக அவரது உடலை வெட்டி, அவற்றைக் குடியிருப்புக்கு அருகிலிருந்த காட்டுப் பகுதிகளில் வீசியிருந்தான். சில உடல் பாகங்கள் பிரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஷ்ரத்தா வால்கர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோது சமூகத்தில் ஏற்பட்ட பதற்றம் அதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்ற போது ஏற்படவில்லை. சமூகம் அவற்றை எளிதாகக் கடந்து சென்று விட்டது.

மணிகண்டன் தீபாவை சந்தித்ததும், அப்தாப் ஷ்ரத்தாவை சந்தித்ததும் டேட்டிங் செயலியின் மூலம்தான். இந்த பாலியல் புரோக்கர் செயலிகளை அரசு எந்தவகையிலும் தடை செய்யவில்லை என்பது, இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும். இந்த செயலிகள் மட்டுமல்ல, வீடியோ கேம்கள், ஆபாச பாலியல் வீடியோக்கள் என பலவகைகளில் இந்த சமூகம் நாள்தோறும் சீரழிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் 1990களுக்கு பிறகு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளால் தான் நடக்கிறது. குறிப்பாக சமூகம் முழுவதும் பார்ப்பனிய – ஆணாதிக்க மனநிலை கொண்ட இந்தியாவில் நுகர்வு வெறி கலாச்சாரங்களான ஆபாச சினிமா, மது – கஞ்சா போதை கலாச்சாரம் போன்றவற்றால் அரசால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மது – கஞ்சா போதை சீரழிவு, ஆபாச சினிமா சீரழிவு, பார்ப்பன-ஆணாதிக்கக் கலாச்சாரங்களுக்கு எதிராக மனித விழுமியங்கள் பற்றிய விவாதங்கள் நடத்தப்படவேண்டும். மேலும் மறுகாலனியாக்க கொள்கைகளைத் திட்டமிட்டே சமூகத்தில் பரப்பும் செய்தி ஊடகங்கள், ஆபாச சினிமா போன்றவற்றிற்கு எதிராகவும், இவற்றைத் தடுக்காமல் கட்டிக்காக்கும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும். ஒரு புதிய சமுதாயத்தை நோக்கி முன்னேறுவதே இவையனைத்துக்கும் தீர்வாகும்.


மித்ரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க