செப்டம்பர் 8 ஆம் தேதி நெல்லை ராதாபுரம் அருகே கும்பிளம்பாடு பகுதியில் பா.ஜ.க நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவராகவும், பா.ஜ.க மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வரும் செல்வகுமார் தோட்டத்தில் பெண்கள் வெண்டைக்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் தனியாக வெண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்த 35 வயது பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அங்கிருந்து அலறியடித்துத் தப்பி ஓடி ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் செல்வகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய அவரது தோட்டத்திற்குச் சென்ற போது தலைமறைவாகியுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் செல்வகுமார்

இதேபோன்று, கடந்த 18 ஆம் தேதி சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள மாம்பாக்கத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி இரவு 7 மணி அளவில் அருகிலுள்ள புதர் பகுதிக்கு இயற்கை உபாதைக்காகச் சென்றுள்ளார். அங்கே வந்த மூன்று பேர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து வாயில் துணியை வைத்து அழுத்திக் கொண்டு அங்கிருந்து இழுத்துச் சென்று இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று பேர் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உருட்டுக்கட்டையுடன் வந்த மக்கள் ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்டு ரத்தினமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் 16 வயதேயான இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


படிக்க: ராமர் கோவிலில் பணிபுரியும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இதுதான் ராமராஜ்ஜியம்!


மேலும் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அரசு அன்னை சத்யா ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் அருகிலுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் அடிக்கடி மாயமாவதும் அவர்களை மீட்பதும் தொடர்ந்துள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகத்தினால் சத்ய பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டு மனநல ஆலோசனை வழங்கி வந்துள்ளார். இவர் மாணவிகளுக்கு வகுப்பில் சரியான தொடுதல் (good touch) தவறான தொடுதல் (bad touch) சொல்லிக் கொடுக்கும் போது 15 -17 வயது மாணவிகள் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பாலியல் ரீதியாக அவர் கேட்ட கேள்விகள் சங்கடமாகவும் அசௌகரியமாகவும் இருப்பதாக மாணவிகள் குழந்தைகள் நலக்குழு காப்பாக கண்கனிப்பாளர் வினோதினியிடமும் காப்பாக கண்காணிப்பாளர் சசிகலாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காப்பாக கண்கனிப்பாளர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்ய பிரகாஷ் மீது புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் செப்டம்பர் 19 ஆம் தேதி சத்ய பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பெண்கள் மீதான 10க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னும் அதிகமாக இருக்கும். இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், மறுகாலனியாக்க நுகர்வு வெறியுமே பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலால் பரப்பப்படும் பார்ப்பனிய கொள்கையானது இயற்கையாகவே பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதையே போதிக்கிறது. இந்நிலையில் போதைக் கலாச்சாரமும், பார்ப்பனிய கொள்கையும் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க