கடந்த டிசம்பர் 26, 2025 உடன் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை ஒருவர் கூட போலீசுதுறையால் கைது செய்யப்படவில்லை. விசாரணை அறிக்கை கூடத் தாக்கல் செய்யப்படவில்லை.
ஆனால், போலீசின் கெடுபிடிகளால் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்விற்கே சென்றிருக்கிறார்கள் வேங்கைவயல் கிராம மக்கள்.
ஜூனியர் விகடனுக்கு வேங்கைவயல் கிராம மக்கள் அளித்த பேட்டியில், “எங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. எங்கள் வாழ்க்கையும் நாசமாகிவிட்டது. எங்கள் ஊரில் பெண் எடுக்கவும் மாப்பிள்ளை பார்க்கவும் கூட யாரும் வருவதில்லை. போலீஸ் கெடுபிடிகளால் உறவினர்கள் கூட எங்கள் வீட்டுப் பக்கம் வருவதில்லை. எங்களுக்கு நீதிகூட வேண்டாம்… பரவாயில்லை போகட்டும். என்றைக்கு எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது? இனி எங்களை நிம்மதியாக வாழவிட்டால் போதும். தினமும் அவமானத்தால் கூனிக்குறுகி, குற்றவாளிகள்போல நடத்தப்படும் இந்த நரக வாழ்க்கை இனியும் எங்களுக்கு வேண்டாம்…” என வேதனையைக் கொட்டுகிறார்கள்.
இச்சம்பவம் நடந்தபோதே அரசும் போலீசும் ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக மெத்தனமாகத்தான் செயல்பட்டன. மக்கள் போராட்டங்கள், இயக்கங்கள், கட்சிகளின் நிர்ப்பந்தங்களில் இருந்துதான் டி.எஸ்.பி. ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தொடங்கியது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போதும் போலீசின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை.
மீண்டும் போலீசின் மெத்தனப்போக்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படவே, ஜனவரி 2023-இல் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் இன்றுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை.
இதனையடுத்து, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் மார்ச் 29, 2023-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையானது போலீசின் மந்தகதியிலான விசாரணையை அம்பலப்படுத்தியது. இதைக் கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜூலை 2024-க்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். ஆயினும், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டாரே தவிர, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.
படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!
இது ஒருபுறமிருக்க, வேங்கைவயல் மக்களின் நிலைமையோ வேதனைமிக்கதாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்கி, கொடுமைப்படுத்தி, “எங்களுக்கு நீதியே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சும் அளவிற்கு இந்த அரசு கட்டமைப்பு தனது கோரமுகத்தை அம்மக்களிடம் காட்டியிருக்கிறது.
அப்பகுதியைச் சார்ந்த முருகன் “இந்த வழக்கில் போலீசு குற்றவாளியைக் கண்டுபிடித்தால் பிடிக்கட்டும். இல்லையென்றால் விட்டுவிடட்டும். எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். குற்றவாளிகளை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட எங்களையே தொடர்ந்து குற்றவாளிகளாக்கும் முயற்சிகளை செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் எங்களையே இம்சிக்கிறார்கள். இது எவ்வளவு கொடுமை… நாங்களே மலம் கழித்து, அதை நாங்களே எங்கள் குடிநீரில் அள்ளிப்போட்டு, அதையே நாங்கள் குடிப்போமா… இதை யோசிக்க மாட்டார்களா?
எங்கள் ஊருக்கு வரும் வெளியூர் மக்களையும் தடுத்து ஊரைத் தனிமைப்படுத்துகிறார்கள். சம்பவம் நடந்து இரண்டு வருடங்களாகியும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. முடிந்தால் நீதி வாங்கிக் கொடுங்கள்.. இல்லையா, எங்களைக் கொஞ்சம் நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று ஆற்றாமையோடு கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவரும், மணமேல்குடியில் போலீசாக பணியாற்றி வருபவருமான முரளிராஜா என்பவரை ‘வீடு தருகிறோம், பணம் தருகிறோம், குற்றவாளியாக ஒத்துக்கோ’ என்று சி.பி.சி.ஐ.டி. போலீசு மிரட்டியிருக்கிறது. போலீசின் விசாரணைகளால் நிறைய அவமானங்களைச் சந்தித்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட தலித் மக்கள்.
இந்த அரசும் அதிகாரிகளும் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள்தான், அரசு ஒருபோதும் மக்களுக்கு ஆதரவாக நிற்காது என்பதை வேங்கைவயல் சம்பவம் பொட்டில் அடித்தாற்போல் காட்டுகிறது.
இங்கு பிரச்சினை, இரண்டு ஆண்டுகளாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. தி.மு.க. அரசும் போலீசும் குற்றவாளிகளான ஆதிக்கச் சாதிவெறியர்களை காப்பாற்றி பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கின்றன என்பதேயாகும். ஆதிக்கச் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டே சமூகநீதி அரசு, திராவிட மாடல் அரசு என்று தி.மு.க. சவடால் அடிப்பதெல்லாம் எத்தனை போலித்தனமானது என்பதை வேங்கைவயல் சம்பவம் முகத்தில் அறைந்து உணர்த்துகிறது.
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே தலித் மக்களுக்கு எதிரானதாகத்தான் உள்ளது, செயல்படுகிறது. போர்க்குணமிக்க போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே தலித் மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க முடியும். அதனூடாக, தலித் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை அதிகாரத்தையும் வழங்கும் உண்மையான ஜனநாயகக் குடியரசுக்காக போராட வேண்டும். ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது.
செய்தி உதவி: ஜூனியர் விகடன்
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram