வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் ஏப்ரல் 3 அதிகாலையிலும் மாநிலங்கள் அவையில் ஏப்ரல் 4 அதிகாலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்கிறது. இம்மசோதா ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று விட்டது.
முன்னதாக, ஆகஸ்ட் 8, 2024 அன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை வகிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கூட்டுக்குழு ஜனவரி 31, 2025 அன்று தனது அறிக்கையை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. கூட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கருத்துகள் பெரும்பான்மை பெறவில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டுக் குழு அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய மசோதா ஏப்ரல் 2 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இம்மசோதா குறித்துப் பேசிய அமித்ஷா, 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் 2013 ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால் தற்போது இச்சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றும் 2013 ஆம் ஆண்டு திருத்தத்திற்கு பின்பு வக்ஃப் சொத்துகள் இரட்டிப்பாகி உள்ளன என்றும் கூறினார்.
மேலும், “வக்ஃப் வாரிய சொத்துகளின் தவறான நிர்வாகத்தைத் தடுப்பதையும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் இம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.
ஆனால், 2013 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தை பா.ஜ.க-வும் ஆதரித்திருந்தது. அப்போது பா.ஜ.க எம்.பி-ஆக இருந்த ஷாநவாஸ் ஹுசைன், வக்ஃப் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை இச்சட்டத் திருத்தம் குறைக்கும் என்று பாராட்டிப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
படிக்க: காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!
அவ்வாறெனில், இந்த பாசிச கும்பலின் நோக்கம் என்ன?
இத்திருத்தச் சட்டத்தில் உள்ள சில திருத்தங்களை நோக்கினாலே அதனைப் புரிந்து கொள்ளலாம்.
வக்ஃப்-க்கு சொத்துகளை இஸ்லாமியர்கள் மட்டுமே தானம் செய்ய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் சொத்துகளை வழங்குபவர் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது நயவஞ்சகமானதாகும். ஒரு தனிநபர் (எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்) தனது சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்பது இந்திய அரசியலமைப்பு சாசனம் அங்கீகரித்துள்ள உரிமையாகும்.
முகமது கோரி காலத்திலிருந்தே இந்தியாவில் வக்ஃப் சொத்துகள் இருந்து வந்துள்ளன. (இதை அமித்ஷாவே ஒப்புக் கொள்கிறார்). இவற்றில் பலவற்றிற்கு உரிய ஆவணங்கள் கிடையாது. பயன்பாட்டின் அடிப்படையில் “வக்ஃப் பயனர்” (waqf by user) என்ற விதி மூலம் இவை வக்ஃப் சொத்துகளாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது “வக்ஃப் பயனர்” விதி நீக்கப்பட்டு இருப்பதானது, பல மசூதிகள் மற்றும் இடுகாடுகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இஸ்லாமியர்களின் இடுகாடுகள் கூட ‘பிரச்சினைக்குரியவை’ என்று கூறப்பட்டு பறிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, புதிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் உள்ள வக்ஃப் பயனர் சொத்துக்கள் இதனால் பாதிக்கப்படாது என்று கூறியுள்ளார். ஆனால் அச்சொத்துகள் ஏற்கெனவே பிரச்சனைக்குரியவையாகவோ அரசு நிலமாகவோ இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதன் பொருள் என்ன? வக்ஃப் நிலங்கள் பல அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை “வக்ஃப் பயனர்” விதி மூலம் இனி மீட்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசின் ஆக்கிரமிப்புக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
படிக்க: பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் யோகி அரசு!
மோடி – அமித்ஷா உள்ளிட்ட சங்கி கும்பல், அரசு நிலங்களை வக்ஃப் வாரியங்கள் ஆக்கிரமித்துள்ளதாக பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், உண்மையில் அரசின் சொத்துகளையா வக்ஃப் வாரியங்கள் ஆக்கிரமித்துள்ளன? 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி (Sachar Committee), பல வக்ஃப் சொத்துகள் அரசாங்கத்தாலும் தனிநபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், ஒரு சொத்து அரசினுடையதா அல்லது வக்ஃப் சொத்தா என்று கேள்வி எழுந்தால், மாவட்ட ஆட்சியர் அல்லது அவரைவிட உயர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் இது குறித்து விசாரித்து முடிவு எடுப்பார் என்று இந்த புதிய திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வக்ஃப் தீர்ப்பாயத்திடம் இருந்த அதிகாரம் தற்போது அரசு தரப்பைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகளை மீட்பதற்காக வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் தற்போது திட்டமிட்டே குறைக்கப்பட்டுள்ளன. அரசு சொத்தா வக்ஃப் சொத்தா என்பதை அரசு தரப்பை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ‘பாரபட்சமின்றி’ விசாரித்து முடிவுசெய்வாராம்.
பொதுவாக, நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தால் நில உரிமையாளர் 12 ஆண்டுகளுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரம்பு சட்டம் (Limitation Act) கூறுகிறது. இருப்பினும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக அவை வரம்பு சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தத் திருத்தத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் அச்சொத்தின் உரிமையாளர்களாக முடியும்.
மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களிலும் இரண்டு இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அளவில் இருக்கின்ற இந்து கோவில்களின் வாரியங்களில் இஸ்லாமியரையோ இந்து அல்லாத பிற மதத்தினரையோ அனுமதிப்பார்களா? அந்த வாரியங்களில் எல்லாம் பன்முகத்தன்மை தேவை இல்லையா? இந்து கோவில்களின் வாரியத்திலும் சீக்கிய குருத்வாரா வாரியத்திலும் அந்தந்த மதத்தினர் மட்டுமே இருக்கும்போது வக்ஃபு வாரியத்தில் மட்டும் ஏன் இஸ்லாமியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட வேண்டும்.
படிக்க: நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!
மேற்குறிப்பிட்ட திருத்தங்கள் எல்லாம் வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, அமித்ஷா கூறுவது போல் வக்ஃப் சொத்துகள் நிர்வகிக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக அல்ல.
ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கொண்டிருக்காத பாசிச பா.ஜ.க, இஸ்லாமியர்களின் நலன்களுக்காக ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொள்கிறது என்றால் அதை பச்சைக் குழந்தை கூட நம்பாது.
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களின் நில உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதே இச்சட்டத் திருத்தத்தின் நோக்கம். அரசு அதிகாரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரித்து அவற்றை காவி – கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகப் பயன்படுத்துவதே இவர்களின் திட்டம்.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. அசாதுதீன் ஓவைசி மற்றும் காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் ஆகியோர் தனித்தனியே வழக்குத் தொடுத்தும் உள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 237 வழக்குகள் இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, சட்டப் போராட்டம் என்பதை மட்டும் நம்பியிராமல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை விட வீரியமிக்க போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அதுதான் பாசிச கும்பலைப் பின்வாங்க வைக்கும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram