தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்காக ஐதராபாத் அரசுப் பல்கலைக்கழகத்திலுள்ள 400 ஏக்கர் காட்டுப் பகுதியை ஏலம் விடப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் தெலங்கானா அரசு அறிவித்தது.
ஐதராபாத்தில் எஞ்சியுள்ள நகர்ப்புற காடுகளில் ஒன்று ”காஞ்சா கச்சிபௌலி” (Kancha Gachibowli). இது 700 தாவரவகைகள், பழைமையான மரங்கள், 220 வகை பறவைகள் மட்டுமல்லாது அரியவகை மான், மயில், பாம்பு, தவளை மற்றும் உலகின் வேறு எந்த பகுதியிலும் காணப்படாத மரத்தண்டு சிலந்தி மற்றும் ஆமை வாழும் பல்லுயிர்த் தன்மை வாய்ந்த பகுதியாகும். இங்குள்ள எருமை ஏரி, மயில் ஏரி மற்றும் வெள்ளை பாறை, மஷ்ரூம் பாறை போன்றவை அப்பகுதியின் அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன.
இதுபோன்ற காடுகள் தட்ப வெப்பநிலையைக் குறைத்து ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலம் நுண்காலநிலையை (microclimate) சீராக கட்டுப்படுத்துகின்றன. இதுவரை சுமார் 400 மரங்கள் வெட்டப்பட்டு 100 ஏக்கர் காட்டுப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் முக்கியத்துவமிக்க பகுதியை அழிப்பதற்கு நிலவிய எதிர்ப்பையும் மீறி கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் ஜே.சி.பி மூலம் மரங்களை வெட்டும் பணியை தெலங்கானா அரசு தொடங்கியது. இரவு நேரத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் அலறல் சத்தத்தை கேட்டதாகக் கூறிய மாணவர்கள் மறுநாள் வளாகத்திற்குள் ஜே.சி.பி கருவிகள் மற்றும் போலீசார் இருப்பதைக் கண்டவுடனே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 53 மாணவர்களை கைது செய்தது போலீசு. அமைதியான முறையில் போராடிய மாணவர்களை கைது செய்த கோலீசை கண்டித்தும் காடழிப்பை எதிர்த்தும் திரளான பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த பணிகளை மேற்கொள்வதற்கு முன்னரே பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் நடைபெறும் பகுதிக்கு எல்லை வகுத்துள்ளோம் என்று தெலங்கானா அரசின் தொழிற்சாலை கட்டமைப்புக் கழகம் (TGIIC) தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள பல்கலைக்கழக பதிவாளர், இதுவரை அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இந்த பணிகள் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனை கடுமையாக எதிர்க்கும் மாணவர்கள், ”முன்தகவல் தெரிவிக்கவில்லை எனில் எதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் 50 ஜே.சி.பி-க்களை அனுமதித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதை விட பதிவாளருக்கு வேறு என்ன முக்கியப் பணி இருந்துவிடப் போகிறது” என்று மாணவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதனையடுத்து ஏப்ரல் 1 அன்று ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கம் (UoHSU) இன்னும் சில மாணவர் சங்கங்களுடன் இணைந்து வகுப்புக்களைப் புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தனர்.
- போலீசு மற்றும் அனைத்து ஜே.சி.பி வாகனங்களையும் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றி காட்டுப் பகுதி ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
- 400 ஏக்கர் காட்டு நிலத்தை ஆக்கிரமித்து தொழிற்பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
- இந்த நிலத்தை பல்கலைக்கழகத்தின் பெயரில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து எழுத்துப்பூர்வ உறுதியளிக்க வேண்டும்.
- போலீசின் பிடியில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்
- இந்த நிலத்தகராறு குறித்து விசாரிக்கும் நிர்வாகக் கமிட்டி கூட்டத்தின் கூட்ட அறிக்கையை (minutes of meeting) வெளியிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டதுடன் மாணவர்கள் விடுதிக்குச் சென்று ரெய்டு என்ற பெயரில் அராஜகம் செய்துள்ளது தெலங்கானா போலீசு.
தனித் தெலங்கானாவிற்கான போராட்டம் வலுப்பெற்றபோது, 1974ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஐதராபாத் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதற்காக 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. எனினும் நிலத்திற்கான உரிமம் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படாமல் அரசின் பெயரிலேயே இருந்து வந்துள்ளது. கல்வி அல்லாத பிற செயல்களுக்கு நிலம் பயன்படுத்தப்பட்டால் நிர்வாகத்திடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படும் என்ற ஒப்பந்தத்துடனே இந்த நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை மீறி தொடக்கத்திலிருந்தே பிற பணிகளுக்காக நிலத்தை ஆக்கிரமித்து வந்துள்ளது அரசு தான். குறிப்பாக டாடா ஆராய்ச்சி நிலையம், விளையாட்டு மைதானங்கள், SBI உள்ளிட்ட பல திட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர்களை கையகப்படுத்தியுள்ளது. தற்போது சுமார் 1,600 ஏக்கர் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகிறது.
படிக்க: வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!
“நிலத்தின் உரிமம் அரசிடம் உள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காக பல்கலைக்கழக நிலத்தை எடுக்கவில்லை. மேலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசுக்கு 15,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் ஆயிரக்காணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்” என்பது அரசு தரப்பு வாதமாகும். நிலத்தின் உரிமை பல்கலைக்கழகத்திடம் இல்லை என்றாலும் இத்தனை வருடங்களாக நீடித்து வந்த பாரம்பரிய, சுற்றுச்சூழல் வளமிக்க தளம், வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணவர்கள் உறுதியாக உள்ளனர். இதுமட்டுமின்றி விளிம்புநிலையிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த அரசுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எதிர்கால மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போலீசின் அடக்குமுறையையும் தாண்டி மாணவர்கள் தொடர்ந்து போராடியதால் அரசிற்கு நெருக்கடி அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை தானாக முன்வந்து (suo moto) விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம். அதன்படி கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். மேலும் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் படவில்லையெனில், மீண்டும் அனைத்து மாணவர்களையும் திரட்டி உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மாணவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிலத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல் என்பது ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் மீதான தாக்குதலாகும். வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனிற்காக இயற்கையையும் கல்வியையும் சிதைக்கும் நடவடிக்கையே. இதனை எதிர்த்து ஐதரபாத் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த வீரம்செறிந்த போராட்டமானது இந்திய இளைஞர் சமுதாயத்திற்கே முன்னுதாரணமிக்கதாகும்.
தன் கண்முன்னே நடக்கும் அநீதியை கடந்துசெல்லாமல், அதற்கெதிராக களம் காண வேண்டும் என்ற மாணவர்களின் போர்க்குணத்தை நாம் வரித்துக் கொண்டு பறிபோன உரிமைகளை மீட்க களத்தில் இறங்குவோமாக!
மக்கள் அதிகாரம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram