2021-இல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்புவரை தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக வாய்ச்சவடால் அடித்துவந்த தி.மு.க. அரசு, தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ‘தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்துவோம்’ என்று பல்டி அடித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு திட்டங்களை மறைமுகமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் யு.டி.ஐ.எஸ்.இ. (UDISE – Unified District Information System for Education) என்ற ஒன்றிய அரசின் திட்டத்திற்காக பள்ளிக்கல்வித்துறை குறித்த தகவல்களை திரட்டும் பணியைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது தி.மு.க. அரசு. இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை குறித்த தகவல்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து அதன் மூலம் அரசுப் பள்ளிக் கட்டமைப்பையே ஒழித்துக்கட்டக்கூடிய இந்த தகவல் திரட்டலானது, முன்னர் தமிழ்நாடு அரசின் “எமிஸ்” திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது ஓரங்கட்டப்பட்டு நேரடியாக ஒன்றிய அரசின் யு.டி.ஐ.எஸ்.இ. திட்டத்தின் கீழ் தகவல் திரட்டப்படுவது இன்னும் ஆபத்தானதாகும்.
ஏற்கெனவே, அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மாநில அளவில் அடையாள எண் கொடுக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருக்கும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் (National ID) தேசிய அளவில் புதிய எண்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோடி அரசுக்கு தாரைவார்ப்பதை ஒத்த இந்நடவடிக்கையின் மூலம் தி.மு.க. அரசு வலியுறுத்திவரும் மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் அதுவே காலில் போட்டு மிதித்துள்ளது.
ஏற்கெனவே புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசுகளிடம் இனி அனுமதிக் கோர வேண்டியதில்லை என மோடி அரசு அறிவித்திருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளை பாசிச மோடி அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் விதமாகவே தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன்மூலம், ஒரே நாடு ஒரே கல்வி என்ற பாசிச சதித்திட்டத்திற்கு துணைபோகிறது.
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram