நான் டெல்லியில் ஒரு படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்தேன். இரவு நேர படப்பிடிப்புகள் இருந்ததால், காலை நேரம் ஓய்வாக இருந்தது. டெல்லியில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது… புதிய மாநில அரசு ஆட்சிக்கு வந்திருந்தது… நாடு முழுவதிலுமிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலைநகரில் கூடியிருந்தனர்… வக்ஃப் திருத்த மசோதாவால் (தற்போது சட்டமாகி விட்டது) நாடாளுமன்றம் கொதித்துப் போயிருந்தது.
அப்போது நான் உமர் காலித்தை நினைத்தேன். அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகப் போகிறது. திகார் சிறைக்குள் இந்தக் கடுமையான வெப்பத்தை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்று தோன்றியது. நான் அவரது பெற்றோரை நினைத்தேன். நான் அவர்களைச் சந்திக்க அவர்களின் வீட்டுக்குச் சென்றேன்.
முதலில், உங்களுக்கு உமர் காலித்தை தெரியுமா, ஒரு ‘தேச விரோதி? அதற்கு முன், தேச விரோதி யார் என்பதைப் புரிந்துகொள்வோமா? அதைப் புரிந்துக் கொள்ளாமல், ஒரு தேச விரோதியையும் ஒரு தேசபக்தரையும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
யார் தேச விரோதி?
இதைப் புரிந்துகொள்ள கடந்த காலத்திற்குள் அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டியதில்லை. சமீபத்திய வரலாற்றிலிருந்தே ஒரு சான்றை எடுத்துக்கொள்வோம்.
மகாத்மா காந்தி, அகிம்சை வழியில் நாட்டை ஒன்றிணைத்தவர்; எப்போதும் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர். தேசம் என்பது வரைபடம் அல்ல, அதில் வாழும் மக்கள் என்று அவர் நம்பினார். நாட்டின் அனைத்து மக்களும் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர்கள் எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும், எந்தச் சாதியில் பிறந்தாலும், அந்தத் தேசம் அவர்களைச் சகோதரத்துவ உணர்வால் பிணைத்துள்ளது என்று அவர் நம்பினார். முரண்பாடாக, பிரிட்டிஷ் இந்தியாவில் உயிர் பிழைத்த இந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் இந்தக் கருத்துகளுக்காகவே நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார்.
நம் நாட்டில், பா.ஜ.க கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, காந்தி தேச விரோதியாகவும், கோட்சே தேசபக்தராகவும் மாறிவிட்டனர். மக்களைப் பிளவுப்படுத்தி மத வெறுப்பை விதைப்பதை வரலாற்று நோக்கமாகக் கொண்ட இவர்கள், தங்களை ‘தேசபக்தர்களாக’ காட்டிக் கொள்கிறார்கள். மேலும், தங்களைத் தாங்களே தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், தங்களின் மத வெறுப்பு அரசியலுக்கு எதிராக நிற்பவர்களை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துகிறார்கள். இவ்வாறுதான் நம் காலத்தின் துடிப்பான பிரகாசமான உள்ளம் கொண்ட இளைஞர் உமர் காலித் தேச விரோதியாக மாற்றப்பட்டார்.
உமர் காலித் செய்த குற்றம் என்ன? பன்முகத்தன்மைதான் நாட்டின் இதயம் என்றும் அரசியலமைப்பின் ஆன்மா என்றும் அவர் நம்பினார்; அரசியலமைப்பை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராகப் போராடினார்; சிறுபான்மையின மக்கள் மீது அடுக்குமுறை செலுத்தும் ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வியெழுப்பினார்; மத வெறுப்பைப் பரப்புவர்களுக்கும், அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி உயிர்களைப் பலிகொடுப்பவர்களுக்கும் எதிராக தெருக்களில் இறங்கி போராடினார்.
இறந்த மீன்கள் நீரோட்டத்தின் போக்கில் சென்றுவிடும். நீரோட்டத்திற்கு எதிராக நீந்த வேண்டுமெனில், மீன்கள் உமர் காலித் போல் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரம் என்ற வெள்ளத்திற்கு எதிராக அவர் அச்சமின்றி நீந்துகிறார். காந்தியத்தின் உண்மையான வாரிசிடமிருந்து இதைவிடக் குறைவாக எதிர்பார்க்க முடியுமா? “இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை” என்று மாவீரன் பகத் சிங் கூறியிருந்தார். உமர் காலித் அந்த மரபைதான் தூக்கிப்பிடிக்கிறார்.
படிக்க: உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை
மாணவர் தலைவராக இருந்த உமர் காலித், குடியுரிமை (திருத்த) சட்டம் (CAA) 2019-யை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார். இந்த சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தி அதன் சகோதரத்துவத்தை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டது. பிப்ரவரி 2020-இல், இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை மறுப்பதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. அமைதியாக ஜனநாயாகமாக நடந்த இப்போராட்டத்தில் இச்சட்டத்தை ஆதரிக்கும் சில சக்திகள் உள்நுழைந்து போராட்டத்தை கலவரமாக மாற்றின. இந்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.
வன்முறையைத் தூண்டிய ஆளும் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால், ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்களுக்காக போராடிய உமர் காலித், வன்முறையைத் தூண்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA)-கீழ் கைது செய்யப்பட்டார்.
டெல்லி அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் இரண்டும் அவரது ஜாமீன் மனுக்களை நிராகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்காமல், விசாரணை கூட நடத்தாமல் ஐந்து ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சிறையில் அடைப்பது சட்டவிரோதமானது மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது.
“உச்சநீதிமன்றத்தில், உமர் காலித் நிரபராதி என்பதை நிரூபிக்க எங்களுக்கு இருபது நிமிட விசாரணை மட்டுமே போதும்” என்று உமர் காலித்தின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தால் 2023 முதல் தற்போதுவரை அந்த 20 நிமிடங்களை கூட ஒதுக்க முடியவில்லை.
உமரின் வீட்டிற்குச் செல்லும் வழியில், அவரது நண்பர்கள் சிலர் என்னுடன் சேர்ந்துக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரு வாரமும் சிறையில் உமரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை நான் அறிந்தேன். “உங்கள் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து நீங்கள் எவ்வாறு இதற்கு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்,” என்று நான் கேட்டேன்.
உமரின் நண்பர்களில் ஒருவர், சிறையில் இருந்த அமீர் என்பவரின் கதையை என்னிடம் கூறினார். அமீரின் சிறைவாசத்தின்போது முதல் மூன்று மாதங்களில், அவரது பெற்றோரும் நண்பர்களும் தொடர்ந்து அவரைச் சந்தித்து வந்ததனர். ஆனால், வறுமை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் காரணமாக அவர்களால் தொடர்ந்து அமீரைச் சந்திக்க முடியவில்லை. அவ்வாறு சந்திக்காத மாதங்களில் வலுவாக இருந்த அமீரின் உடல்நிலை மெதுவாக மோசமடையத் தொடங்கியது. ஒப்பீட்டளவில் எளிதாக ஜாமீன் பெற முடிந்திருந்தாலும், அமீர் பத்து ஆண்டுகள் சிறையில் வாடினார்.
அன்புக்குரியவர்களைப் பிரிவதால் ஏற்படும் வலி ஒருபுறம் இருக்க, சிறைச்சாலை ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைத்து, மனித உணர்வை உடைத்துவிடும் என்றனர்.
அமீரின் இந்த துயர அனுபவம், உமரின் நண்பர்களுக்கு ஒவ்வொரு வாரமும் உமர் காலித்தை சிறையில் சென்று சந்திக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தியுள்ளது. உமரின் நண்பர்கள் மாறி மாறி அவரைச் சந்தித்து, “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் தோழரை இரக்கமற்ற நிலையில் இருந்து பாதுகாக்கும் இந்த இளைஞர்களைப் பார்த்து நான் பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.
உமரின் தாயார் என்னை அன்புடன் வரவேற்றார். வக்ஃப் (திருத்த) மசோதா மீதான விவாதத்திற்குச் சென்றிருந்த அவரது தந்தை விரைவில் திரும்புவார் என்றார்.
மகன் இல்லாத வேதனை அவரின் கண்களில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், அவர் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார். “என் மகன் விரைவில் விடுதலை பெறுவான். நீதித்துறையின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது,” என்று அவர் எங்களுக்கு ஆறுதல் கூற, அவரின் வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தன. இதற்கிடையில், திரும்பி வந்த உமரின் தந்தை, தேநீர் தயாரித்து எங்களுக்கு பரிமாறி எங்களுடன் பேச அமர்ந்தார்.
நான், “உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவரோடு இருக்கிறோம்” என்றேன்.
அதற்கு அவர் “அவன் எதற்காகப் போராடி சிறைக்குச் சென்றான் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்களும் அவனுக்கு உறுதுனையாக இருப்போம்” என்றார். நான் நெகிழ்ந்து போனேன்.
உமரின் நண்பர்களில் ஒருவர், உமரின் தந்தையிடம், “பாபா, உமர் ஜாமீனில் வெளியே வந்ததும், அவரை பிரகாஷ் சாருடன் தென்னிந்தியாவுக்கு அனுப்பி விடுவோம். அவர் அங்கே பாதுகாப்பாக இருப்பார்” என்றார்.
உமரின் தந்தை கடுமையாகப் பார்த்து, “அவர் போராடுவதற்கான காரணம் இங்கு டெல்லியில்தான் இருக்கிறது. ஏன்? வேறு எங்கோ சென்று அமைதியாக இருக்க வேண்டும்?” என்று பதிலளித்தார்.
அவ்வளவுதான்.
போராட்டம்தான் நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கான சான்று. கண்ணியத்துடன் வாழ நாம் போராட வேண்டும். நடைப்பிணமாக வாழ்வதில் என்ன பயன்?
உமர் காலித்தும் அவரது பெற்றோரும் உண்மையான தேசபக்தர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவது உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டுமல்ல. ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையும் வாடுகிறது; நமது கண்ணியத்திற்கான உரிமை வாடுகிறது; இவற்றை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்புச் சட்டமும் வாடுகிறது.
– பிரகாஷ் ராஜ்
மொழிபெயர்ப்பு: அகதா
நன்றி: THE HINDU

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram