ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு எதிராக கர்நாடகத்தில் செயல்பட்டு வரும், பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பு இயக்கமான ”எழு கர்நாடகா” சார்பாக, தாவணகரே என்ற இடத்தில் ஏப்ரல் 26 அன்று மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
”அரசியலமைப்பின் பாதுகாவலர்கள்” என்ற தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிக்னேஷ் மேவானி, மேதா பட்கர், பொருளாதார ஆய்வாளர் பரகலா பிரபாகர் உள்ளிட்ட நாடு தழுவிய அளவிலான சமூக செயற்பாட்டாளர்களும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலித் இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள், பெண்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள் என ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு தளங்களில் செயல்படுபவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி கர்நாடகாவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஏற்கெனவே 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன்பு 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் எழு கர்நாடகா ஒருங்கிணைப்பு இயக்கமானது, பி.ஜே.பி-க்கு எதிராக கள வேலைகளை விரிந்த அளவில் ஒருங்கிணைத்து எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் எடுப்பதில் தீவிரமாக இல்லாத இக்காலகட்டத்தில், ஏப்ரல் 26 அன்று தாவணகரேவில் இந்நிகழ்வை ”எழு கர்நாடகா” ஒருங்கிணைத்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.
படிக்க: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு
அரசியலமைப்பில் உள்ள பெயரளவிலான ஜனநாயக விழுமியங்களையும் பாசிச கும்பல் தகர்த்தெறிந்து விட்டு, இந்து ராஷ்டிரத்திற்கான கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். அதேசமயம், அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் ஜனநாயக இயக்கங்களை, மக்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக பாசிச கும்பலை வீழ்த்தி விட முடியுமா என்பது பரிசீலனைக்குரியது.
ஏற்கெனவே உள்ள அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்களில் இருந்துதான் பாசிசமானது இந்தியாவில் வேர்விட்டு வளர்ந்துள்ளது என்பது முக்கியமானதாகும். அந்தவகையில் பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான அரசியல், பொருளாதார மாற்றை முன்வைத்து, அதனடிப்படையில் ஜனநாயக இயக்கங்களையும், மக்களையும் திரட்ட வேண்டியது அவசியமானதாகும்.
அந்த வகையில், “எழு கர்நாடகா”-வின் இத்தகைய தீவிரமான முன்னெடுப்புகள், ஒரு அரசியல், பொருளாதார மாற்றை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை தோழமையுணர்வுடன் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்பதற்காக உணர்வுப்பூர்வமாகச் செயல்படும் ஜனநாயக சக்திகள் மத்தியில், அரசியல், பொருளாதார மாற்றை முன்வைத்து தீவிரமான விவாதங்களை நாடு தழுவிய அளவில் கட்டமைத்து எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram