04.05.2025
பத்திரிகை செய்தி
மக்கள் அதிகாரக் கழகத்தின் முதலாவது தலைமை குழு மற்றும் செயற்குழு கூட்டம் மே 3 மற்றும் 4 தேதிகளில் உற்சாகமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏப்ரல் 15 மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டிற்கு பிறகான முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதத்தை” ஆயிரக்கணக்கில் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான மைய இயக்கத்தை மே, ஜூன் மாதங்களில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள் பின்வருமாறு:
- கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் அதிகாரக் கழகத்தின் அமைப்பு மாநாடு மற்றும் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வருகை தந்து மக்கள் அதிகார கழகத்தின் கடந்த மூன்று ஆண்டுகால பாசிச எதிர்ப்புப் பணிகளை பாராட்டியும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைமை குழு மற்றும் செயற்குழுவை வாழ்த்தியும் பேசிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பல்வேறு வகையில் ஆதரவு கொடுத்த பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கும் தோழர்களுக்கும் மக்கள் அதிகாரத்தின் தலைமை குழு மற்றும் செயற்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- வருகின்ற மே 9-ஆம் தேதியானது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை வீழ்த்திய மாபெரும் சோசலிச படையின் 80-ஆம் ஆண்டு ஆண்டு தினமாகும். பாசிச சக்திகளை கம்யூனிச சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுகின்ற செம்படை தான் வீழ்த்தும் என்பதை உணர்த்திய கோடிக்கணக்கான சோவியத் மக்களுக்கும் பாசிச அச்சுறுத்தலில் இருந்து உலகை காப்பாற்றிய பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் ஸ்டாலின் அவர்களுக்கும் மக்கள் அதிகாரக் கழகம் செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
- பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மோடி அரசாங்கத்திற்கு தான் உள்ளது. ஆனால், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையோ, பாதிக்கப்பட்ட இடத்திற்கோ இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவோ செல்லாமல் நேரடியாக பீகார் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. “சிந்து நதியை தடுப்போம்” என போர் வெறியை கிளப்புவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை கிளப்பி கலவரத்திற்கு வித்திடும் பாசிச மோடி அரசை மக்கள் அதிகார கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- தண்டகாரன்யா பகுதியில் கனிம வளங்களை கொள்ளையடித்து அதானி, அம்பானி கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்க்க பழங்குடி மக்கள் மீதும் மாவோயிஸ்டு கட்சி தோழர்கள் மீதும் ராணுவத்தைக் கொண்டு படுகொலை நடத்தி வருகிறது பாசிச மோடி அரசு. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அப்பகுதியில் இருந்து ராணுவப் படைகளை வெளியேற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களை எவ்வித காரணமுமின்றி நிறுத்தி வைத்த பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என். ரவியின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகம் பாராட்டுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டை கூட்டிய ஆர்.என். ரவியை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் ஆர்.என். ரவியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதுடன் ஆளுநர் முறையை ஒழித்துக் கட்ட மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ந்து போராடும்.
- தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தனது அண்ணனை காப்பாற்ற போராடிய சகோதரி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அப்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய போலீசார் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
- மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் அவர்களை அலட்சியமாக பேசிய அமைச்சர் ரகுபதியை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
- சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஆழ்கடல் பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஒன்றிய அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இத்திட்டங்களை திரும்பப் பெற கோருகிறது.
- திருப்பரங்குன்றத்தில் மதவெறியை கிளப்பி கலவரம் செய்ய முன்னோட்டமாக ஜூன் 22 ஆம் தேதி “முருக பக்தர்கள் மாநாடு” என்ற பெயரில் இந்து முன்னணி மாநாடு நடத்த இருக்கிறது. இந்து முன்னணி கும்பலை தடை செய்து அதன் நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது.
- தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதி வெறி நிகழ்வுகளை உருவாக்கி வரும் வன்னியர் சங்கமானது மே 11-இல் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு விழா என்ற பெயரில் நடத்துகின்ற சாதி வெறி மாநாட்டினை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
- கேரளா மக்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி விழிஞ்சம் துறைமுகம் மோடியால் திறக்கப்பட்டது. பாசிச எதிர்ப்பு காலமான இச்சூழலில், அதானி கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் கேரள சி.பி.எம் அரசாங்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் அதிகார கழகத் தோழர் ஜெயராமன் உள்ளிட்ட மகத்தான தியாகிகளுக்கு மக்கள் அதிகாரக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது. மேலும், ஸ்டெர்லைட்டை மூட தனி சட்டம் இயற்ற தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு அதை இதுநாள் வரையில் நிறைவேற்றவில்லை; போராடியவர்களை சுட்டுக்கொன்ற போலீசுக்கு தண்டனை வழங்கவில்லை. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் மக்களை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கவும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கவும் மக்கள் அதிகாரக் கழகம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அனல் மின் நிலைய நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிப்பதோடு அத்தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை நிர்வாகம் உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram