உலக செவிலியர் தினமான மே 12 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு செவிலியர்கள் தினம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
ஆனால் கொண்டாடும் நிலையில் இல்லாத செவிலியர்களோ மே 12 அன்று ஒருநாள் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 26.4.2025 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் 3வது மாநில மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி உலக செவிலியர் தினமான 12.5.2025 அன்று கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வதுடன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கைகளை அனுப்பினர். மேலும் எதிர்வரும் அனைத்து போராட்டங்களிலும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க அணிதிரள வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் செவிலியர்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில் மே 12 அன்று கோரிக்கைகளுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
செவிலியர்களின் கோரிக்கைகள்:
- திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.
- எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
- வெளிப்படையான பணியிட மாற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
- செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப NMC மற்றும் IPHS பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.
- பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேல் படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
- கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. மூலம் பணி நியமனம் பெற்ற அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
- செவிலியர்களுக்கு 7, 14, 20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்.
- அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும்.
- கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்பி 8 மணி நேர பணியினை உறுதி செய்திட வேண்டும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர தன்மையுடைய செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
- அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டேடா எண்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
- அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும்.
- மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ளது போல் செவிலியர் பதவி பெயரை செவிலியர் அலுவலர் (Nursing Officer) என்று மாற்றிட வேண்டும்.
- லாலி சீமாட்டி செவிலியர் காப்பகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- அரசு செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள செவிலியர் போதகர் நிலை-2 காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
- அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.
- பொதுச் சுகாதாரத் துறையில் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பழிவாங்கும் மாற்றுப் பணி ஆணைகளைக் கைவிட வேண்டும்.
- செவிலியர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஒரே விதமான சீருடை வழங்க வேண்டும்.
- காலம் முறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் அனைவரையும் காலதாமதமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும்.
- 2 வருடங்கள் பணி முடித்த மாற்றுத்திறனாளி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- உயர்கல்விக்காக பணி விடுவிப்பு செய்யப்பட்ட செவிலியர்களை கல்வி ஆண்டு முடிந்த பின்பு அவர்கள் பணி செய்த இடத்திலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
எதிர்வரும் போராட்ட இயக்கங்கள் – தீர்மானம் நிறைவேற்றம்:
- 20.5.2025 அன்று பழைய ஓய்வூதிய திட்டம், பணிப்பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கு பெற வேண்டும்.
- 26.6.2025 அன்று சென்னையில் ஒரு நாள் (24 மணி நேர) தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
- 17.7.2025 அன்று சென்னை DMS அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு மற்றும் மனு வழங்குதல் நடைபெறும்.
செவிலியர்களின் இந்த கோரிக்கைகளுக்கு மக்கள் அதிகாரக் கழகம் (திருநெல்வேலி- தூத்துக்குடி) ஆதரவளிப்பதுடன், அவர்களது அனைத்துப் போராட்டங்களுக்கும் துணைநிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜக எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று கனவு கண்டுவருகிறது திமுக. எனினும் திமுக ஆட்சி செய்த இந்த 4 வருடங்களும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நமது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக-வை நிர்ப்பந்திக்கும் வகையிலான களப்போராட்டங்களைக் கட்டியமைக்கும் போது மட்டுமே அவை நிறைவேற்றப்படும் என்பதே நிதர்சனம்.
மேலும் அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. திமுக-வை நிர்ப்பந்திப்பதற்கும் கோரிக்கைகளை ஏற்றாக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளுவதற்கும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து ஒருங்கிணைந்த போராட்டங்களைக் கட்டியமைப்பது அவசியமாகும். இது நமது ஒற்றுமையை நிரூபிப்பதுடன் நமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதையும் உறுதிசெய்யும்.
அந்த வகையில் தங்களது கோரிக்கைகளைப் போராடி வென்றெடுக்க தீர்மானித்துள்ள செவிலியர்கள் சங்கத்திற்கு புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் அனைவரும் துணைநிற்போம்!
செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும்!
மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டம்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram