நெதர்லாந்து: இஸ்ரேலை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் பேரணி

இஸ்ரேல் உடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிராக நெதர்லாந்து அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கோரி மே 18 அன்று ஹேக் (The Hague) நகரில் இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெற்ற பேரணி நடைபெற்றது.

கடந்த இருபது ஆண்டுகளில் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இது என்று கூறப்படுகிறது.

“(இனப்படுகொலை) போர் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற எதையும் நாங்கள் பார்த்ததில்லை. அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் நெதர்லாந்து முழுவதிலுமிருந்து வந்துள்ளனர்,” என்று அல் ஜசீரா ஆங்கில நிருபர் ஸ்டெப் வாசென் கூறினார்.

சிவப்பு ஆடைகளை அணிந்த போராட்டக்காரர்கள், அரசு இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அடையாளப்படுத்தும் விதமாக “சிவப்புக் கோட்டை” (red line) உருவாக்கியதாகக் கூறினர். குறிப்பாக இஸ்ரேல் உடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

“பிரதமர் ஸ்கூஃப் ஒரு சிவப்புக் கோட்டை வரைய மறுக்கிறார். அதனால்தான் நாங்கள் அதைச் செய்கிறோம்,” என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளான அம்னஸ்டி இன்டர்நேஷனல், சேவ் தி சில்ட்ரன், மற்றும் டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் ஆகிய அமைப்புகளும் 1,00,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாக மதிப்பிட்டுள்ளன.

மனிதாபிமான, மனித உரிமைகள் மற்றும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளின் கூட்டணியால் இந்த போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இவற்றில் அம்னஸ்டி இன்டர்நேஷனல், டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (கிரென்சென் மண்டலம்), சேவ் தி சில்ட்ரன், பேக்ஸ், ஆக்ஸ்பாம் நோவிப், தி ரைட்ஸ் ஃபோரம் மற்றும் ப்ளாண்ட் அன் ஆலிவ் ட்ரீ (பிளாண்ட் ஈன் ஓலிஜ்ஃபூம்) ஆகியவை அடங்கும்.

ஹேக் நகரின் மாலிவெல்டில் (Malieveld) இருந்து தொடங்கி, சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) அமைந்துள்ள பீஸ் பேலஸை நோக்கி மக்கள் அணிவகுத்துச் சென்றனர். சர்வதேச நீதிமன்றம் தற்போது இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு ஆரம்பக்கட்ட தீர்ப்பில், காசாவின் பொதுமக்களைப் பாதுகாக்கவும், பிரதேசத்திற்குள் மனிதாபிமான உதவியை அனுமதிக்கவும் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இஸ்ரேல் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை.

இஸ்ரேலின் இனவெறித் தாக்குதலால் குறைந்தது 53,339 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,21,034 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களை இறந்துவிட்டதாகக் கருதி, அரசு ஊடக அலுவலகம் இறப்பு எண்ணிக்கை 61,700க்கும் அதிகம் என்று புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க