இனவெறி இஸ்ரேலின் தொடர் எல்லை முற்றுகையினால் காசாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினியாலும், அதனால் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் அங்கு மனிதர்கள் வாழ்வதே கடினம் என்ற அபாயத்தை எட்டியுள்ளது என்று காசாவை தளமாகக் கொண்ட பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் (Palestian Centre For Human Rights – PCHR) தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் இனவெறி இஸ்ரேல் காசா மீது மீண்டும் தன்னுடைய தாக்குதலைத் தீவிரப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது. மறுபுறம் காசாவிற்கு தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் எல்லைகளில் தடுத்து நிறுத்தி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவம் கிடைக்காமல் குழந்தைகள் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது.
மேலும் “ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது இறக்கும் அபாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில் இராணுவ தாக்குதல் தொடங்கியதிலிருந்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய காரணங்களால் இறந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட பகுதியில் மாவு, சர்க்கரை, அரிசி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும். இறைச்சி, கோழி, மீன் ஆகியவையும் சந்தைகளில் தீர்ந்துவிட்டதால், பஞ்சமும் பட்டினியும் தீவிரமடைந்துள்ளது.
“கூடுதலாக, சந்தைகளில் மீதமுள்ள சில பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் காசா மக்கள் தங்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், உணவுப் பொருட்களைப் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூடும் இடங்களும், கள சமையலறைகளும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் (IOF) குறிவைக்கப்படுகின்றன. இது பஞ்ச நெருக்கடியை மோசமாக்குகிறது என்று மனித உரிமைகள் மையம் பாலஸ்தீன மக்களின் கையறுநிலையை கண்முன்னே நிறுத்துகிறது.
மார்ச் மாத தொடக்கத்திலிருந்து இஸ்ரேல் உணவு, தண்ணீர் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களைக் காசாவிற்குள் அனுமதிக்க மறுத்ததால், தனக்குப் பிறந்த பெண் குழந்தை ஜெனன் (Jenan), மருத்துவ உதவிகள் கிடைக்காமல் எவ்வாறு இறந்தார் என்பதை மிகுந்த வலியுடன் விவரிக்கிறார் 21 வயதான அயா அல்-இஸ்காஃபி (Aya al-Iskafi).
“கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் எனக்குப் பிறந்த பெண் குழந்தை, நீரிழப்பால் (dehydration) பாதிக்கப்பட்டு, மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது அதன் எடை 2.8 கிலோவாகக் குறைந்தது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் தாய்ப்பால் சுரப்பதில் போதாமை ஏற்பட்டதால், மருத்துவமனையில் மருத்துவர்கள் அவளுக்கு பவுடர் பால் (formula milk) கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
ஆனால் தொடர்ந்து முற்றுகை இடப்பட்டதால் பால் மிகவும் குறைவாக இருந்தது. நாங்கள் அல்-ரான்டிசி மருத்துவமனையில் 14 நாட்கள் தங்கினோம், அங்கு என் மகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. மேலும் நரம்புவழி திரவங்களை (IV fluids) மட்டுமே நம்பியிருந்தோம்” என்று அல்-இஸ்காஃபி மனிதாபிமானக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் “மே மாத தொடக்கத்தில், என் குழந்தை ஜெனன் நாள்பட்ட வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாள். ஆனால் இஸ்ரேலின் தொடர் முற்றுகை, அதனால் ஏற்பட்ட பொருட்கள் பற்றாக்குறையால் அவளுக்குத் தேவையான மருத்துவ சேவையினை வழங்க முடியவில்லை. அப்போது நான் உதவியற்றவளாக இருந்தேன். அவளுக்கு உதவவோ, அவளுடைய வலியைக் குறைக்கவோ முடியவில்லை. அவள் என் முன்னால் கடுமையான வலியில் இருந்தாள். என் இதயம் உடைந்து கொண்டிருந்தது. ஆனால் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் கடுமையான சூழ்நிலைகள் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. மே 3 அன்று, என் மகள் பசியால் இறந்தாள். அவளிடம் விடைபெறுவது விவரிக்க முடியாத வலியாக இருந்தது. மேலும் அவள் அனுபவித்த வலிகள் அனைத்தும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் என்னைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன” என்று தன்னுடைய குழந்தையினைப் பறிகொடுத்த வலிகளை அல்-இஸ்காஃபி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
படிக்க: காசா: இஸ்ரேலின் இனப்படுகொலையால் கண் பார்வையை இழக்கும் பாலஸ்தீன மக்கள்!
காசாவில் நிலவும் கடுமையான பஞ்சம் காரணமாக எந்த நேரத்திலும் தனது மகளை இழக்க நேரிடும் என்று அச்சத்தில் உள்ள பாஸ்மா( Basma ‘Awad) கூறுகையில் “ஜனவரி 05, 2025 அன்று நான் என் மகளை இயற்கையாகப் பெற்றெடுத்தேன். பிரசவத்திற்குப் பிறகு, நான் நன்றாகச் சாப்பிடவில்லை. பருப்பு, அரிசி மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை மட்டுமே நம்பியிருந்தேன். என் மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கினேன். ஆனால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, தாய்ப்பால் சுரப்பது குறைந்துவிட்டது. அதனால் பவுடர் பாலைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.
ஒரு மாதத்திற்குப் பிறகு, அவள் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் அதிக காய்ச்சலால் அவதிப்பட ஆரம்பித்தாள். அவள் நாசர் மருத்துவ வளாகத்திற்கு மாற்றப்பட்டாள். அங்கு அவளுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லை (lactose intolerance) என்றும் லாக்டோஸ் இல்லாத பால் தேவை என்றும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் இஸ்ரேலிய முற்றுகை காரணமாக அதன் விலை அதிகமாகவும், அதற்கு தட்டுப்பாடும் இருந்தது. சமீப நாட்களில், அவளுக்கு எந்த வகை பவுடர் பாலையும் (formula milk) நான் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் ஒரு காலாவதியான கேனைக் கண்டுபிடித்தோம். அதை அவளுக்குக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்வதற்காக, இப்போது என் குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்படும் பால் அளவில் பாதியை மட்டுமே கொடுக்க முடிகிறது. பவுடர் பால் (formula) தீர்ந்துவிட்டால் அவளுடைய உடல்நிலை மிகவும் மோசமடையும். எந்த நேரத்திலும் நான் அவளை இழக்க நேரிடும் என்கிற பயம் எனக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது” என்று தன்னுடைய அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் தகவலின் படி, இஸ்ரேலிய முற்றுகையினால் ஏற்பட்ட பட்டினியால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது மற்றும் அவர்களின் குழந்தைகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளையும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியையும் குறைக்கிறது. இது அதிக கருச்சிதைவு, முன்கூட்டிய பிறப்புகள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் பிரசவத்திற்கு வழிவகுக்கும்” என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
படிக்க: நெதர்லாந்து: இஸ்ரேலை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் பேரணி
இஸ்ரேலிய முற்றுகையின் போது பிரசவம் நடக்க வாய்ப்புள்ளதால், தனது குழந்தையை இழந்துவிடுவோமோ என்ற தொடர்ச்சியான அச்சத்திலும், தாங்க முடியாத உடல் மற்றும் மன துன்பங்களுக்கு இடையில் சிக்கித் தவித்து வருகிறார் எச்.கே (35) என்ற பெண்மணி.
ஊட்டச்சத்துக் குறைபாடு பல்வேறு கடுமையான உடல்நல அபாயங்களுக்கு ஆளாக்குகிறது. இதில் கருவில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு ஆகியவை அடங்கும். இது குழந்தைகளின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கிறது. குடல் தொற்றுகள், மெலிதல் மற்றும் தசைச் சிதைவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது; இது சில சந்தர்ப்பங்களில் ஆபத்தானது.
மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள், எதிர்காலத்தில் இதய தசை செயலிழப்புக்கு வழிவகுக்கும் மிகை இதயத் துடிப்பு போன்ற நீண்டகால அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், மன மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுபவர்களாகவும் இருக்கலாம் என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக காசாவின் அனைத்து நுழைவாயில்களையும் மூடியுள்ளதால் காசா பகுதியில் பொதுமக்களிடையே பசி நெருக்கடி மோசமடைந்து வருகிறது.
பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக அழிப்பதற்கு இஸ்ரேல் பட்டினியை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை மனிதாபிமானக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. “இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இனப்படுகொலைச் செயலாகும்” என்று அக்குழு கூறியுள்ளது.
மேலும் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், காசா பகுதியில் நிலவும் பஞ்சத்தையும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள், பெண்கள் இறப்பதைத் தடுப்பதற்கும் உடனடி போர்நிறுத்தத்தை அமல்படுத்தவும் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இனவெறி இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களாலும், பட்டினியாலும் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி பூமியில் ஒரு ’நரக’மாக மாறியுள்ளது. எனவே காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவும் அனைவரும் குரல் எழுப்பு வேண்டும்.
மூலக் கட்டுரை: மக்தூப் மீடியா
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram