நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிற்றுக்கு மீண்டும் ஒரு மாணவர் பலி!

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை விட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

சேலம் மாவட்டம் நரஜோதிபட்டியைச் சேர்ந்த மாணவர் கௌதம் நீட் தேர்வு தோல்வி பயத்தினால் மே 19 ஆம் தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நரஜோதிபட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த ரஞ்சன் டிங்கரிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி யோகலட்சுமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் கௌதம் ஜெயின் பாலஸ் பள்ளியில் படித்து வந்தநிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்துள்ளார்.

பின்னர் மருத்துவராக வேண்டும் என்கிற கனவோடு நீட் தேர்விற்காக (National Eligibility Entrance Test- NEET) படித்து வந்துள்ளார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் பங்கேற்று குறைவான மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்விலும் தோல்வி அடைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இரண்டுமுறை தற்கொலைக்கு முயன்ற மகனை பெற்றோர்கள் காப்பாற்றியுள்ளனர். அதன்பின்னர் அதிக மன அழுத்தம் காரணமாக மருத்துவ சிகிச்சையிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர்கள் மருத்துவருக்கு எல்லாம் படிக்க வேண்டாம், மெடிக்கல் கடை வைத்துத் தருகிறோம் என்று தங்கள் மகனிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய மருத்துவர் கனவைக் கைவிட விரும்பாத மாணவர் மூன்றாவது முறை முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதன்படி மே 4 அன்று நீட் தேர்வு எழுதியிருக்கிறார். தேர்வு முடிந்த பின்பு சக மாணவர்களிடம் 280 மார்க் தான் வரும் என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார். அத்துடன் மூன்றாவது முறை எப்படியாவது தேர்ச்சி பெற்று விடுவோம் என்கிற நம்பிக்கையும், மருத்துவராக வேண்டும் என்கிற கனவும் உடைந்துபோனது. அன்று முதல் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்கிற பயத்திலும், மன உலைச்சலிலும் இருந்து வந்த கௌதம் கடந்த 19 ஆம் தேதி அன்று மாலை வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலையை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மாணவர் சடலமாக தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதது சுற்றியிருந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வால் 20 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்… | தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன்


நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை விட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும். பாசிச மோடி கும்பல் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வை அமல்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைத்து. அனிதா முதல் கௌதம் வரை நூற்றுக்கணக்கான மாணவர்களை நீட் தேர்விற்குப் பலியிட்டுக் கொண்டிருக்கிறது.

மறுபுறம், 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தது தி.மு.க அரசு. ஆனால் நீட் தேர்விற்கு எதிரான மாணவர் போராட்டங்களைக் கட்டியமைக்காமல், சட்டப்போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகமாடி வருகிறது. நீட் தேர்வால் தொடரும் மாணவர் தற்கொலைகள், அதனை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டங்கள் ஆகியவை தி.மு.க வை நெருக்கடி நிலைக்குத் தள்ளியது. அதனால் தற்போது ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.

எனவே, இனியும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க அரசிடம் மனு கொடுப்பதில் பலனில்லை. மாறாக நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே நீட் தேர்வையும், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க