பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!

பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க-வையும் அதன் தலைவர்களையும் அவமதித்ததை பொறுத்துகொள்ள முடியாமலேயே எடப்பாடி இம்முடிவை எடுத்ததாக அச்சமயத்தில் பலரும் பேசினர். அ.தி.மு.க. திடீரென புனிதமடைந்து விட்டதை போன்று, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி அக்கட்சிக்கு ஆதரவளித்தார்; எஸ்.டி.பி.ஐ. கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு சென்றது. ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினர் கூட இக்கூட்டணி முறிவை பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சந்தர்ப்பவாதமாக கருத்து தெரிவித்தனர்.

ஆனால், 2023 அக்டோபர் மாத புதிய ஜனநாயகம் இதழில் “கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா? எலும்புத் துண்டுக்கான சீற்றமா?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், எடப்பாடி பழனிச்சாமியின் அடித்தளமாக உள்ள கொங்கு மண்டலத்தையும் அ.தி.மு.க-வின் கட்சி கட்டமைப்பையும் அண்ணாமலை அபகரிக்க முயல்வது மட்டுமே எடப்பாடியின் சீற்றத்திற்கு காரணம் எனவும் இது சுயமரியாதை தூண்டுதலோ, பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்படக் கூடியதோ அல்ல எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவசர அவசரமாக அண்ணாமலையை பதவி விலகச் செய்துவிட்டு அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி அமைத்திருப்பதானது புதிய ஜனநாயகத்தின் கூற்றை நிரூபித்திருக்கிறது.

புஸ்வாமாகும் மோடி-அமித்ஷா கும்பலின் வியூகங்கள்

‘வியூகம்’ என்ற பெயரில் பார்ப்பனிய சூதுகளாலும் சதிகளாலும் பல மாநிலங்களில் ஆட்சிகளை கவிழ்த்து, மாநிலக் கட்சிகளுடன் உறவாடி கெடுத்து அங்கு பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவதற்கு திட்டம் போட்டுக்கொடுக்கும் அமித்ஷாவின் வியூகமானது தமிழ்நாட்டில் எப்போதுமே புஸ்வானமாகிக் கொண்டேதான் இருக்கிறது.

“மிஷன் சவுத்” என்ற திட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல அடித்தளத்தை செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் திட்டம்.

ஆனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்காமலேயே தமிழ்நாடு முழுக்க கட்சியை வளர்த்தெடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துவிடலாம் என்று அண்ணாமலை முன்வைத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணியை விட்டு தனித்து களமிறங்கியது பா.ஜ.க கும்பல்.

ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் அண்ணாமலையின் திட்டம் படுதோல்வியை தழுவியது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் மண்ணை கவ்வும் நிலை உள்ளது.

இதன் காரணமாக, தனது தோல்வியை மறைத்துக்கொண்டு அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலை அமித்ஷா-மோடி கும்பலுக்கு ஏற்பட்டது. இருப்பினும் கூட்டணி அறிவிப்பை பிரம்மாண்டமாக நிகழ்த்தி தன் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துவிடலாம் என்று திட்டமிட்ட அமித்ஷா, ஏப்ரல் 10 அன்று இந்தி-ஆங்கில ஊடகவியலாளர்களுடன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். ஆனால், எடப்பாடியை சந்திக்க முடியாமல் ஒருநாள் முழுக்க அமித்ஷா அலைக்கழிக்கப்பட்டது தமிழ்நாட்டின் கடைக்கோடி ஊடகங்கள் வரை சந்தி சிரித்தது.

ஏப்ரல் 11 அன்று மாலை வரை அமித்ஷாவால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முடியாததால், குமரி ஆனந்தனின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பது போல தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு செல்வது; சங்கி துக்ளக் குருமூர்த்தி வீட்டிற்கு செல்வது என ஊடகவியலாளர்களிடம் இருந்து தப்பித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை விலக்கினால் மட்டுமே கூட்டணி அறிவிப்பை வெளியிட முடியும் என்பதை உணர்ந்த அமித்ஷா அன்றைய தினமே தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தி, நயினார் நாகேந்திரனை தலைவராக்கிவிட்டு, அதற்கான அறிவிப்பையும் தானே எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதன் பிறகே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அமித்ஷா இவ்வாறு அலைக்கழிக்கப் பட்டதானது தமிழ்நாட்டின் சங்கி கும்பலிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக தனது கட்சியின் மாநிலத் தலைவரையே பா.ஜ.க. மாற்றியிருப்பது பொதுவெளியில் விவாதப்பொருளாகி பா.ஜ.க-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அமித்ஷாவிற்கு நேர்ந்த அவமானத்தை மூடிமறைக்க “அமித்ஷாவின் வியூகம் வெற்றி” என சங்கி கும்பல் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், “பா.ஜ.க. உடன் கூட்டணி உள்ளதே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது” என்று எடப்பாடி பழனிச்சாமி திடீரென பல்டி அடித்தது பா.ஜ.க. கும்பலுக்கு தலைவலியாகிப் போனது.

இதற்கிடையில் பா.ஜ.க-வின் அடிவருடியான அன்புமணிக்கு பதிலாக, இனி தானே பா.ம.க. தலைவராக தொடரப்போவதாக ராமதாஸ் அறிவித்தது பா.ஜ.க. கும்பலுக்கு தலைவலியை மேலும் கூட்டியிருக்கிறது.

வெற்றி கூட்டணி அல்ல, கடத்தல் கூட்டணி

“பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை” என மேடைகள் தோறும் முழங்கிவிட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அண்ணாமலையை தலைவர் பதவிலிருந்து நீக்கியதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தனது வியூகத்தில் வெற்றியடைந்துவிட்டதாக அ.தி.மு.க. கும்பல் பிரச்சாரம் செய்கிறது. மறுபுறம், இரண்டு கட்சிகளுமே இக்கூட்டணியை வெற்றி கூட்டணி என்று பேசி வருகின்றன.

ஆனால், இது வெற்றி கூட்டணி அல்ல, எடப்பாடி பழனிச்சாமியை கடத்திக்கொண்டுபோய் அமைக்கப்பட்ட கடத்தல் கூட்டணி என்பதே உண்மை.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பா.ஜ.க., அ.தி.மு.க. உடன் கூட்டணியின்றி தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என்பதை நன்குணர்ந்தது. அப்போதிலிருந்தே அ.தி.மு.க-வை தனது வழிக்கு கொண்டுவந்து கூட்டணி அமைப்பதற்கான அனைத்து அஸ்திரங்களையும் பா.ஜ.க. கையாளத் தொடங்கியது. அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது; அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறை, வருவமான வரித்துறை சோதனை நடத்தியது; எடப்பாடி பழனிச்சாமி மகனின் ஊழல் விவகாரத்தை கையிலெடுத்தது; “ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வேண்டும்” என்ற கோரிக்கையை கட்சிக்குள் தீவிரமடையச் செய்து அதற்கான நகர்வுகளை மேற்கொண்டது; கட்சியை உடைப்பதற்கு எஸ்.பி. வேலுமணியுடன் ஈஷா யோகா மையத்தில் திட்டம் தீட்டியது; செங்கோட்டையன் தலைமையிலான கோஷ்டியை எடப்பாடிக்கு எதிராக தூண்டிவிட்டது என பலவகைகளில் அ.தி.மு.க. எனும் நெல்லிக்காய் மூட்டையை சிதறடிப்பதற்கான வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டது.

இதனையடுத்து, கூட்டணிக்கு செல்லாவிட்டால் கட்சியே இருக்காது என்ற நிலை உருவான காரணத்தினாலேயே அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. மொத்தத்தில், இக்கூட்டணிக்காக எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக கடத்தப்படவில்லையே தவிர பிற அத்துணை அஸ்திரங்களையும் பா.ஜ.க. கையாண்டது.

மேலும், கூட்டணி அறிவிப்பின் போது அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களில் தலையிட மட்டோம் என அமித்ஷா தெரிவித்திருந்தாலும் தேவர் சாதி மக்களின் வாக்குகளை தனதாக்கிக் கொள்வதற்காக, சசிகலா-தினகரன்-ஓ.பன்னீர்செல்வம் உள்ளடங்கிய ‘ஒருங்கிணைந்த அ.தி.மு.க.’-வை உருவாக்கும் திட்டத்தை பா.ஜ.க. நிகழ்ச்சிநிரலில் வைத்துள்ளது என்பதை சங்கி குருமூர்த்தியின் நேர்காணல்கள் நிரூபிக்கின்றன. எனவே, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன வழக்கு, அ.தி.மு.க-வினர் மீதான ஊழல் வழக்குகள் ஆகியவற்றை வைத்து மிரட்டி எடப்பாடி கும்பலை தனது நோக்கத்திற்கேற்ப பா.ஜ.க. பணிய வைக்கும் என்பதே நிதர்சனமாகும்.

கரையான் புற்றுகளை இடிக்காமல்
கருநாகத்தை நசுக்க முடியாது

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டும் என எத்தனிக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் அதற்கான முக்கிய காய்நகர்த்தலாக அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.

அ.தி.மு.க. கட்சியின் தன்மையானது இப்பாசிச கும்பல் உள்நுழைவதற்கு கனகச்சிதமாக உள்ளது. எந்தவித கொள்கை-கோட்பாடுமற்ற அடிமை கூட்டமாக எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நேரடியாக பார்ப்பன கும்பலின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு அ.தி.மு.க-விற்குள் பா.ஜ.க. நேரடியாக அதிகாரம் செலுத்தத் தொடங்கியதன் மூலம் அக்கட்சி பாசிச பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. பல இடங்களில் அ.தி.மு.க. என சொல்லிக்கொள்ளும் சங்கிகள் பாசிச எதிர்ப்பு சக்திகள் மீது தாக்குதல் தொடுப்பது அக்கட்சிக்குள் நிகழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலையும் ஆதிக்கத்தையும் வெளிக்காட்டுகிறது.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தை பாசிஸ்டுகள் தமிழ்நாட்டில் அடித்தளமிடுவதற்கான நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலை வளர்த்துவிட்டது; அரசு கட்டமைப்பிற்குள் சங்கிகளை புகுத்தியது; சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை தீவிரப்படுத்தியது என பாசிச ஊடுருவல் அனைத்து மட்டங்களிலும் நடந்தேறியது. மேலும், நீட் உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு அடிமை அ.தி.மு.க. தமிழ்நாட்டை திறந்துவிட்டது. இந்திய அளவிலும் சி.ஏ.ஏ., காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு ஆதரவளித்து இஸ்லாமியர்களுக்கும் பரந்துபட்ட இந்திய மக்களுக்கும் துரோகமிழைத்தது.

எனவே, அ.தி.மு.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது என்று பேசுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம். கொங்கு மண்டலம் பறிபோனால் தனது கட்சியால் பொறுக்கித் தின்ன முடியாது என்ற ஒற்றை காரணத்தினாலேயே பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்தது. தற்போது துளியும் வெட்கமின்றி அண்ணாமலையை விலக்கியதாலும் ஊழல் வழக்குகளை கொண்டு மிரட்டியதாலும் பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்தவகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாசிச கும்பலின் நோக்கத்திற்கேற்ப செயல்படும் முதன்மை வாகனமாக அ.தி.மு.க. பயன்பட இருக்கிறது. எனவே, அ.தி.மு.க-வை பாசிச எதிர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் மக்களை பாசிச படுகுழியில் தள்ளுவதுமாகும்.

அ.தி.மு.க. மட்டுமின்றி பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்னியர் சாதிவெறி கட்சியான பா.ம.க., கொள்கை-சித்தாந்தமற்று விஜயகாந்தை வைத்து பிழைப்பு நடத்தும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் பாசிச கும்பலுக்கான கரையான் புற்றுகளேயாகும். மேலும், தமிழ்நாட்டில் பலமுனை போட்டி நிலவினால் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, தி.மு.க. வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்துள்ள பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியை தனது கூட்டணியில் இணைத்து கொள்வதற்கான பேரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடியாக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்காவிட்டாலும், பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கான கருத்தியல் அடியாள் வேலையைத்தான் சீமான் செய்து வருகிறார். எனவே, நா.த.க. வளர்ச்சியும் பா.ஜ.க-விற்கு துணைபுரிவதாகவே அமையும்.

அதேபோல், இந்தியாவில் பாசிசம் அரங்கேறிவரும் சூழலில் கொள்கை-சித்தாந்தம் ஏதுமின்றி கவர்ச்சிவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மட்டுமே முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள விஜய்-இன் கட்சியும் பாசிஸ்டுகளுக்கான கரையான் புற்றே. எப்போது வேண்டுமானாலும், பா.ஜ.க-வால் விஜய் கட்சியை தன்வயப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலையில்தான் அக்கட்சி உள்ளது.

எனவே அ.தி.மு.க. உள்ளிட்டு இக்கட்சிகளிடம் ஜனநாயகம் பாராட்டுவதும் அவற்றை பயன்படுத்திக்கொள்ள எத்தனிப்பதும் பாசிச கும்பலிடத்தில் பலியாவதற்கே வழிவகுக்கும். இந்த கரையான் புற்றுகளை இடித்துத் தள்ளுவதானது தமிழ்நாட்டில் பா.ஜ.க. எனும் கருநாகத்தை நசுக்குவதில் முதன்மை கடமையாகும்.

2026 சட்டமன்றத் தேர்தல்:
உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன வழி?

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. மூலமும் அண்ணாமலையை முன்னிறுத்தியும் கவுண்டர் சாதி வாக்குகளை அறுவடை செய்வது; வட மாவட்டங்களில் பா.ம.க. மூலம் வன்னியர் சாதி வாக்குகளை கவர்வது; தென்மாவட்டங்களில் பா.ஜ.க-வின் புதிய மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனை முன்னிறுத்தியும் தினகரன்-சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் கும்பல் மூலமும் தேவர் சாதி மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது; அதே பகுதியில் அடர்த்தியாக வாழும் பள்ளர் சாதி மக்களை கவர கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற கருங்காலிகளை பயன்படுத்துவது என 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டத்தை வகுத்து பாசிச கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல் மூலம் மதக்கலவரங்களையும் சாதிவெறியாட்டங்களையும் தூண்டிவிட்டு சாதி-மத முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாடு மக்களின் வாக்குகளை அபகரிக்கத் திட்டமிடுகிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில், “சிக்கந்தர் தர்காவை இடித்து தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவோம்” என இந்து முன்னணி கும்பல் மதக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி சாதியப் படுகொலைகளையும் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகிறது.

மறுபுறம், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க-வும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. கடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வியூகங்களை வகுத்துக்கொடுத்த “ஷோ டைம்” மற்றும் “பென்” ஆகிய கர்ப்பரேட் நிறுவனங்களின் துணையுடன் 2026 தேர்தலுக்கான உத்திகளை தி.மு.க. வகுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை அறிய, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அதன் அடிப்படையில் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுவது; சாதி வாக்குகளை பெறும் வகையில் கட்சியை புனரமைப்பது என தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது போராடிய மக்கள் பிரிவினருக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. காற்றில் பறக்கவிட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு நான்காண்டுகளாக கார்ப்பரேட் மாடல் ஆட்சியை நடத்தி வருகிறது.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பெயரில் பரந்தூர் விமான நிலையத் திட்டம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்  என கார்ப்பரேட் திட்டங்களுக்கு துணைபோவது; தமிழ்நாடு முழுவதும் சிப்காட் பூங்காக்களை அமைக்கிறேன் என்ற பெயரிலும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரிலும் விவசாய மக்களையும் பூர்வகுடி மக்களையும் விரட்டியடிப்பது; எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்குவது, மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுவது; முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டை கார்ப்பரேட் சுரண்டலின் குவிமயமாக்குவது என கார்ப்பரேட் சேவைத் திட்டங்களை தி.மு.க. செவ்வனே அமல்படுத்தி வருகிறது. இக்கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை கடுமையாக ஒடுக்குகிறது. கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல்மயமாக்கத்தை தீவிரப்படுத்தி உத்தரவாதமற்ற பணி முறையையும் உதிரி தொழிலாளர்களையும் உருவாக்கி வருகிறது.

மறுபுறம் பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே ஒன்றிய அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது; முருகன் மாநாடு, ஆன்மீக அரசியல் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு கருத்தியல் அடியாள் வேலை பார்ப்பது; ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை வேடிக்கை பார்ப்பது; புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்டு பாசிச சட்டத்திட்டங்களை எதிர்த்து களம் காணாமல் அதனை தமிழ்நாட்டு மக்களின் தலையில் சுமத்துவது; பாசிச கும்பலின் நிதி நெருக்கடிக்கு அடிபணிந்து போவது என தி.மு.க. சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி முடக்கம், தொகுதி மறுவரையறை, மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றை தனது தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் வரம்புக்கு உட்பட்ட அளவிலேயே எதிர்க்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனைத் தடுத்து நிறுத்தாமல் வேங்கைவயல் உள்ளிட்ட விவகாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்குகிறது. போலீசு துணையுடன் சாதியத் தாக்குதல்களை தனிப்பட்ட மோதலாக சித்தரிக்கிறது.

மறுபுறம் தமிழ்நாட்டில் கல்குவாரி, மணல் கொள்ளை போன்றவை தீவிரமடைந்து வருகின்றன. இந்த இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்போர் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஆனால், ஐ.டி. விங்குகள், இணைய குண்டர் படையை வைத்துக்கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மூடிமறைத்து மக்களை திசை திருப்புகின்றன; தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சித்தரிக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. எதிர்ப்பை பயன்படுத்தி கொண்டும் பிரஷாந்த் கிஷோர் என்னும் தேர்தல் புரோக்கரின் வழிகாட்டுதலாலும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்ததை போலவே 2026 தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என தி.மு.க. கனவு காண்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நாள்தோறும் போராடி வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்துத்தர கோரியும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும், மாநகராட்சி விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆனால், தி.மு.க. அரசு இதுகுறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அத்தி பூத்தாற் போன்று சில விவகாரங்களுக்கு மட்டும் அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றன. தி.மு.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் கட்சிகள் சடங்கிற்காக கூட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. அதேசமயம், தி.மு.க. மீதான இந்த மக்கள் எதிர்ப்பை பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்துகொள்ள வேண்டும் என பாசிச பா.ஜ.க. கும்பல் தீவிரமாக வேலை செய்துவருகிறது.

இந்நிலையில், போராடும் மக்கள் தங்களது கோரிக்கைகளை சொந்தமுறையில் போராடி நிலைநாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்தல் சமயத்தில், ஆளும் வர்க்க கட்சிகளை போல உழைக்கும் வர்க்கமும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பேரத்தை நடத்த வேண்டியுள்ளது. அதற்கான சரியான வடிவம் களப்போராட்டங்களே!

பாசிச எதிர்ப்பு போராட்டத்திலும் மக்கள் நலனிலும் உறுதியாக இருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் இந்தப் போராட்டத்தில் முன்னிற்க வேண்டும். களப்போராட்டங்களுக்கு தலைமையளித்து மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க பாடுபட வேண்டும். இதுவே பா.ஜ.க. கும்பலை வீழ்த்துவதற்குமான வழியாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க