28.05.2025
“FREE PALESTINE” முழக்கம் தேச விரோதமாம்!
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடு!
பத்திரிகை செய்தி
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் (RGNIYD) சமூகப் பணி முதுகலைப் பட்டம் (MSW) பயின்று வரும் மூன்று இஸ்லாமிய மாணவர்களை, “FREE PALESTINE” மற்றும் “ஜெய் பீம்” போன்ற முழக்கங்களை எழுப்பியதாகக் கூறி அம்மாணவர்களுக்கு “தேச விரோதி” முத்திரை குத்தி, அம்மாணவர்கள் மூவரையும் அந்த நிறுவனம் தன்னிச்சையாக இடைநீக்கம் செய்துள்ளது.
மே 25, 2025 அன்று அஸ்லம் S, சயீத் M A மற்றும் நஹல் இப்னு அபுல்லைஸ் ஆகிய மூன்று இஸ்லாமிய மாணவர்கள் விடுதி சொத்துக்களைச் சேதப்படுத்தும் விதமாகவும் தேச விரோத உள்ளடக்கத்துடனும் “FREE PALESTINE” மற்றும் “ஜெய் பீம்” போன்ற முழக்கங்களை விடுதி சுவரில் எழுதியதாகக் கூறி, பொய் குற்றம் சாட்டி அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது RGNIYD நிறுவனம்.
அதுவும் குறிப்பாக அம்மாணவர்களின் இறுதியாண்டு தேர்வுகளுக்கு ஒரு நாள் முன்பு இந்த நடவடிக்கையை அக்கல்வி நிறுவனம் எடுத்திருக்கிறது. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இந்நடவடிக்கையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
விடுதி சுவரில் எழுதப்பட்ட முழக்கங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயாராக இருந்த போதும் மாணவர்கள் தரப்பு வாதத்தைக் கல்வி நிறுவனம் கேட்க மறுத்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஒருசில விடுதி அறைகளை மட்டும் சோதித்து அதில் இம்மாணவர்கள் அறையிலிருந்து ஒரு பெயிண்ட் ரோலரையும், வெவ்வேறு வண்ணங்களில் வண்ணப்பூச்சு பூசப்பட்ட ஒரு தூக்கி எறியும் தகட்டையும் கண்டுபிடித்தனர். இவை தங்கள் கல்வி தேவைகளில் களப்பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாகவும் இக்கூற்றைத் தெளிவுபடுத்த போதிய ஆதாரங்கள் உள்ளது என்று அம்மாணவர்கள் கூறியபோதும் அக்கல்வி நிறுவனம் கேட்க மறுத்தது. அவர்கள் மீது பொய் குற்றஞ்சாட்டியது மட்டுமில்லாமல் “FREE PALESTINE” மற்றும் “ஜெய் பீம்” போன்ற முழக்கங்கள் தேச விரோத முழக்கங்கள் என்றும் கூறி அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
அதுவும் இந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் ஒழுங்கு நடவடிக்கை குழு வழங்காமல் இவர்கள் மேல் குற்றம்சாட்டி இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும் FREE PALESTINE மற்றும் ஜெய் பீம் போன்ற முழக்கங்கள் தேச விரோதமானவை என்று கூறுவதன் மூலம் சட்டமேதை அம்பேத்கரையும், பாலஸ்தீன மக்களின் விடுதலை போராட்டத்தையும் RGNIYD கல்வி நிறுவனம் இழிவுபடுத்தியுள்ளது. இந்த முழக்கங்கள் எந்த வகையில் தேசவிரோதமானவை?
இது இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பையும் அந்த வெறுப்பை நிறுவனமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் கல்வி நிறுவனங்களில் ஊடுருவியிருப்பதையும் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.
மத்திய கல்வி நிறுவனங்கள் காவி கும்பல் கட்டுப்பாட்டில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மாதம் சென்னை ஐ.ஐ.டி-ன் இயக்குநர் காமகோடி கோமியம் மருத்துவ குணமிக்கது என்ற அறிவியலற்ற கருத்தைக் கூறியிருந்தார்.
மேலும் நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இயங்கி வரும் இடதுசாரி, அம்பேத்கரிய மற்றும் இஸ்லாமிய மாணவர் இயக்கங்களின் மீது ஏ.பி.வி.பி (ABVP) கும்பல் தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும், அந்த கும்பலுக்கு பல்கலைக்கழக உயர் பொறுப்பிலுள்ள காவி கும்பல் உறுதுணையாக இருப்பதையும் காண்கிறோம்.
எனவே இவ்வாறு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை விரட்டியடிக்க மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிர்வினை ஆற்றிட வேண்டும்.
பொய் குற்றம்சாட்டி மூன்று இஸ்லாமிய மாணவர்களையும் இடைநீக்கம் செய்த ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தை (RGNIYD) புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் அம்பேத்கரையும் பாலஸ்தீன மக்களையும் இழிவுபடுத்திய ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வலியுறுத்துகிறது.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram