பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பத்து தலித் பேராசிரியர்கள், தங்கள் மீதான சாதிய பாகுபாடு காரணமாக நிர்வாக பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, கல்வி நிலையங்களில் தலித் பேராசிரியர்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் சாதித் தீண்டாமையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.
கடந்த ஜூலை 2 அன்று அம்பேத்கர் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சி.சோமசேகர், பாபு ஜகஜீவன் ராம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் விஜயகுமார் எச்.தொட்டமணி; மாணவர் நல இயக்குநர் பேராசிரியர் பி.சி.நாகேஷ், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சிறப்பு அதிகாரி பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, பி.எம்-யு.எஸ்.எச்.ஏ-வின் (PM-USHA) ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வி.சுதேஷ், தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மைய இயக்குநர் பேராசிரியர் பி.எல்.முரளிதர், மாளவியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் எம்.சஷிதர் எம், ஒளிபரப்பு இயக்குநர் பேராசிரியர் ரமேஷ், சம வாய்ப்புப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர்.சுரேஷ் மற்றும் பி.ஓ.எல். மைய இயக்குநர் டாக்டர் எஸ்.கும்பினரசய்யா ஆகிய பத்து தலித் பேராசிரியர்கள் பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜெயகர ஷெட்டிக்கு தங்களது பதவிவிலகல் குறித்து கடிதம் எழுதினர்.
அக்கடிதத்தின்படி, பதவி விலகுவதாக அறிவித்துள்ள இப்பேராசிரியர்கள் கற்பித்தல் பணிகளுடன் சேர்த்து நிர்வாகப் பொறுப்புகளிலும் (Administrative roles) பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்; இருந்த போதிலும், சட்ட-அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான (Statutory positions) நியமனங்களில் சாதிய பாகுபாட்டுடன், போதுமான அதிகாரம் மற்றும் அங்கீகாரம் இல்லாத “மேற்பார்வை” பதவிகளே (Supervisory or In-charge posts) இப்பேராசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்.
மேலும், அம்பேத்கர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் சி.சோமசேகர், மாணவர் நல இயக்குநர் பி.சி.நாகேஷ், பி.எம்-யு.எஸ்.எச்.ஏ-வின் ஒருங்கிணைப்பாளர் வி.சுதேஷ், தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தின் இயக்குநர் பி.எல்.முரளிதர் உள்ளிட்ட பேராசிரியர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விடுப்பு சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தலித் பேராசிரியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கை என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ள பேராசிரியர்கள், “நிர்வாகப் பணிகளில் எங்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஈட்டிய விடுப்பை (EL – Earned Leave) பல்கலைக்கழகம் தற்போது விளக்கம் ஏதும் இல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பேராசிரியர்களுக்கு எதிராக சாதிய பாகுபாட்டுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளானது, தங்களது அதிகாரத்தைப் பறிப்பதற்கும் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிமைகளை நிறுத்தி வைப்பதற்குமான திட்டமிட்ட நடவடிக்கை என்று பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், “தங்களது இக்கூட்டு நடவடிக்கை தனிப்பட்ட குறைகளைப் பற்றியது மட்டுமல்ல. புறக்கணிப்பு மற்றும் சட்டப்பூர்வமான சலுகைகள் மறுப்புக்கு எதிரான போராட்டம்” என்றும் ஒரு வாரத்திற்குள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தங்களது நிர்வாகப் பதவிகளிலிருந்து விலகுவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தலித் பேராசிரியர்களின் இந்த பதவி விலகல் கடிதமானது, பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தலித் பேராசிரியர்கள் பணியாற்றினாலும், அவர்களுக்கான அங்கீகாரமும் வருவாயும் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுவதை அம்பலப்படுத்துகிறது. மேலும், தலித் பேராசிரியர்களிடமிருந்து வரும் புகார்களை நிவர்த்தி செய்வதில் நிர்வாகத்தின் பொறுப்பின்மையையும், மறுபுறம் அதன் சாதியத் தன்மையையும் வெளிக்காட்டுகிறது.
படிக்க: அசோகா பல்கலை பேராசிரியர் கைது – ஆபரேஷன் சிந்தூர் குறித்துக் கேள்வி கேட்டால் தேசத் துரோகமாம்!
இச்சம்பவம் மட்டுமின்றி, 2020-ஆம் ஆண்டில், டெல்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் ரிது சிங் சாதிய துன்புறுத்தலுக்கு உள்ளானதுடன், தலித் என்ற காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். 2021-ஆம் ஆண்டில், ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பணியாற்றிய தலித் பேராசிரியர் விபின் பி.வீட்டில் சாதிக்கொடுமை காரணமாக பதவி விலகினார். 2024-ஆம் ஆண்டில், சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகம் நடத்திய விசாரணையில், ஐ.ஐ.எம். பெங்களூரில் ஒரு தலித் இணைப் பேராசிரியருக்கு எதிராக சாதி பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டது அம்பலமானது. கடந்த ஜூன் மாதத்தில், ஆந்திர மாநிலத்தில் எஸ்.வி. கால்நடை பல்கலைக்கழகத்தின் பால் தொழில்நுட்பக் கல்லூரியின் தலித் உதவிப் பேராசிரியர் டாக்டர் ரவியின் நாற்காலி கல்லூரி முதல்வரால் அகற்றப்பட்டு, அவர் தரையில் அமர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது ஊடகங்களில் வெளியானது.
தலித் பேராசிரியர்கள் மட்டுமின்றி, தலித் சாதியைச் சார்ந்த மாணவர்களும் ஊழியர்களும் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டையும் தீண்டாமையையும் எதிர்கொள்வது தொடர்கதையாகியுள்ளது.
குறிப்பாக, பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளையும், மாணவர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்களையும் கல்விக்கூடங்களை காவிக்கூடங்களாக்கி வருகிறது. இது இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு எதிரான போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக, தலித் பேராசிரியர்களுக்கு எதிராக பொய்யாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர்களின் பதவி பறிக்கப்படுவது இதனுடன் இணைந்ததே ஆகும்.
ஆனால், இத்தகைய தாக்குதலுக்கு எதிராக பெரும்பாலும் அரசியல் அரங்கிலிருந்தே குரலெழுப்பப்படுகிறது. கல்வி வளாகத்திற்குள் கோரிக்கை வைத்துப் போராடக்கூடிய மாணவர் அமைப்புகளோ பேராசிரியர்-மாணவர் உறுப்புகளோ செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் இப்போக்கு தீவிரமடைந்ததன் விளைவாக, கல்வி நிலைய அநீதிகளுக்கு எதிராக அதன் வளாகங்களுக்குள்ளே பெரும் அமைதி நிலவுகிறது. எனவே, தலித் பேராசிரியர்களுக்கு எதிரான இத்தகைய சாதியத் தாக்குதலுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுப்பதுடன், கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள்-பேராசிரியர்கள் கைகோர்த்து போராட வேண்டும்.
தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram