வாராணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யா பீடம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் கவுரவ பேராசிரியர், டாக்டர் மிதிலேஷ் குமார் கவுதம் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

“நவராத்திரி காலங்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது என்றும், இவ்வாறு படிப்பது பயத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கும். ஜெய் பீம்” என்று சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

சமூக வலைதளத்தில் பேராசிரியர் பதிவு செய்த கருத்து, இந்து விரோத கருத்து என்று கூறி அக்கல்லூரியில் செயல்பட்டு வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி போராட்டத்தில் ஈடுப்பட்டது. அவரை உடனடியாக பல்கலைக் கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற் கூறி துறைத்தலைவரின் அறைக்கு முன்னால் சென்று ‘ஜெய் ஸ்ரீராம், மாதா கி ஜெய்’ என்று வெறிக்கூச்சல் போட்டனர்.

மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கு சென்று பேராசிரியர் கவுதம், இரண்டு மணி நேரத்தில் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நிமிடமே பல்கலைக் கழகம் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறபிக்கிறது.

படிக்க : 1947-க்கு பிறகு மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்!

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக் கழக பதிவாளர் சுனிதா பாண்டே, “கவுதம் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல. மதங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும், இதுபோன்ற கருத்துகள் வெளியிட யாருக்கும் உரிமையில்லை. ஒரு ஆசிரியர் எப்போதும் இப்படியான கருத்துகளை கூறக் கூடாது” என்று கூறியுள்ளார். கல்லூரியில் மாணவர்கள் மனம் புண்பட்டுள்ளதாகவும் எனவே அவரை பணிநீக்கம் செய்கிறோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கவுதம், “நாங்கள் தலித் என்ற காரணத்திற்காகவே பாசிச கும்பலால் குறிவைத்து தாக்கப்படுகிறோம். துறைத்தலைவர் தலித் என்பதற்காகவே அவரையும் தாக்குகிறார்கள். இந்துத்துவ மாணவர் கும்பலின் அழுத்தம் காரணமாகவும், உயர்சாதி பிரிவினரின் அழுத்தம் காரணமாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித விசாரணையும் இன்றி என்னை பணி நீக்கம் செய்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் இதேபோன்று சில பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கல்வித்துறை தலைவர் சுசில் கவுதம் மீது தாக்குதல் நடத்தினார்கள். கிருபாசங்கர், ஜெய்சங்கர் மீதும் தாக்குதல் நடத்தினார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தால் கும்பல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அச்சத்தை வெளிபடுத்தி உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களை தாக்கினார்கள். தற்போது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதலை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக வளாகத்தில் என்றும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகி வருகிறது என கூறினார்.

பல்கலைக் கழகங்களில் முஸ்லீம்கள், தலித்துகள், சமூக செயற்பாட்டாளர்கள் சமீப காலங்களாக இந்துத்துவ கும்பல்களால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

படிக்க : வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

கடந்த மே மாதம், லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர், ரவிகாந்த் சாந்தன், ஒரு ஊடக நிகழ்ச்சியில் ஞானவாபி மசூதி குறித்து வரலாற்று புத்தகத்தில் இருந்து ஒரு மேற்கோள் எடுத்து கூறினார். புத்தகத்தில் உள்ள மேற்கோள்களை எடுத்து கூறியதையே, இந்து விரோத கருத்து என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் ஏ.பி.வி.பி மாண குண்டர்கள்.

தற்போது பேராசிரியர் கவுதம் தாக்கப்பட்டுள்ளார். அவர் தெய்வங்களை கேலி செய்யவில்லை. தவறாக பேசவில்லை. இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு முரணாகவும் பேசவில்லை. ஆனாலும், பாசிச கும்பலால் வேட்டையாடப்பட்டு வருகிறார்.

நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

பல்கலைக் கழகங்களில் செயல்பட்டு வரும் ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவாரி கும்பலிடமிருந்து பல்கலைக் கழகங்களை மீட்டெடுக்க களமிறங்க வேண்டியது அவசியமாகியது.


தங்கபாலு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க