கடந்த ஜூன் 30-ஆம் தேதி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 120 தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனுடன் பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான வசதி, பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புனரமைக்கப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையையும் திறந்து வைத்தார். இப்பேருந்துகளில் மாநகரப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவில்லி, தண்டையார்பேட்டை-1 ஆகிய ஐந்து பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு வங்கியின் பங்களிப்புடன் ரூ.697 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இப்பேருந்தில் சீட் பெல்ட், சி.சி.டி.வி. கேமரா, கைப்பேசி சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் அதிநவீன வசதிகள் இருப்பதாகவும் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமின்றி, புதிய தலைமுறை, பாலிமர் உள்ளிட்ட ஊடகங்களும் மின்சாரப் பேருந்துகளின் சிறப்பம்சங்களை புகழ்ந்து செய்திகளை வெளியிட்டன.
ஆனால், இம்மின்சாரப் பேருந்துகள் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தினால் இயக்கப்படாமல், மொத்த செலவு ஒப்பந்த (Gross Root Contract) திட்டத்தின் கீழ் கார்ப்பரேட்டுகளால் இயக்கப்படுவது பற்றி எவரும் வாய்திறக்கவில்லை. அதாவது இதுநாள்வரை அரசு போக்குவரத்துக் கழகத்தால் செய்யப்பட்டுவந்த பேருந்துகளை வாங்குவது, இயக்குவது மற்றும் பராமரிப்பதை இனி கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும்; அதற்கான செலவினத்தை அரசு கொடுத்துவிடும் என்பதே மொத்த செலவு ஒப்பந்த முறையாகும். இது, அவுட்சோர்ஸ் என்ற பெயரில் போக்குவரத்துத்துறையின் பெரும் பணிக்குள் கார்ப்பரேட்டுகளை திணித்து போக்குவரத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டத்தின் அங்கமாகும்.
படிக்க: தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!
அதனடிப்படையில், 625 மின்சாரப் பேருந்துகளை (225 குளிர்சாதனப் பேருந்துகள், 400 குளிர்சாதனமற்ற பேருந்துகள்) இயக்குவதற்கு அசோக் லேலண்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் துணை நிறுவனமான “ஓ.எச்.எம். குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்” என்ற கார்ப்பரேட் நிறுவனத்துடன் மொத்த செலவு ஒப்பந்த முறையில் ஒப்பந்தமிட்டுள்ள தி.மு.க. அரசு, கிலோமீட்டர் ஒன்றுக்கு குளிர்சாதனமற்ற பேருந்துகளுக்கு ரூ.77.16, குளிர்சாதனப் பேருந்துகளுக்கு ரூ.80.86 வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பேருந்துகளை இயக்குவதற்கான செலவின தொகையை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் ஓ.எச்.எம். நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு வழங்க வேண்டும். மேலும், பேருந்துகளை ஏற்பாடு செய்வது, பராமரிப்பது, ஓட்டுநர்களை நியமிப்பது ஆகிய பணிகளை ஓ.எச்.எம். மேற்கொள்ளும். பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்களைத் தீர்மானிப்பது, நடத்துநர்களை காண்டிராக்ட் முறையில் நியமிப்பது ஆகிய பணிகளை தி.மு.க. அரசு மேற்கொள்ளும். வசூலாகும் பயணக் கட்டணம் அரசினுடையது.
தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் நாள்தோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுவரும் நிலையில், தி.மு.க. அரசு ஏன் கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டு மின்சாரப் பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்? சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் மூலம் இயக்கி நூற்றுக்கணக்கானோருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்காமல் ஓட்டுநர்-நடத்துநர் பணிகளை ஏன் காண்டிராக்ட்மயமாக்க வேண்டும்? ஆகிய கேள்விகள் நமக்கு எழுகின்றன.
இங்குதான் போக்குவரத்துத்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற தி.மு.க. அரசின் கொள்கை ஒளிந்திருக்கிறது. போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதைக் காரணம் காட்டி புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அரசால் முதலீடு செய்ய முடியாது என்று காரணம் கூறி கார்ப்பரேட்டுகள் மூலம் பேருந்துகளை வாங்கி இயக்குகிறது தி.மு.க. அரசு. இதனை பொறுத்தவரையில், போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.50 செலவாவதாகவும் அதில் ரூ.30 மட்டுமே வருமானமாக வரும் நிலையில், ரூ.20 பற்றாக்குறை ஏற்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நட்டத்தால் அரசால் பேருந்துகளை வாங்க முடியாது என்று கூறும் தி.மு.க. அரசு, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.77 முதல் ரூ. 80 வரை கார்ப்பரேட் நிறுவனத்திற்குக் கொடுக்க ஒப்பந்தமிட்டிருப்பது அதன் கார்ப்பரேட் பாசத்தை அம்பலப்படுத்துகிறது.
படிக்க: லெட்டர் பேட் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், தி.மு.க அரசின் துரோகமும்
நட்டத்திற்குக் காரணமாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்துத் துறைக்குள் கார்ப்பரேட்களை திணிக்கிறது தி.மு.க. அரசு. இந்த ஒப்பந்தமானது நட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதுடன் ஒட்டுமொத்த போக்குவரத்துத்துறையையும் கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்யவே வழிவகுக்கும்.
மேலும், சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இனி அறிமுகப்படுத்தப்படும் புதிய பேருந்துகளும் மொத்த செலவு ஒப்பந்த முறையிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, இனிவருங்காலங்களில் தமிழ்நாட்டின் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்கும் பணிகள் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்படுவதோடு, போக்குவரத்துத் துறை நட்டத்தை காரணம் காட்டியும் கார்ப்பரேட்டுகளின் இலாப வெறிக்காகவும் கட்டண உயர்வு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் மீது பொருளாதார பயங்கரவாதம் ஏவிவிடப்படும் பேரபாயம் இதன் பின்னணியில் ஒளிந்துள்ளது.
அதேபோல, ‘வளர்ச்சி’ என்ற பெயரில் போக்குவரத்துத் துறையில் கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் கார்ப்பரேட்மயமாக்க நோக்கத்திலிருந்தே அமல்படுத்தப்படுகின்றன. சிங்கார சென்னை பயண அட்டை (Singara Chennai Travel Card) திட்டம், மெட்ரோ ரயில்களைப் போல நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகும். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் புதிய பேருந்து நிலையங்களைக் கட்டுவதும் பழைய பேருந்து நிலையங்களை புனரமைப்பதும் அரசு-தனியார் கூட்டு (PPP – Public-Private Partnership) முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டத்தைப் போல, பிற பேருந்து நிலையங்களையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கெடுநோக்கத்தை கொண்டதாகும்.
காலிப் பணியிடங்களை நிரப்பு; ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்று உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிவரும் போதிலும், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க தி.மு.க. அரசு மறுப்பதற்கும் அதன் கார்ப்பரேட்மயக் கொள்கையே காரணமாகும்.
தி.மு.க. அரசு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற கனவிற்காக, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அரசின் பல துறைகளை கார்ப்பரேட்மயமாக்குவதைப் போல, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தாலும் தொழிலாளர்களின் உழைப்பாலும் உருவாக்கப்பட்ட போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட்மயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
ஆகவே மொத்த செலவு ஒப்பந்த முறையில் பேருந்துகள் இயக்கப்படுவதையும் தி.மு.க. அரசின் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கைகளையும் தடுத்த நிறுத்த வேண்டியதும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram