பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்

தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.

0

ஜூலை 8 ஆம் தேதி முதல் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் மூன்று நாட்கள் பாடம் நடத்துவர். அதற்காக மாதம் 12,500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் 12 வருடங்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கை 181 இல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்தும் ஆசிரியர்களின் எந்த வித கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றி வருகிறது.

இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி அன்று முதல் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தங்களுக்கு வாக்குறுதி அளித்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாவது நாளான நேற்று (12.07.2025) டிபி ஐ அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


படிக்க: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க. அரசு


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில் “மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் மாற்றுத்திறனாளிகளான 260 ஆசிரியர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ”பணி நிரந்தரம் செய்வோம் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தை நடத்திவருகிறோம். பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்திற்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ”போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே. ராபர்ட் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTO JIO) பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க அரசின் இந்த கார்ப்பரேட்மய கொள்கை காரணமாகவே ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.

எனவே, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் அனைத்து பிரிவு ஆசிரியர்களும் ஆசிரியர் கூட்டமைப்புகளும் இந்த டிஜிட்டல்மய-கார்ப்பரேட்மய கொள்கைக்கு எதிராக அணிதிரள வேண்டும். கல்வியை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் இந்த நயவஞ்சக திட்டத்திற்கு எதிராக மாணவர்கள்-ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க