சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அஜித்குமார் போலீசால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், போலீசின் லாக்கப் படுகொலைகளுக்கெதிரான விவாதங்கள் பரவலாக நடைபெறுகின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீசால் லாக்கப் படுகொலை செய்யப்பட்ட போதும் இதேபோன்ற விவாதங்கள் எழுந்தன. ஆனால், அதன் பிறகு தி.மு.க ஆட்சியமைத்த பின்பும் லாக்கப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன. இப்படுகொலைகளில் ஈடுபட்ட போலீசாருக்கும் இதுவரை எந்த தண்டனையும் கொடுக்கப்படவில்லை. மாறாக, அதிகார வர்க்கத்தின் உதவியோடு வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அஜித்குமார் படுகொலையின் போதும், முதலில் இப்பிரச்சினையை தி.மு.க அரசு அலட்சியமாகவே கையாண்டது. பல்வேறு தரப்பிலான கடுமையான போராட்டங்கள், விமர்சனங்களைத் தொடர்ந்தே கீழ்நிலை போலீசார் ஐந்து பேரை மட்டும் இடைநீக்கம் செய்து, கைது செய்துள்ளது. அதிலும் கொலை வழக்கு பதிவு செய்யாமல், சந்தேகத்துக்குரிய மரணம் என்ற அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் மன்னிப்பு கேட்டது; அஜித்குமார் தம்பிக்கு அரசு வேலையும், அவரது குடும்பத்திற்கு பட்டாவும் வழங்கப்பட்டது (அரசு வழங்கிய இந்த நிவாரணம் குறித்து அஜித்குமாரின் தம்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது) ஆகியவையும் மக்கள் போராட்டத்தின் நெருக்கடியால் மேற்கொள்ளப்பட்டவையே.
ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை என்பது இதிலிருந்து வெட்டவெளிச்சமாகிறது. இது ஏன் என்பதுதான் நம் முன்னுள்ள கேள்வியாகும்.
படிக்க: திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை: கொலைகார போலீசை கைது செய்
கட்டமைப்பு ரீதியாகவே, போலீசு, இராணுவம் உள்ளிட்ட அதிகார வர்க்க உறுப்புகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷின் காலனியாதிக்க காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த அதிகார வர்க்கக் கட்டமைப்புகள், 1947-ஆம் ஆண்டு போலி சுதந்திரத்திற்கு பிறகு சிற்சில மாற்றங்களுடன் அப்படியே பெயர்த்தெடுத்து நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் படுகொலை, மாஞ்சோலை படுகொலை, பரமக்குடி படுகொலை, வாச்சாத்தி வன்கொடுமை, ஜெயராஜ் – பென்னிக்ஸ் லாக்கப் படுகொலை முதல் பல்வேறு காலகட்டங்களில் போலீசால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் லாக்கப் படுகொலைகளின் அனுபவங்கள் என்ன? பெரும்பாலும் தவறு செய்தவர்களின் மீது கொலைவழக்கு கூட பதிவு செய்யப்படுவதில்லை என்பதும், அவர்கள் அதிகார வர்க்கத்தால் தப்ப வைக்கப்படுகிறார்கள் என்பதும்தான். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னரே, வாச்சாத்தி கொடூரத்திற்குப் பெயரளவிற்கான தண்டனை – தீர்ப்பு வந்தது என்பதே உண்மை.
இத்தகைய படுகொலைகள் நடக்கும்போது, விவாதங்கள் எழுவதையும், பின்பு பழையபடி போலீசின் அடக்குமுறைகள் வழமை போல தொடர்வதையும்தான் நாம் காண்கிறோம். அந்த அடிப்படையில் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் சாதாரண மக்களை போலீசு கையாள்கிறது, ஒடுக்குகிறது. இவற்றுக்கு எதிராக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கையும் அச்சமும்தான் சாதாரண மக்கள் மத்தியில் நிரந்தரமாக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசின் தனிப்படைகள் கலைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. இந்தச் சீர்திருத்தம் என்பது ஏற்கெனவே உள்ள கட்டமைப்பிற்குள் தீர்வை முன்வைப்பதாகும். அரசின் தனிப்படைகள் கலைக்கப்பட்டாலும் அடக்குமுறையை நிறுத்த முடியாது. வேறு வகையில் அடக்குமுறைகள் ஏவப்படுவதற்குத்தான் வாய்ப்புள்ளது.
படிக்க: சிவகங்கை – திருப்புவனம் லாக்கப் டெத்! | தீர்வு என்ன? | தோழர் மருது
உண்மையில், நிரந்தரமாக இந்தப் படுகொலைகளை ஒழித்துக் கட்டுவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
போலீசு நிர்வாகம் மக்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட வேண்டும். போலீசு பணிக்குத் தேர்வாகும் ஊழியர்கள், முன்னரே, மக்களுக்கு சேவை செய்வதையும், சமூக நலப்பணிகளில் ஈடுபடுவதையும் அவசியம் செய்தாக வேண்டும். அது குறித்த சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படையிலான தகுதிகளைக் கொண்டே போலீசு பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய நடைமுறையே போலீசு என்ற கட்டமைப்பை ஜனநாயக விழுமியங்கள் கொண்டதாக மாற்றும். இதன் மூலம்தான் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும். இந்த அடிப்படையில், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
ஆனால், தற்போது நிலவிவரும் பாசிச சூழலில், கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரமாக அமல்படுத்துவதற்கு, மக்களை மென்மேலும் ஒடுக்க போலீசு ஆட்சி நிறுவப்படுவது ஆளும் வர்க்கங்களுக்கு அவசியமானதாக உள்ளது. எனவே, மேற்கண்ட மாற்றங்களை இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் செய்வதற்கு ஆளும் வர்க்கங்களும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஒருபோதும் அனுமதிக்காது.
மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுக் கட்டமைப்பில்தான் உருவாக்க முடியும். அத்தகைய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான பாதையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதே நிரந்தரமான தீர்வு.
(ஜூலை 7 அன்று வெளியான இக்கட்டுரையில் புதிய விவரங்கள் சேர்க்கப்பட்டு தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது)
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram