அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,
கடந்த 17 ஆண்டுகளாக உழைக்கும் மக்களின் இணையக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் “வினவு” ஊடகம் இன்று வெற்றிகரமாக பதினெட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வினவிற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்துவரும் வாசர்களுக்கும் தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2008-ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று தொடங்கப்பட்ட வினவு வலைத்தளம், இன்று லட்சக்கணக்கான வாசகர்களுடனும், யூடியூப் சேனலில் 1 லட்சத்து 24 ஆயிரம் சந்தாதாரர்களுடனும், சமூக வலைத்தளங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடனும் 18-வது ஆண்டில் நுழைகிறது. டிஜிட்டல் உலகம் வளர்ச்சியடையாத காலத்தில், தொடங்கப்பட்ட வினவு தற்போது செயற்கை நுண்ணறிவு காலகட்டத்திலும் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வருகிறது. வலைத்தளம் என்ற வகையிலும் வினவு வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு பல தோழர்களின் அர்ப்பணிப்பான உழைப்பும், சமூக மாற்றத்தை விரும்பக்கூடிய ஜனநாயக சக்திகளின் ஆதரவும்தான் முதன்மை காரணம்.
கடந்த ஓர் ஆண்டுகால பயணம்…
பாசிச மோடியின் கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தொழில் நசிவு என பாசிசத் தாக்குதல்களுக்குள்ளாகி வருகின்றனர். தலித்-பழங்குடியின மக்கள், இஸ்லாமிய-கிறித்தவ சிறுபான்மை மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் காவிக் குண்டர் படையால் படுகொலை செய்யப்படுகின்றனர். ஊடகங்களின் குரல்வளைகள் முற்றிலும் நசுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், இந்திய உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்களுக்கு எதிராக வினவு ஊடகம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது.
குறிப்பாக, இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டுவரும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய-கிறித்தவ சிறுபான்மை மக்களும் தலித் மக்களும் அனுதினமும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சட்டப்பூர்வமாகவும் காவி குண்டர் படைகள் மூலமாகவும் இஸ்லாமிய-தலித் மக்கள் மீது பாசிச தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய மக்களின் மத நிறுவனங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கிறித்துவ மக்களின் பிணங்கள் கூட தோண்டப்பட்டு வீசியெறியப்படும் கொடூரம் அரங்கேறுகிறது. சிறுபான்மையின மக்களிடையே பாசிசக் கும்பல் அச்ச உணர்வை விதைத்துவரும் இச்சூழலில், வினவு சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது.
அதேபோல், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் கனிமவள சூறையாடல் தீவிரமடைந்து வருகிறது. அதானி-அம்பானி வகையறா கார்ப்பரேட் கும்பலின் கட்டற்ற கனிம வளச் சூறையாடலுக்குத் தடையாக இருக்கும் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் பல்வேறு தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்காகத்தான், மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீது இன அழிப்புப் போர் தொடுக்கப்பட்டு வருகிறது, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களும், பழங்குடியின மக்களும் நரவேட்டையாடப்பட்டு வருகின்றனர். பாசிச கும்பலின் இந்த சதித்திட்டம் குறித்து வினவு தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. மேலும், பழங்குடி மக்களுக்காகச் செயல்படும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது, கொல்லப்படுவது; பழங்குடி மக்கள் மீது இந்து மதவெறி கும்பல் தாக்குதல் தொடுப்பது; பழங்குடி மக்களிடையே ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து முனைவாக்கம்; ஆபரேஷன் ககர் என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான துணை ராணுவப் படையின் வன்முறைகள், பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து வினவு தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.
மறுபுறம், பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் கார்ப்பரேட் சேவைக்காக உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல், தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறித்தும், அதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்தும் வினவு பதிவு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பரந்தூர் மக்கள் போராட்டம், சிப்காட் எதிர்ப்பு போராட்டம், நகராட்சி விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டம், கர்நாடகாவில் தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம், கேரளாவில் விழிஞ்சம் துறைமுக எதிர்ப்பு போராட்டம், மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டம் போன்றவை அதில் குறிப்பிடத்தகுந்தவை.
குறிப்பாக, தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு காரணமாக இங்கு நேரடியாக காலூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற சதித்திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. மறுபுறம், ஆளும் தி.மு.க அரசோ சாதியத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை முற்றிலும் மறுப்பதோடு, அதனைத் திட்டமிட்டு மூடிமறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் குறித்து வினவு தளம் தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதுடன், அதற்குப் பின்னணியில் இருக்கும் சங்க பரிவாரக் கும்பலின் தொடர்பை அம்பலப்படுத்தி வருகிறது.
அதேபோல், மோடி ஆட்சியில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதத் தாக்குதல்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக, பசுவளைய மாநிலங்களில் தலித் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்படுவது, பொதுவெளியில் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற கொடூர சம்பவங்கள் குறித்தும் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்முறை, கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை, கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை போன்ற பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வினவு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளது.
காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலைக் காரணம் காட்டி, மோடி-அமித்ஷா கும்பல் ஆபரேஷன் சித்தூர் என்ற பெயரில் நாடுமுழுவதும் இந்துமத வெறியையும் தேசவெறியையும் கிளப்பிவிட்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதாக அறிவித்தது. மோடியின் அடிமை ஊடகங்கள், கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் மோடியின் கட்டளைக்கிணங்க மக்களை போர்வெறி, தேசவெறி, இந்துமத வெறியில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது வினவு தளம் “வேண்டாம் போர்”, “வேண்டாம் மோடி”, “வேண்டும் ஜனநாயகம்” என்று முழங்கியது. பஹல்காம் தாக்குதலும் ஆபரேஷன் சிந்தூரும் பாசிச கும்பலின் துருப்புச்சீட்டுகள் என்பதை அம்பலப்படுத்தியது.
இவையன்றி, டெல்லி விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, அதானி-அம்பானி கும்பலின் கார்ப்பரேட் கொள்ளை, பாசிச கும்பலின் தேர்தல் மோசடிகள், அரசு கட்டமைப்பு பாசிசமயமாகி வருவது என அனைத்தின் மீதும் மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் நிலைப்பாடுகளைத் தெரிவித்து வினையாற்றி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் இப்பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து வினவு குரல் கொடுக்கும்போது சங்கப் பரிவார கும்பலிடமிருந்து தொடர்ச்சியான மிரட்டல்களை வினவு தளம் எதிர்கொண்டுள்ளது. ஆனால், அம்மிரட்டல்களைத் தாண்டி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள், ஜனநாயக சக்திகள் வினவை தொடர்பு கொண்டு தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர். வினவிற்கு மக்களிடம் கிடைக்கும் இந்த அங்கீகாரம் எம்மை மேலும் உற்சாகத்துடன் பாசிசத்திற்கு எதிராகக் களமாட வைக்கிறது.
திருப்பரங்குன்றம்: சங்கிக் கும்பலை மண்ணைக் கவ்வச் செய்ததில் வினவின் பங்கு
மதுரையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை எதிர்த்து இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல் கலவர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்துமுனைவாக்கம் மூலம் காலூன்றத் துடிக்கிறது. சங்கிக்கும்பலின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் விதமாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்திற்கு வினவு தளம் உறுதுணையாக இருந்து வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தையொட்டி மட்டும் 50-க்கும் மேற்பட்ட காணொளிகள் வினவு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கிக் கும்பல் தங்களின் அடிமை ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்துமதவெறி பிரச்சாரத்திற்கு சவால்விடும் விதமாக, “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” என்ற புரட்சிகர அமைப்புகளின் அரசியலை முன்வைத்து, மதுரையின் மதநல்லிணக்க மரபு உயர்த்திப் பிடித்து வினவு பிரச்சாரம் செய்தது. மதுரையில் நடந்த இந்து முன்னணி மாநாடு கலவரத்திற்கானது என்ற பொதுக் கருத்து மக்களிடம் உருவாக்கப்பட்டதிலும் இந்து முன்னணி கும்பலின் ‘முருக பக்த’ மாநாடு படுதோல்வியடைந்ததிலும் வினவின் தொடர்ச்சியான பிரச்சாரம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறிக்கு எதிரான குரல்!
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரைக் கண்டித்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வினவு தளம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது. காசா மக்கள் மீதான மனிதத்தன்மையற்ற-சட்டவிரோத தாக்குதல்கள், பட்டினி போர், அமெரிக்க-இந்திய ஆளும் வர்க்கங்களின் துரோகம், சர்வதேச அளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் என ஒவ்வொன்றையும் பதிவு செய்து தமிழ்நாட்டில் பாலஸ்தீன ஆதரவு உணர்வை ஏற்படுத்துவதில் வினவு முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் காசா மீதான இன அழிப்புப் போர் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவிடப்பட்டுள்ளன.
இவையில்லாமல், காணொளிகள், இணைய போஸ்டர்கள் என பல வடிவங்களில் பாலஸ்தீன ஆதரவு கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் பலர் வினவு இணைய போஸ்டர்களை தங்களுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-லும் (Whatsapp Status) முகப்பிலும் (Display Picture) வைத்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்தபோது “ஈரான் மீதான போரை நிறுத்து” என்று இணைய போஸ்டர்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர்வெறித் தாக்குதலைக் கண்டிக்காத இந்திய அரசைக் கண்டித்தும் இஸ்ரேலை ஆதரித்த ஜி7 நாடுகளைக் கண்டித்தும் உடனடியாக கட்டுரைகள் கொண்டு வரப்பட்டன. மேலும், மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக அமெரிக்க-இஸ்ரேல் ஏகாதிபத்தியங்கள் அடித்துவரும் கொட்டங்கள் குறித்து தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சர்வதேச அளவில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுதும் நடந்த மக்கள் போராட்டங்கள், அமெரிக்காவின் போர்வெறிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள், வங்கதேச மாணவர் எழுச்சி, கென்ய இளைஞர்கள் போராட்டம், உலகம் முழுவதும் தீவிரமடைந்துவரும் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் என பல்வேறு நாடுகளில் நடந்த நிகழ்வுகள் வினவு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வினவில் நேரலைகள், ஆவணப்படங்கள்
பாசிச எதிர்ப்பில் வினவின் புதிய பரிமாணங்கள்!
2023-ஆம் ஆண்டு வினவு 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததையொட்டி வெளியிடப்பட்ட பதிவில், “தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் போராட்டங்கள், கூட்டங்கள் ஆகியவற்றை நேரலையாகவோ அல்லது காணொளிகளாகவோ ஒளிபரப்ப வினவு தயாராக உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், கடந்த இரண்டாண்டு காலத்தில், மக்கள் கல்வி கூட்டியக்கம், மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு, வழக்குரைஞர்களின் ஜாக் கூட்டமைப்பு, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல கூட்டமைப்புகளின் கூட்டங்களும் முக்கிய நிகழ்வுகளும் வினவு யூடியூப் சேனல் சார்பாக நேரலை செய்யப்பட்டன. பல ஊடகங்கள் இக்கூட்டங்களைப் புறக்கணித்த நிலையில் இக்கருத்துகளை வினவு ஆயிரக்கணக்கான மக்களிடம் சென்று சேர்த்துள்ளது.
மேலும், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள், கட்சிகளின் நிகழ்வுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இவையன்றி பல அமைப்புகளின் கூட்டங்கள், மக்கள்-மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் போன்றவையும் வினவின் சமூக ஊடகப் பக்கங்களில் நேரலையாக பதியப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொடங்கி அதன் தொடர்ச்சியாக நடந்த அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் மீதான நிலைப்பாடுகள் குறித்து வினவு யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட்டன. இந்நேரலை நிகழ்வுகளில், ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரக் கழக தோழர்கள், இன்றைய பாசிச சூழல்களில் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்ப்பது, பாசிச கும்பலின் தேர்தல் தில்லுமுல்லுகள், எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதங்கள், உழைக்கும் மக்களின் போராட்டங்கள் என மக்களின் பக்கம் நின்று தேர்தல் முடிவுகளைப் பரிசீலித்ததுடன் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான வழிமுறை குறித்தும் எடுத்துரைத்தனர்.
அதேபோல், இந்த ஓராண்டில் வினவு யூடியூப் தளத்தில் ஆறு ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படங்களின் முக்கியத்துவமே உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பதிவிடுவதில்தான் அடங்கியுள்ளது. உழைக்கும் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கிறார்கள், சாதித் தாக்குதல்கள் மற்றும் சங்கிகளின் கலவர முயற்சிகளை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட ஆவணப்படங்களில், “கீழ்வெண்மணி: செங்கொடியின் மண்!” காணொளி 40,000 பார்வைகளையும் “திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்” காணொளி 48,000 பார்வைகளையும் கடந்து சென்றுள்ளது. மேலும், மக்கள் கருத்துகளும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எம்முடன் தொடர்ந்து பயணியுங்கள்!
வினவு இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு வினையாற்றியிருந்தாலும், இந்த டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப வினவு ஒரு ஊடகமாக செயல்படுவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் இன்னும் வினவு ஊடகத்தைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, கடுமையான நிதி நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளையும் வினவு சந்தித்து வருகிறது.
சொற்ப அளவிலான ஊழியர்களின் கூட்டுழைப்பாலும் தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் உதவியுடன் வினவு மேற்கொண்டுவரும் இப்பணிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தோழர்கள், வாசகர்கள், ஜனநாயக சக்திகளின் ஆதரவும் உதவியும் இன்றியமையாதது. எந்தவொரு விளம்பரமுமின்றி நிதித்தேவைக்கு மக்களை மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஊடகமாக வினவு செயல்பட்டு வருகிறது. எனவே வினவிற்கு நிதியளித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், போராட்டக்களங்களில் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் வினவுடன் இணைந்து கொள்ளுமாறும் தங்களது பகுதியில் மக்கள் போராட்டங்கள் குறித்த செய்திகளை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
பாசிச அபாயம் பற்றிப் படர்ந்துவரும் இன்றைய சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும், இன்னும் ஊக்கத்துடனும் நிறுவனமயமாகவும் ஊடகப் பணிகளில் வினவு ஈடுபடும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாசிச எதிர்ப்பில் உழைக்கும் மக்களின் இணையக் குரலாகவும்
உரிமைக் குரலாகவும் வினவு என்றென்றும் ஒலிக்கும்…
ஆசிரியர் குழு, வினவு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram