கன்வார் யாத்திரை: குறிவைக்கப்படும் இஸ்லாமியர்கள்!

கடைகளில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து கடவுளான வராகரின் (பன்றி உருவத்தில் விஷ்ணு) படங்களை வைப்பது, ”ஓம்” என்று எழுதப்பட்ட காவிக் கொடியை நட்டு வைப்பது என்று அட்டூழியம் செய்துள்ளனர்.

0

த்தரப் பிரதேச மாநிலத்தில் ஜூலை 11 ஆம் தேதி முதல் கன்வார் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் “உணவு பாதுகாப்பு செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ.ஆர் (QR) குறியீட்டை” தங்கள் கடைகளின் வைத்திருக்க வேண்டும் என்று யோகி அரசு உத்தரவிட்டுள்ளது.

கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உணவகத்தின் உரிமையாளர் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ள முடியும். “இதன் மூலம் உணவின் தரம், சேவை குறித்து புகார் அளிக்கலாம்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு இஸ்லாமியர்களின் கடைகளைப் புறக்கணிப்பதற்கும் அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பதற்கும்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜூலை 9 ஆம் தேதி அன்று முசாபர் நகரைச் சேர்ந்த யஷ்வீர் மகாராஜ் (Yashveer Maharaj) என்னும் இந்துத்துவ சாமியாரும் அவனுடைய சீடர்களும் காசியாபாத்தின் மோகன் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கு கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள ’சனாதனமற்றவர்’களை (இஸ்லாமியர்கள்) சுத்தப்படுத்துவதாகக் கூறி கடைகளில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து கடவுளான வராகரின் (பன்றி உருவத்தில் விஷ்ணு) படங்களை வைப்பது, ”ஓம்” என்று எழுதப்பட்ட காவிக் கொடியை நட்டு வைப்பது என்று அட்டூழியம் செய்துள்ளனர். சில இஸ்லாமிய கடைக்காரர்கள் மீது தாக்குதலும் தொடுத்துள்ளனர். இதில் கேலிக்கூத்து என்னவென்றால், இந்த இந்துத்துவ கலவர சாமியாருக்கும் பாதுகாப்பு வழங்க இரண்டு போலீசுகாரர்களை யோகி அரசு நியமித்துள்ளது.

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வீர் ”யாத்திரையின்போது கன்வாரியாக்கள் எங்கு உணவு எடுக்க வேண்டும்; எங்கு பொருட்களை வாங்க வேண்டும் என்று வழிகாட்டுவது எனது நோக்கம். சனாதன தர்மத்திற்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். கன்வார் பாதைகளைத் தொடர்ந்து சுத்திகரிப்பேன்” என்று திமிராகப் பேசியுள்ளான்.

மதவெறியுடன் பேசிய யஷ்வீரை போலீசார் கைது செய்யவில்லை. மாறாக யஷ்வீரின் சில ஆதரவாளர்களுக்குத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நோட்டீஸ் மட்டும் அனுப்பி தங்களுடைய பணியை முடித்துக் கொண்டனர்.


படிக்க: கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்


இது குறித்து முசாபர்நகரின் தலௌடாவில் (Dalauda) உள்ள தாபா உரிமையாளரான தீரஜ் மாலிக், “ஹரியானாவைச் சேர்ந்த நான்கு கன்வாரியாக்கள் சப்பாத்தி, அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளைக் கேட்டார்கள். ஆனால் உணவு சாப்பிட்ட பிறகு நாற்காலிகளை உடைக்கத் தொடங்கினர். அவர்கள் காய்கறிகளில் வெங்காயம் இருப்பதாகவும், அதை அவர்கள் ஷ்ரவண மாதத்தில் (வட இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து நாள்காட்டியின் 5-வது மாதம்) சாப்பிடக்கூடாது என்றும் கூறினர். சாப்பிட்ட பிறகு ஒரு பிரச்சினையை உருவாக்குவதற்குப் பதிலாக வெங்காயம் சாப்பிட மாட்டோம் என்று முன்பே எங்களிடம் சொல்லியிருக்க வேண்டும்,” என்று காவி கும்பலின் திட்டமிட்ட தாக்குதலை அம்பலப்படுத்திப் பேசியுள்ளார்.

குறிப்பாக ஜூலை 8 ஆம் தேதி அன்று கன்வார் யாத்திரை தொடர்பாக மீரட்டில் ஆய்வு செய்த உத்தரபிரதேச போலீசு இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கிருஷ்ணா, “கன்வார் யாத்திரை வழித்தடங்களில் தாபா உரிமையாளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கவோ கேட்கவோ உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. விதியை மீறுபவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது வெறும் வெற்று வார்த்தை மட்டும்தான்.

கடந்த ஆண்டு கன்வார் யாத்திரையின் போது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் பா.ஜ.க அரசுகள் கன்வார் யாத்திரையின் வழியில் உள்ள உணவகங்களில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டன. பின்னர் ஜூலை 22 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் பெயர்களைக் குறிப்பிடத் தேவையில்லை; உணவுப் பட்டியலை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது. உணவகங்களின் முன்பு பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்கிற பாசிச யோகி அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடையும் விதித்திருந்தது.

ஆனால் இவ்வாண்டு பெயர்ப் பலகை வைப்பதற்குப் பதிலாக கியூ.ஆர் குறியீடு மூலம் டிஜிட்டல் முறையில் கடைகளின் உரிமையாளர்களின் பெயரைத் தெரிந்துகொண்டு தாக்குதல் தொடுக்க காவி கும்பலுக்கு வழிவகை செய்து கொடுத்துள்ளது யோகி அரசு.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க