கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையில் களமிறங்கியுள்ள இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ன்வார் யாத்திரை வழித்தடத்தில் வைக்கப்படும் உணவுக் கடைகளின் உரிமையாளர் பெயர் மற்றும் ஊழியர்களின் பெயர்களை அடையாள அட்டையாக வைக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநில பா.ஜ.க அரசுகள் உத்தரவிட்டன. முஸ்லிம் மக்களை அடையாளம் காணவும், அவர்கள் விற்கும் உணவுப் பொருட்களை வாங்க விடாமல் தடை செய்து மதக் கலவரத்தை தூண்டுவதற்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பா.ஜ.க அரசுகளின் இந்த கீழ்த்தரமான உத்தரவு மத மோதலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், எதிர்பார்த்தது போலவே உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையில் களமிறங்கியுள்ள இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சஹாரன்பூர்

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் அமன் என்ற இஸ்லாமியர் உணவுக் கடை வைத்திருந்தார். ஜூலை 23 அன்று நள்ளிரவு கன்வார் பக்தர்கள் என்று கூறி கடைக்குள் நுழைந்த இந்துத்துவ குண்டர்கள், “யாத்திரை மேற்கொள்ளும் பகுதியில் முஸ்லிம்கள் கடை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளோம். எதற்கு கடை வைத்துள்ளீர்கள்” என கேள்வி எழுப்பி அமன், அவரது மைத்துனர் மோனு ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் முன்னிலையிலேயே அமனின் இருசக்கர வாகனத்தை இந்துத்துவா குண்டர்கள் அடித்து நொறுக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அவர்கள் ஹரியானா மாநிலத்திலிருந்து சஹாரன்பூர் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமன் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளனர். அடையாளம் கண்ட பின்பும் இன்னும் அவர்களைக் கைது செய்யவில்லை.


படிக்க: உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி


ஹரித்வார்

பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஜூலை 24 அன்று கன்வார் யாத்திரையை இழிவுப்படுத்தியதாக கூறி இ-ரிக்ஷா ஓட்டுநர் சஞ்சய் குமார் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தடிமனான மரக் கட்டைகளால் தாக்குதலுக்கு உள்ளான சஞ்சய் குமார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்வார் யாத்திரையை இழிவுபடுத்தியதன் காரணமாகவே சஞ்சய் குமார் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியது. ஆனால், ஹரித்வார் மாவட்ட எஸ்.பி. பர்மேந்திர தோபால், “கன்வார் யாத்திரை சென்றவர்களை சஞ்சய் குமார் இழிவுபடுத்தவில்லை. ஆனால் அவ்வாறு ஒரு பொய்யைக் கூறி சஞ்சய் குமார் மீது தாக்குதல் நடத்தி இ-ரிக்ஷாவை சேதப்படுத்தியுள்ளனர்” என அவர் கூறியுள்ளார். மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக மங்களூர் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார். இதன் மூலம் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் வன்முறையை தூண்டும் இந்துத்துவா குண்டர்களின் சதிச்செயல் அம்பலமாகியுள்ளது.

முசாபர்நகர்

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரின் மன்சூர்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், தாங்கள் சாப்பிட்ட மாம்பழக் கொட்டைகளை சாலையில் கொட்டி வைத்ததற்காக இந்துத்துவா கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், பெட்ரோல் பங்க் அறையின் ஒரு பகுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல முசாபர்நகரின் சிவில் லைன்ஸ் போலீசு நிலையத்திற்குட்பட்ட மீனாட்சி சவுக் பகுதிக்கு அருகே மனநலம் குன்றிய ஒருவரையும் இந்துத்துவா கும்பல் கொடூரமாகத் தாக்கியது. இதுபோன்று மேலும் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்று மாநில பா.ஜ.க அரசுகளின் கன்வார் யாத்திரை அறிவிப்புக்கு கடந்த ஜூலை 22 அன்று உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு ஜூலை 26 அன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒருவரின் பெயரினை தெரிவிக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்று கூறிவிட்டது.


படிக்க: உத்தரகாண்டில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவிக் குண்டர்கள்


கன்வார் யாத்திரை உணவகம் தொடர்பான சர்ச்சைக்குரிய உத்தரவை அமல்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதாக உச்சநீதிமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கே உரிய தொனியில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச அரசு. அந்த மனுவில், “அமைதியான மற்றும் ஒழுங்கான யாத்திரையை மேற்கொள்ளவே உணவகம் தொடர்பான பெயர்ப்பலகை வைக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக உணவகங்களின் பெயர் தொடர்பாக பல்வேறு குழப்பம் கிளம்புவதாக பக்தர்கள், பொதுமக்கள் கூறினர். இதன்காரணமாகவே கன்வார் யாத்திரை உணவக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

மத முனைவாக்கத்தை தீவிரப்படுத்த பாசிசக் கும்பல் திட்டமிட்டுச் செயல்படுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க