இயற்கை அன்னையின் மடியில் மட்டுமல்லாமல், தாமிரபரணி படுகொலைக்குப் பின் தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் தவிர்க்கவியலா இடத்தை பிடித்துவிட்டது மாஞ்சோலை. 1999-இல் படுகொலை நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் அந்த படுகொலையின் வடு இன்னும் மாறவில்லை. அதற்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை.
ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், அச்சுறுத்தும் வனவிலங்குகளுக்கு மத்தியிலும், மழை, வெயில் அனைத்தையும் தாண்டி தமது உழைப்பின் மூலம் நாம் அருந்தும் தேநீருக்கான தேயிலையை உற்பத்தி செய்த மாஞ்சோலை தொழிலாளர்களின் ரத்தத்தை அட்டையைப் போல் உறிஞ்சிய பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி (பி.பி.டி.சி) தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தைத் தர மறுத்தது. இதனால் தொழிலாளர்கள் போராடினர். போராடிய தொழிலாளர்களை போலீஸ் கைதுசெய்தது. பலகட்ட போராட்டங்களுக்குப் பின் தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், நியாயமான கூலி உயர்வு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பெண்கள், குழந்தைகள், உழைக்கும் மக்கள் ஆகியோர் ஊர்வலமாகச் சென்றனர்.
ஆனால் அமைதியான வழியில் போராடிய மக்களை போலீஸ் மறைந்திருந்து கல்லெறிந்து தாக்கியது. சிதறி ஓடிய மக்கள் மீது தடியடி நடத்தியது. தப்பிப்பதற்காக தண்ணீரில் குதித்து கரையேறியவர்களின் மண்டையை உடைத்து மீண்டும் தண்ணீருக்குள் தள்ளிக் கொன்றது போலீஸ். ஒரு வயது சிறுவன் உட்பட 17 பேர் இதில் கொல்லப்பட்டனர். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைச் சிதறடிக்க படுகொலை நிகழ்த்தியது அரசு. ஆனால் போராட்டம் இன்னும் ஓயவில்லை.
படிக்க: மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வாதாரத்தைக் காத்திடு! | ஆர்ப்பாட்டம் | நெல்லை
நெல்லை அருகே மணிமுத்தாறு அணைக்கு மேலே அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை ஏக்கருக்கு, ஆண்டுக்கு 10 ரூபாய் என்ற வீதத்தில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தது பி.பி.டி.சி நிறுவனம். ஆனால் இன்னும் 4 ஆண்டுகள் குத்தகை காலம் இருக்கும் போதே தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு விலக வேண்டிய நிறுவனம், குறைந்தளவு செட்டில்மென்ட் கொடுத்து தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. இதனால் தேயிலைத் தோட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து காப்புக் காடுகளாக அறிவித்தது. பல்வேறு கட்டப் போராட்டம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும் தொழிலாளிகளின் வாழ்வில் இன்னும் விடியல் வரவில்லை.
சுமார் 450 குடும்பங்களை உள்ளடக்கிய தொழிலாளர்கள் அனைத்து சாதிகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். தங்களுக்கு சமதளத்தில் சமத்துவபுரம் போன்ற குடியிருப்புகளைக் கட்டித்தர கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசோ, வெவ்வேறு இடங்களில் ஒதுக்குப்புறமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒதுக்குவதாகக் கூறியுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசு தருவதாகச் சொல்லும் ஆடு, மாடுகளை அடுக்கு மாடி குடியிருப்பில் எங்கே கட்டிப் போடுவது என கேட்கின்றனர் மக்கள்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்தாமல் அவர்களை கீழே அனுப்பக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, பேருந்து வசதியை நிறுத்துவது, மின்சாரம், தண்ணீரை நிறுத்துவது என்று ஏற்கனவே தொழிலாளர்களை வெளியேற்ற பி.பி.டி.சி நிறுவனம் கையாண்ட அதே உத்தியைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு ரௌடி போல நடந்து கொள்கிறது அரசு.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை மாஞ்சோலை மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் ஏதுமற்ற ஏதிலியை போல அவர்கள் துரத்தியடிக்கப்பட உள்ளனர்.
படிக்க: மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் | தோழர் வெற்றிவேல் செழியன்
அன்று தொழிலாளி வர்க்கத்தின் மீது அரசு நடத்திய தாக்குதலுக்கும், இன்று நடத்தும் தாக்குதலுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
சாதி – மத வேற்றுமையை தூக்கியெறிந்து ஒற்றுமையாக அன்று போராடிய தொழிலாளர்களின் சடலங்களை சாதியக் கண்ணோட்டத்துடன் ஒன்றாக அடக்கம் செய்ய மறுத்ததைப் போல, இன்றும் சாதி, மத பேதமற்று வாழும் தொழிலாளர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தாமல் சிதறடிக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் வர்க்கப் போராட்டத்தின், தாமிரபரணி படுகொலையின் ரத்த சாட்சியங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள். அந்த வர்க்க ஒற்றுமையைச் சிதறடிக்கிறது அரசு. இதனால் மாஞ்சோலை மக்களின் கோரிக்கையான, போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்காமல் திட்டமிட்டுத் தவிர்க்கிறது; போராட்ட அடையாளங்களை அழிக்கப் பார்க்கிறது.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற சட்டமியற்ற முயன்றது திராவிட மாடல் அரசு. தொழிலாளர்களின் போராட்டத்தினால் அது தடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றியத்தில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களுக்காக தொழிலாளர்களுக்கான 44 சட்டத் தொகுப்பை 4 சட்டத் தொகுப்பாக மாற்றியது. இன்னும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட்டேகளுக்கு ஆதரவான பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
இதற்காக உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகளை பலி கொடுக்கிறது. இதற்கு எதிரான மாற்றுக் கட்டமைப்பை முன்வைத்தும், மக்களுக்கான உரிமைகளை முன்வைத்து ”வேண்டும் ஜனநாயகம்” என்கிற அடிப்படையில் உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டிய கடமை நம்முன் உள்ளதை தாமிரபரணி படுகொலை நாள் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்
தூத்துக்குடி மாவட்டம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram