மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!

சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

துரையில் நடந்த ‘முருக பக்தர்’ மாநாட்டில் பேசிய பா.ஜ.க., இந்து முன்னணி தலைவர்கள், நீதிமன்றம் விதித்த ‘கட்டுப்பாடு’களை ‘மீறி’விட்டதாக ஜனநாயக சக்திகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் பேசக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை இந்து முன்னணி கும்பல் மீறிவிட்டதை முன்வைத்து, நீதிமன்றத்திலும் அதிகாரிகளிடமும் முறையிட்டு இந்து முன்னணி கும்பலுக்கு நெருக்கடி கொடுத்துவிடலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

ஆனால், மதக்கலவரத்திற்கு வித்திடும் மதுரை ‘முருக பக்தர்’ மாநாடே பா.ஜ.க. – இந்து முன்னணி சங்கப் பரிவாரக் கும்பலும் அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் ஒன்றிணைந்து நடத்தியதுதான் என்ற உண்மை இவர்களுக்கு புரியவில்லை.

அதிகார வர்க்கம்-நீதிமன்றத்தின் துணையுடன்
தொடங்கிய கலவர முயற்சிகள்

1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கும் ஒரு விரிந்த இந்துராஷ்டிரத் திட்டத்தின் அங்கம்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சினையாகும். அந்தவகையில், 1994-லிருந்தே திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபமேற்ற வேண்டுமெனக் கூறி இஸ்லாமியர்களுக்கெதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் இந்து முன்னணி கும்பல் செயல்பட்டு வருகிறது.

அரசு அதிகார மட்டத்தில் தனது விசுவாசிகளையும் சங்கிகளையும் பொருத்திக் கொண்டு சரியான அரசியல் தருணத்திற்காகக் காத்திருந்த இக்கும்பல், 2023-லிருந்து மீண்டும் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென்ற பிரச்சினையைக் கிளப்பி வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் துணையுடன் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

எந்த ஆதாரமுமின்றி இந்து முன்னணி கும்பலும் போலீசு-அதிகார வர்க்கமும் திட்டமிட்டு சதித்தனமாக இஸ்லாமியர்கள் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதைத் தடுத்தது. நீதிமன்றமும் திருப்பரங்குன்ற மலை விவகாரத்தை, தாவாக்குரிய விவகாரமாக்கி இஸ்லாமியர்கள் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதைத் தடுத்து நிறுத்தியது.

இஸ்லாமியர்களின் மத உரிமையைப் பறிக்கின்ற, மத நல்லிணக்கத்தை சிதைக்கின்ற இந்த நடவடிக்கைக்கெதிராக கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கோரியபோது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகச் சொல்லி போலீசும் நீதிமன்றமும் அனுமதி மறுத்தன.

ஆனால், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறும் அதே காலத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று இந்து முன்னணி கும்பலின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியதும் இதே அதிகார வர்க்கமும் நீதிமன்றமும்தான்.

பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில்தான் எச்.ராஜா, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்தார். சங்கப் பரிவாரக் கும்பலின் கூலிப்படை ஊடகங்களும் இஸ்லாமியர்களுக்கெதிராக தொடர்ச்சியான அவதூறுகளைப் பரப்பி வந்தன.

மாநாடு தொடர்பான மூன்று வழக்குகள்

இந்த பின்னணியில்தான் ஜூன் 22, ‘முருக பக்தர்’ மாநாட்டை அறிவித்தது இந்து முன்னணி கும்பல். சங்கிகளின் இந்த மாநாட்டிற்கு தடைவிதிக்க வேண்டுமென்று மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் சார்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன் சார்பாகவும் இம்மாநாட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இத்துடன், இந்து முன்னணியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கிய மதுரை போலீசு 52 கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளில் ஆறு கட்டுப்பாடுகளை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்து முன்னணி கும்பலும் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு, அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் மிகவும் மொன்னையாக இருந்தன. இந்து முன்னணியின் கடந்த கால இந்துமதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு வாதத்தையும் போலீசு முன்வைக்கவில்லை.

கலவரங்களைத் தூண்டுவதற்காக இந்து முன்னணியினர் மேற்கொண்ட 15-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக போலீசு உயரதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அதுபோன்ற எந்தவொரு சரியான ஆதாரத்தையும் முன்வைத்து வாதிடாமல், மாநாடு எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதாகவே போலீசின் அணுகுமுறை இருந்தது.

அரசியல் பேசக்கூடாது:
கட்டுப்பாடல்ல, சலுகை!

இம்மூன்று வழக்குகளும் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் ஜூன் 13 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், இந்த மாநாடு கலவரத்தைத் தூண்டுவதற்கான மாநாடு என்பதை பலவித ஆதாரங்களையும் முன்வைத்து விரிவாக வாதாடினார்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையையொட்டி இந்து முன்னணி கும்பலால் சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறியூட்டும் விதமாக இரண்டு பாடல் காணொளிகள் வெளியிடப்பட்டதையும் அதற்கெதிராக தோழர் இராமலிங்கம் புகார் அளித்த விவரங்களையும் ஆதாரங்களோடு எடுத்து முன்வைத்தார். பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் வெளியிட்ட இரண்டு பிரசுரத்தில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும் கலவரத்தை தூண்டும் விதமாகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததையும் எடுத்துக்காட்டினார்.

இவற்றையெல்லாம், ஒரு பொருட்டாகக் கூட நீதிபதி எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, “இது முருக பக்தர் மாநாடு என்று அவர்களே கூறுகிறார்கள், பிறகு அதையெல்லாம் இங்கு ஏன் காட்டுகிறீர்கள்” என்று இந்து முன்னணியினரின் வாதத்தை அப்படியே வழிமொழிந்தார்.

இந்து முன்னணியின் வசனங்களையே தீர்ப்பாக எழுதிய நீதிபதி புகழேந்தி

குறிப்பாக, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதையும் அவர் மீது போலீசு வழக்கு பதிவு செய்திருப்பதையும் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் குறிப்பிட்டார்.

அனைவரும் அறிந்த வகையில், நடந்த இந்த ஆதாரத்தைக் கூட நீதிபதி புகழேந்தி எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு பதில் வாதமாக இந்து முன்னணி வழக்கறிஞர், “எச்.ராஜா இந்து முன்னணியைச் சேர்ந்தவர் அல்ல” என்ற விளக்கத்தைக் கொடுத்தார். மோசடித்தனமான இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இந்து முன்னணி மாநாட்டில் “அரசியல் பேசக்கூடாது” என்றுக் கூறி மாநாட்டிற்கு அனுமதியை வழங்கினார்.

மதவெறியைத் தூண்டும் வகையில் எச்.ராஜா பேசிய ஆதாரங்கள் கண் முன்னே இருந்தபோதும், இந்து முன்னணி கும்பல் நீதிமன்றத்தின் எந்தக் கட்டுப்பாடுகளையும் மதிக்காது என்று தெரிந்திருந்தும், இந்து முன்னணியின் வாசகங்களையே தீர்ப்பாக எழுதிவிட்டார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி.

இந்து முன்னணியினருக்கு வழங்கிய இதே நீதியை, போராடும் ஜனநாயக சக்திகளுக்கு மட்டும் இந்த நீதிமன்றம் வழங்கவில்லையே, அது ஏன்?

மார்ச் 9-ஆம் தேதி மத நல்லிணக்கக் கூட்டமைப்பு சார்பாக, மாநாடு நடத்துவதற்கு இதே அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் அனுமதியை மறுத்தன. ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமைக்காக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக மனு தாக்கல் செய்தபோது போலீசும், நீதிமன்றமும் ம.க.இ.க. வெளியிட்ட பிரசுரத்தில் இருக்கும் வாசகங்களை எடுத்துக்காட்டி, மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதாக இருப்பதாகக் கூறி அனுமதி மறுத்தன.

ஆனால், இந்து முன்னணிக்கு மட்டும் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல், இந்து முன்னணி சொல்லும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இந்த பூணூல் மன்றம்.

ஆகையால், இந்து முன்னணி மாநாட்டில் ‘அரசியல் பேசக் கூடாது’ என்று நீதிபதி போட்ட உத்தரவு என்பது, இந்து முன்னணிக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். இந்த சலுகையையே, இந்து முன்னணி கும்பலுக்கு நீதிபதி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதாக, தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் கொஞ்சமும் வெட்கமின்றி பேசியது, தி.மு.க. அரசுடைய அதிகார வர்க்கத்தின் துரோகத்தை மறைக்கும் இழிந்த நடவடிக்கையாகும்.

சனாதனத்தின் ஆட்சி

இவ்வழக்கில் முன்னதாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக தொடரப்பட்ட மனு மீதான விவாதம் நடந்தது. ஆகம விதிகளைக் காட்டித்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைத் தடுத்து வருகிறது நீதிமன்றம். எனவே, ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடுகள் மாதிரி (செட்டப்) அமைக்கப்பட வேண்டும், இல்லையேல் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே, அறுபடை வீடுபோல மாதிரி செய்து தற்காலிக வழிபாட்டு மையங்களை அமைக்க அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, ஆகம விதிகளைக் கடைப்பிடிப்பீர்களா என்று இந்து முன்னணியின் வழக்கறிஞரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து முன்னணியின் வழக்கறிஞர், சானதன விதிகளின்படி பூசைகள் நடக்கும் என்று தெரிவித்தார். இதனை எந்தவித எதிர்ப்புமின்றி நீதிபதி ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.

மேலும், இது போன்று கடவுள் உருவங்களின் சிறிய அளவிலான மாதிரிகளை வைத்து வழிபடுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதற்கு எவ்வித சான்றுகளையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி இந்த வாதத்தையே நிராகரித்துவிட்டார்.

இதன் பொருள் என்ன?

ஆம், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அவசியம் எனில் ஆகமவிதி என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி மக்களின் உரிமைகளைப் பறிக்கும். அதுவே, தனது பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக இருக்கிறது என்றால், எந்த முகாந்திரமும் இல்லாமல் அதைத் தூக்கியெறிந்துவிடும். இவ்வாறு இரட்டை நாக்கையே தனது கோட்பாடாகக் கொண்டு பார்ப்பன சனாதனத்தை நிலைநாட்டி வருகிறது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஆம், சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ‘திராவிட மாடல்’ அரசின் அதிகாரிகள், அங்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். மதுரை மாநாட்டில் விதைக்கப்பட்டுள்ள சனாதன பயங்கரவாதத்தின் விதைகள் தமிழ்நாடெங்கும் பரவக் காத்திருக்கின்றன. தமிழர்களே எச்சரிக்கை!


பாரி

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க