இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 12,261 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது அதன் பணியாளர்களில் 2 சதவிகிதம் ஆகும்.
இது குறித்து டி.சி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி.சி.எஸ் நிறுவனம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பப் பகுதிகளில் முதலீடு செய்தல், புதிய சந்தைகளில் நுழைதல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குதல், எங்கள் பணியாளர் மாதிரியை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பல முயற்சிகள் அடங்கும். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பணியமர்த்தலில் சாத்தியமில்லாத ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்” என்று கூறியுள்ளது.
அதேபோல், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது தவிர, குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்ட சுமார் 2,000 பேர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வெளியேறியுள்ளனர். “செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க சுமார் 80 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிலையில், மறுசீரமைப்பு அவசியம்” என்று இந்த பணிநீக்கத்தை நியாயப்படுத்தியுள்ளார் மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா.
இன்டெல் நிறுவனம் இந்த ஆண்டில் மிகப்பெரிய ஆட்குறைப்பை அறிவித்துள்ளது. அதன் மொத்த ஊழியர்களில் கால் பங்கை (சுமார் 24,000 பேரை) பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி தயாரிப்புகளைக் கையாளும் ‘ரியாலிட்டி லேப்ஸ்’ பிரிவில் புதிய ஆட்குறைப்பைச் செய்துள்ளது.
ஜப்பானிய பானாசோனிக் நிறுவனமும், செலவுகளைக் குறைத்து செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்வதாகக் கூறி 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
படிக்க: 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு காரணங்களைக் கூறினாலும், ’செயல்திறனை’ அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முழுமையாக மாறிச் செல்வது என்ற அடிப்படையில்தான் இனி தங்கள் இலாபத்தைப் பன்மடங்கு பெருக்க முடியும் என்பதை உணர்ந்தே மிகப்பெரும் பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று காப்புவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால், தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான அமெரிக்க நிறுவனங்களின் வேலைகள் பிற நாடுகளுக்குக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கொத்துக் கொத்தான இந்த பணிநீக்கங்கள் லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்களின் பணிப்பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஐ.டி ஊழியர்களுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதன் காரணமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் கார்ப்பரேட் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இன்னொரு பக்கம், சட்டப்பூர்வமாக 12 மணி நேர வேலை நேரத்தைக் கொண்டுவருவதற்கு தகவல் தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகள் அரசின் துணையோடு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்குத் தெரிந்ததே. போராட்டங்கள் காரணமாகத் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தாலும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை.
இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, ஐ.டி ஊழியர்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதே தீர்வுக்கான முதல்படி.
அதேசமயம், இன்றைய கார்ப்பரேட்மயமாக்கல் சூழலில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள் கார்ப்பரேட்டுகளின் கொழுத்த இலாபத்திற்கான கருவிகளாகத்தான் பயன்படுகின்றன. இந்நிலை நீடிக்கும் வரை பணிநீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஒருபோதும் தீராது. அவை மக்கள் நலன், மக்களுக்கான பயன்பாடு என்ற வகையில் முதன்மையாக்கப்பட வேண்டும். மாற்றியமைக்கப்பட வேண்டும். அந்த வகையில், மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்திப் போராட வேண்டியதும் நமது கடமையாகும்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram