இந்தாண்டு தொடக்கத்தில், காவி-கார்ப்பரேட் கும்பலின் நலனிற்காக உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட மகா கும்பமேளாவில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உத்தரப்பிரதேச யோகி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் பி.பி.சி. செய்தி நிறுவனம் மேற்கொண்ட கள ஆய்வில், 82 அப்பாவி மக்கள் இறந்தது தெரியவந்துள்ளது. ஆனால், இது குறித்த உண்மை தகவலை தராமல், 37 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று மூடிமறைத்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை தராமலும் நிர்கதியாக்கியுள்ளது பா.ஜ.க. கும்பல்.
2021-ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சம் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகி இருந்த “சிவில் பதிவு முறை” என்ற அரசின் அறிக்கையில் 2021-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1.02 கோடி பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மரணங்களை விட சுமார் 20 லட்சம் மரணங்கள் அதிகமாக 2021-இல் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில் பார்க்கும்போது, 2021-ஆம் ஆண்டில் உண்மையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, பாசிச மோடி அரசு கூறியதை விட உண்மையான பலி எண்ணிக்கை சுமார் ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே, கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலக்கட்டத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 2021-இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை என்று பாசிச மோடி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலானது நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் அவற்றிற்கு வாய்திறக்காத மோடி கும்பல், பதிலடி தருகிறோம் என்ற பெயரில் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் மீதும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இந்திய இராணுவத்தின் தாக்குதல்களால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்களையும் இழப்புகளையும் ஊடகங்களில் ஊதிப்பெருக்கிக் காட்டிய பாசிச கும்பல் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பேச மறுத்தது. பாகிஸ்தான் குறித்து பல பொய் தகவல்களை வெளியிட்டு தேசவெறி-மதவெறிப் பிரச்சாரம் செய்யும் அதே சமயத்தில் தனது தோல்விமுகத்தை மூடிமறைப்பதற்காக, ரபேல் விமானம் தாக்கப்பட்டது உள்ளிட்டு உண்மையான பல தரவுகளைத் திட்டமிட்டே வெளியிடாமல் மறுத்துவருகிறது. இதில் உள்துறை அமைச்சகம் மற்றும் இராணுவத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மோதலின் போது இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளும் அடங்கும்.
இறுதியாக கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் அரங்கேறிய “ஏர் இந்தியா” விமான விபத்தானது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது குறித்த கேள்விக்கு, “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை” என்று திமிர்த்தனமாக அமித்ஷா பதிலளித்தது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை என்றால் எதற்காக அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன?” என்று கேள்வியெழுப்பினார் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா. விமானப் போக்குவரத்து துறையின் கடந்த சில ஆண்டறிக்கைகள் மற்றும் தரவுத்தொகுப்புகளை (Datasets) பாசிச மோடி அரசு வெளியிடாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்திற்கும், மோடி அரசு தரவுகளை வெளியிடாமல் இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என்று கூறினால் நம்ப முடிகிறதா?
இதை புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் தரவுகள் மற்றும் அதை வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு துறை வெளியிடும் தரவுத்தொகுப்பானது, அந்த குறிப்பிட்ட துறை அல்லது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நமக்கு அளிப்பதுடன், அந்த குறிப்பிட்ட துறை சாதித்த கள எதார்த்த நிலைமைகளை நமக்கு காட்டுகின்றன. அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திட்டமிடுதல், கொள்கை வரைவு தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்ற திட்டமிடல் பணிகளுக்கு உறுதுணையாகவும் அடிப்படையாகவும் இத்தரவுகள் அமைகின்றன. அதுமட்டுமின்றி, அத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பிற்குரியவர்களாக ஆக்குவதன் மூலம், அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த தரவுகளை பரிசீலித்து தவறுகளை உணர்ந்து, எதிர்காலத்தில் தவறுகள் ஏற்படாத வகையில் திருத்திக் கொள்ளவும் தரவுகள் உதவுகின்றன. கல்வி, சுகாதாரம், இரயில்வே, விமானப் போக்குவரத்து, இராணுவம் போன்ற பல துறைகளில் நம்மிடம் உள்ள குறைபாடுகளை கண்டறியாமல், அந்தந்த துறைகளை நம்மால் எவ்வாறு மேம்படுத்த முடியும்? மோடி ஆட்சியில் ஒடிசா ரயில் விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து போன்ற கோர நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
“2024-ஆம் ஆண்டின் இறுதியில், கல்வி, சுகாதாரம், சாலை விபத்துகள், தற்கொலை சம்பவங்கள், மருத்துவம் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 16 விசயங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரவுத் தொகுப்புகளை வெளியிடவில்லை. மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக ஆயுஷ், சிவில் விமானப் போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, இரயில்வே உள்ளிட்ட ஒன்பது ஒன்றிய அமைச்சகங்கள் தங்களின் ஆண்டறிக்கைகளை வெளியிடவில்லை” என்ற அதிர்ச்சிகரத் தகவலை “இந்தியா ஸ்பெண்ட்” (IndiaSpend) என்ற பத்திரிகை உரிய ஆதாரங்களுடன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமான காலம், சட்ட மற்றும் நீதித்துறையில் (2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு) எந்த ஒரு தரவுகளும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பொய்யான, மோசடியான தரவுகளை வெளியிடுவதும் அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தங்களுடைய முகத்திரையை கிழிக்கும் வகையிலான உண்மை தரவுகள் வெளியிடப்படுவதை தீவிரமாக ஒடுக்கும் வேலையிலும் மோடி அரசு ஈடுபடுகிறது.
இந்தியாவில் இயங்கிவரும் “சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின்” இயக்குநராக கே.என்.ஜேம்ஸ் இருந்தபோது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உள்ளிட்ட பல கணக்கெடுப்புகளின் தரவுத்தொகுப்புகள் வெளியிடப்பட்டன. இவை, மோடி அரசு முன்வைத்த பல கூற்றுகளை தகர்க்கும் வகையில் அமைந்ததால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஜேம்ஸின் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.ஏ.ஜி. அறிக்கைகளை வெளியிட்ட இயக்குநர்கள் முதல் ஆர்.டி.ஐ-க்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி வரை அனைவருக்கும் இதே நிலைதான்.
அதேசமயம், பசி, பட்டினி, வறுமை, கல்வி, ஊடக சுதந்திரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றின் உலகளாவிய தரவரிசை பட்டியல் அவ்வப்போது வெளியாகி மோடி அரசின் உண்மை முகம் அம்பலமாகிறது. ஆனால், தன்னுடைய ஆட்சியின் அவலநிலையை உலகிற்கு திரையிட்டுக் காட்டுவதை பாசிச மோடி அரசு விரும்பவில்லை. எனவே, இதுபோன்ற உலகளாவிய தரவரிசை பட்டியல்களை கண்காணிக்கும் பணியில் 19 ஒன்றிய அமைச்சகங்களை ஈடுபடுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் ஐ.டி. விங்கை போல செயல்படும் இந்த அமைச்சகங்களின் ஒரு பிரிவினர், பாசிச ஆட்சியின் கோரமுகத்தை அம்பலப்படுத்தும் வகையில் வெளிவரும் உலக தரவரிசை பட்டியல்களை தொடர்ச்சியாக கவனித்து, அதை வெளியிட்ட பதிப்பாளர்களை இந்திய தூதரகத்தின் மூலம் மிரட்டி, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தரவரிசை பட்டியலை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.
மொத்தத்தில், கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் விரோத பாசிச ஆட்சியை நடத்திவரும் மோடி கும்பலானது, அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச பொறுப்பைக்கூட துறந்துவிட்டு மக்களிடம் தெரியப்படுத்த வேண்டிய உண்மைகளை மூடிமறைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தான் கட்டமைக்கும் கதைகளை உண்மை என்று பரப்புவதற்கான பிரச்சாரத்தையும் ஊடகங்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான தரவுகள், வெளியானால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி, நடந்த தவறுகளுக்கு தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்ற காரணத்தினால், இயன்ற அனைத்து வழிகளிலும் உண்மை தரவுகள் வெளியாவதை தடுத்து வருகிறது. மோடி கும்பலின் இந்த செயலானது தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களின் கருத்துரிமையை நசுக்கும் பாசிச நடவடிக்கையின் ஓர் அங்கமாகும். மோடி அரசின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்கள், பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களப்போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது.
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram