கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜூலை 29 ஆம் தேதி ஓசூர் கார் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக “கார்ப்பரேட் டாக்ஸியே வெளியேறு” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த ஓசூர் சங்க நிர்வாகிகள் “கார்ப்பரேட் டாக்ஸிகள் வருவதால் உள்ளூர் கார் ஓட்டுநர்கள் மற்றும் கார் உரிமையாளர்கள் வருவாய், வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இந்த தொழிலில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று கூறினர்.
”கார்ப்பரேட் டாக்ஸியே வெளியேறு என்ற இந்த ஆர்ப்பாட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை” என முழங்கினர். தொடர்ந்து இது போன்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி ஓசூரில் கார்ப்பரேட்டுகளுக்கு இடமில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட TTO கௌரவத் தலைவர் முத்து, “ஓசூரில் கார்ப்பரேட் டாக்ஸி வரக்கூடாது என போராடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல தென் மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பெங்களூர் விமான நிலையம் முதல் நகரப் பகுதி முழுவதும் கார்ப்பரேட் டாக்ஸினுடைய ஆதிக்கம் இருக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே, இனம், மொழி கடந்து நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது. அந்த வகையில் கார்ப்பரேட் டாக்ஸியை வெளியேற்றுவதற்கு நாங்கள் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என உறுதியளித்தார்.
தென்னிந்திய கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம் செயலாளர் பாபு மற்றும் கௌரவத் தலைவர் ராஜா, மண்டியா ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட TTO கௌரவத் தலைவர் முத்து , கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் TTO, K.C.N அரவிந்தன், பாண்டிச்சேரி PTTO, KTTO கர்நாடகா APTO ஆந்திரா பிரதேசம், GTTO கோவா KSRTC கர்நாடகா, KTTO கேரளா என தென் மாநில கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் நேரிலும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கார்ப்பரேட் டாக்ஸிகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது:
கார்ப்பரேட் டாக்ஸிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் கார் உரிமையாளர்களை வாழ விடுங்கள்!
வேண்டும் வேண்டும் கார்ப்பரேட் டாக்ஸியை எதிர்க்கும் எங்களுக்கு ஆதரவு வேண்டும்!
ஒழிக! ஒழிக! கார்ப்பரேட் டாக்ஸி ஒழிக!
வெளியேறு! வெளியேறு! கார்ப்பரேட் டாக்ஸியே வெளியேறு!
ஆர்பாட்டாத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்ப்பரேட் டாக்ஸி உள்ளே வரக்கூடாது, ஆட்டோவுக்கு கிலோமீட்டர் இவ்வளவு என கட்டணம் தீர்மானிக்கும் அரசு, அதே போன்று கால் டாக்ஸிக்கும் கட்டணம் தீர்மானிக்க வேண்டும்.
- உள்ளூர் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு பாதுகாக்க வேண்டும்.
கார்ப்பரேட் டாக்ஸிக்கு எதிராக மொழி, இனம், மதம் கடந்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆதரவு தெரிவித்து தோழர் இரஞ்சித் கலந்து கொண்டார். தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருப்பதாக நிர்வாகிகளிடம் அவர் உறுதியளித்தார்.
தகவல்:
தோழர். இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram