அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

ஜூலை 17 அன்று அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்திலுள்ள பைகான் பகுதியில் அங்குள்ள மக்களைச் சட்டவிரோதமாக வெளியேற்றியுள்ளது ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு. வெளியேற்றத்திற்கு எதிராகப் போராடிய 2 பேரை போலீசு மனிதநேயமற்ற முறையில் சுட்டுக் கொன்றுள்ளது.

ஜூலை 16 அன்று சி.பி.ஐ (எம்-எல்) கட்சியின் உண்மை கண்டறியும் குழு அஷுதுபி கிராமத்திற்குச் சென்று விசாரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் துப்பாக்கி முனையில் 1,100 வீடுகள் 60 புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த உண்மை கண்டறியும் குழு பல குழிகள் ஊரைச்சுற்றிலும் தோண்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது. இந்த குழிகள் அந்த ஊருக்கு வரும் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவி செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகத் தோண்டப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்த பெரும்பான்மை மக்கள் ஏறத்தாழ 60-70 வருடங்களாக வாழ்ந்து வரும் ஏழை விவசாயிகளும் கூலித்தொழில் செய்யும் இஸ்லாமியர்களாவர். ஷேக் மொனிருல் என்ற ஒரு இஸ்லாமியர் தங்களை வெளியேறச் சொல்லி வந்த நோட்டீஸை பார்த்துவிட்து தற்கொலை செய்துள்ளார். மேலும் அனாருதீன் ஷேக் தங்கள் வீடுகள் இடிப்பதைப் பார்த்து மாரடைப்பால் இறந்துள்ளார்.

ஜூலை 12 ஆம் தேதியன்று கவுகாத்தி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் எந்த மாற்று ஏற்பாடும் செய்யாமல் போரின்போது நடப்பதைப் போல வன்முறையாக மக்களை தங்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். அஷுதூபியில் பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்த வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை வனப்பாதுகாப்பு என்ற பேரில் அகற்றியுள்ளது அசாம் பா.ஜ.க அரசு.


படிக்க: அசாம்: அதானிக்காக விரட்டியடிக்கப்படும் இஸ்லாமிய மக்கள்!


பல ஆண்டுகளாக வசித்துவந்த இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதற்கான பிரச்சாரங்களை கடந்த 2 மாதங்களாக தீவிரமாக முன்னெடுத்து  வருகிறது அசாம் பா.ஜ.க அரசு. கோல்பாரா, துப்ரி, சாருவாபாக்ரா, சிரக்குட்டா, கார்பி அங்லாங், திமா ஹாசோ, கம்ருப், கொக்ரஜார் மற்றும் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மறுவாழ்வு, மனிதநேய உதவிகள் வழங்கப்படாமலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் மிரட்டப்பட்டு வருகின்றனர்.  வீடுகள், அங்கன்வாடி மையங்கள், மருந்தகங்கள், பள்ளிகள், மசூதிகள், மதரஸாக்கள் மற்றும் அரசு கட்டடங்களும் மக்களின் வாழ்வாதாரங்களும் புல்டோசர்களால் நொறுக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

அதானி குழுமத்தினால் அமைக்கப்படவுள்ள 3,000 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கு 4,000 பிகா (1,322 ஏக்கர்) நிலம் கையகப்படுத்தவே துப்ரி மற்றும் கோல்பாரா மாவட்டங்களில் இந்த வெளியேற்றம் நடைபெற்று வருகிறது. திமா ஹாசோ பகுதியில் அதானி சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கவும், கொக்ரஜார் பகுதியில் மின்சார திட்டத்திற்காகவும், கார்பி அங்லாங்கில் ரிலையன்ஸ் உயிரி எரிவாயு திட்டத்திற்காகவும் நிலங்களைக் கையகப்படுத்த உள்ளனர்.

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வனப்பாதுகாப்பு, வளர்ச்சி என்ற பெயரில் உழைக்கும் மக்களை குடியேற்றங்களை விட்டு வெளியேற்றுவது தீவிரமாக நடைபெறுகிறது. குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் புல்டோசர்களைக் கொண்டு அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது. இந்த பாசிச தாக்குதலால் அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.


அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க