கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.

கீழடி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக பாசிச மோடி அரசால் தொடர்ந்து வேட்டையாடப்படும் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா

கீழடி அகழாய்வு தமிழர்களின் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதிக்கரை நாகரிகத்தை உலகறியச் செய்த வரலாற்று மைல்கல் ஆகும். இந்த ஆய்வு தமிழர்களின் எழுத்தறிவு, நகர அமைப்பு, நீர்மேலாண்மை மற்றும் வணிகத் தொடர்புகளை அறிவியல்பூர்வமாக நிறுவியது. ஆனால், இந்த அறிவியல் உண்மைகள், “வேத காலம் = இந்தியாவின் தோற்றம்” என்ற பார்ப்பனியப் பொய்ப் பரப்புரைக்கு எதிராக இருப்பதால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இவற்றை மறைக்கவும், தடுக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது. தற்போது, இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை வெளியிட மறுப்பது, அதில் “அறிவியல்பூர்வ” திருத்தங்களைக் கோருவது என்னும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகிறது.

கீழடி அகழாய்வு: அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில்

தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் 2014-2016 வரையில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகள், கி.மு.6-ஆம் நூற்றாண்டு குடியிருப்புகள், தமிழ்-பிராமி எழுத்து, உறைக் கிணறுகள் மற்றும் சாயத் தொழில் உலைகள் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தன. கார்பன் டேட்டிங் மூலம் இவை கி.மு.580 முதல் கி.மு.800 வரையிலானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை 2017 முதல் நடத்தி வரும் ஆய்வுகளில், 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை (பானை ஓடுகள், செங்கல் சுவர்கள், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், செம்பு மற்றும் தந்தப் பொருட்கள்) கண்டறிந்துள்ளது. இவற்றில் 18,000 பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்-பிராமி எழுத்து கொண்ட 120-க்கும் மேற்பட்ட பானை ஓடுகள், எளிய மக்களின் எழுத்தறிவை உறுதிப்படுத்துவதோடு, தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்ட, “புழங்கு பொருட்களில் பெயர் எழுதும்” பண்டைய மரபை நிறுவுகின்றன. மேலும், 1,001 கிராஃபிட்டி குறியீடுகள், சிந்து சமவெளி எழுத்துகளுடன் ஒற்றுமை கொண்டிருப்பதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தமிழ்-பிராமி எழுத்தின் தொன்மையை கி.மு.7-ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்கிறது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண் குழாய்கள், திறந்தவெளி வாய்கால்கள் மற்றும் சிறு நீர்தேக்கங்கள் ஆகியவை பண்டைய தமிழர்களின் மேம்பட்ட நகர அமைப்பு மற்றும் நீர்மேலாண்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக 2024-இல், 10-ஆம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மண் குழாய்கள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மேம்பட்ட நீர்மேலாண்மையை உறுதிப்படுத்தின. இவை, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழர் நாகரிகத்தை நிறுவுகின்றன.

அருகிலுள்ள கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட 24 உருளைக் கலன்கள் மற்றும் குழந்தை எலும்புக்கூடு ஆகியவை இப்பகுதி இறுதிச் சடங்கு தளமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இதுவரையிலான கீழடி ஆய்வுகளில் சாதி – மத அடிப்படையிலான இறைவழிபாடுகளோ, வாழ்வியல் முறைகளோ இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் வெளிப்படவில்லை.

இதன்மூலம், கீழடியின் தொல்லியல் சான்றுகள் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை சங்க இலக்கியங்களில் வெளிப்படும் சமத்துவ வாழ்வியலுடன் இணைக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், கீழடி அகழாய்வு தமிழர்களின் மதச்சார்பற்ற, சமத்துவ நாகரிகத்தை அறிவியல்பூர்வமாக நிறுவி வருகிறது. எனவேதான், சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.

இந்துத்துவ சித்தாந்தமும், கீழடியை மறுத்தலும்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தம், “ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே பண்பாடு- ஒரே மொழி” என்னும் ஒற்றைமயப்படுத்தும் பார்ப்பன – பாசிச திட்டத்தை செயல்படுத்தும் நோக்கமுடையது. இது ஏற்கெனவே, நிலவிவரும் பல்வேறு மொழி-பண்பாடு-தேசிய இன அடிப்படை கொண்ட இந்திய மக்களின் பன்முகத்தன்மையை மறுக்கிறது. வேத காலமே இந்திய நாகரித்தின் துவக்கம்-அடிப்படை என்னும் பார்ப்பன மேலாதிக்கக் கொள்கையை பாடத்திட்டங்களிலும், வரலாற்று ஆய்வுகளிலும் திணித்து, திரித்துப் புரட்டுவதைச் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், பண்டைய இலக்கியங்களும் அவற்றை நிரூபிக்கும் வகையிலான தொல்லியல் ஆய்வுகளும் பார்ப்பனப் புரட்டுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது தமிழர் நாகரிகம் என்பதை அறிவியல் பார்வை கொண்டோர் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். 1939-இல் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த கே.என்.தீக்‌ஷித் என்பவர், “வைகை மற்றும் தாமிரபரணி நதிக்கரைகளில் அகழாய்வு செய்தால், சிந்து சமவெளிக்கு இணையான நாகரிகம் கிடைக்கும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீழடியில் கிடைத்த முத்துகள், கார்னிலியன் மணிகள், எழுத்துகள் மற்றும் குறியீடுகள் கொண்ட பானையோடுகள் ஆகியவை தமிழர்களின் தொழில்நுட்ப அறிவு, கடல் வணிகம் மற்றும் சிந்து சமவெளியுடனான உறவு ஆகியவற்றைப் புலப்படுத்துகின்றன. அதன் மூலம், பார்ப்பனியத்தின் “ஆரியர் சாதனை” என்னும் கற்பனைக் கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றன.

இந்தப் பின்புலத்திலிருந்தே, கீழடியில் நடந்த இரண்டாம் கட்ட ஆய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணா 2023-இல் சமர்ப்பித்த 982 பக்க அறிக்கையை வெளியிடாமல், ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்ய முயல்வதைப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த அறிக்கையை விரைந்து வெளியிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு,  அறிக்கையை ஒன்பது மாதங்களுக்குள் வெளியிட வேண்டுமென 2024 பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒன்றிய அரசோ இந்த உத்தரவைத் துளியும்  மதிக்கவில்லை.

மாறாக, 2025 மே 23-இல், இந்திய தொல்லியல் ஆய்வு மையம், “போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை” எனக் கூறி, அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் அறிக்கையைத் திருத்தக் கோரியது. “போதிய தரவுகள் – அறிவியல் ஆதாரங்களுடன்தான் அறிக்கை உள்ளது. எனவே திருத்த வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறி ஒன்றிய அரசு விரும்பும் ‘திருத்தங்களைச்’ செய்ய மறுத்து விட்டார் அமர்நாத்.

ஒன்றிய அரசின் இந்த கயமைத்தனமான போக்கு பொதுவெளியில் அம்பலப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளான பிறகும் கூட, ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றை மாற்ற முடியாது” என்றும், இத்தகைய அறிக்கைகள் பிராந்தியவாதப் போக்குகளுக்கு பயன்படுகிறது என்றும் திமிர்த்தனமாகக் கூறி வருகிறார். கீழடி பிரச்சினையை அரசியலாக்க வேண்டாமென ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாட்டு பா.ஜ.க. நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இவர்கள் செய்யும் தமிழின விரோத அரசியல் எத்தனை கயமைத்தனம் நிறைந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

அயோத்தி – ராமர் பாலம்: பார்ப்பனியத்தின் அறிவியல் விரோத முகம்

அயோத்தியில் “கோயில் இருந்ததற்கு ஆதாரமில்லை” என 2003-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கையைப் புறக்கணித்து, மத நம்பிக்கைகளை முன்னிறுத்தியே ராமன் கோயில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. கடவுளை வேண்டிக்கொண்டு தீர்ப்பை எழுதியதாகக் கூறியதன் மூலம் அந்த நம்பிக்கை எத்தகையது என்பதை பின்னாளில் நீதிபதி சந்திரசூட் அம்பலப்படுத்திக் கொண்டார். ஆனால், இத்தீர்ப்பு அறிவியல் அடிப்படையில் வழங்கப்படவில்லை என எந்த ஒன்றிய அமைச்சரும் பா.ஜ.க. நிர்வாகியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்துராஷ்டிரத்திற்கான பாதையில் ஒரு மைல்கல் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோல, ராமர் பாலம் விவகாரத்தில் நாசாவின் புவியியல் ஆய்வுகள் பாலம் இயற்கையாக உருவான பவளப்பாறை அமைப்பு என உறுதிப்படுத்தின. ஆனால், பார்ப்பன பாசிச கும்பலோ இதை ராமாயணத்துடன் இணைத்தும் இந்துக்களின் நம்பிக்கை என்றும் கூறி அறிவியல் ஆய்வுகளை ஏற்க மறுத்தனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் எனப் பெயர் சூட்டுவது, வரலாற்றிலேயே இல்லாத சரஸ்வதி நாகரிகத்தைப் பற்றிய ஆய்வுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகைய அறிவியலை ஏற்க மறுக்கிற முட்டாள் பாசிஸ்டுகள்தான், இப்போது கீழடி ஆய்வில் கார்பன் டேட்டிங் மற்றும் தொல்லியல் ஆதாரங்களை மறுக்கின்றனர். இதுவரை கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் போதாது என்கின்றனர். தமது சித்தாந்தம் – பொய்ப்பரப்புரைக்குப் பயன்படும் என்றால் அறிவியலை மறுப்பதும், தமிழர் பண்பாட்டு வரலாறு என்றால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பேசும் இரட்டைநாக்கே இவர்களின் இயல்பு.

கீழடி அடையாளம் காட்டும் துரோகிகள்

கீழடி ஆய்வறிக்கையை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அ.தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் பா.ஜ.க-விற்கு எட்டப்பன் வேலை பார்க்கின்றன.

தமிழின – தமிழர் விரோதத் தன்மையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வுடன் கூச்சமே இல்லாமல் கூட்டணி வைத்திருப்பதோடு, அவர்களின் அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறது அடிமை அ.தி.மு.க.. கீழடி விசயத்தில் எடப்பாடி பழனிச்சாமி கள்ள மௌனம் சாதித்து வருகிறார்.

“கீழடி அகழாய்வைப் பொதுவாகப் பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது” என்றும், “மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள். அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத்தான் இருக்கும்.” என்று தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகியைப் போல ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, “மதுரை முருக பக்தர் மாநாட்டில் அரசியல் பேசமாட்டார்கள் என நினைத்துத்தான் கலந்து கொண்டோம்”,  “கொள்கை வேறு கூட்டணி வேறு”, “அண்ணாவை ஒருநொடி கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று பேசுவதெல்லாம் இவர்கள் எத்தகைய துரோகிகள் என்பதை நாள்தோறும் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கீழடியில் தோண்டத் தோண்ட தமிழரின் தொன்மை நாகரிகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் அதைக் குழிதோண்டிப் புதைக்கும் ஈனச்செயலில் இத்தகைய துரோகிகள், தமிழின விரோதிகளுக்குத் துணை நிற்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இந்தியாவின் பல்தேசிய இனங்களின் அடையாளங்களை முற்றாக ஒழித்து விட, முன்னெப்போதையும் விட தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல். அவற்றின் குறுக்கே, பன்மைத்துவத்தின் அடையாளமாய், தமிழ் மரபின் கேடயமாய் சீன மதிலைப் போல உயர்ந்து எழுந்து வருகிறது கீழடி. கீழடியை மூடி மறைப்பது என்பது தமிழரின் பழம்பெரும் பாரம்பரியத்தை மூடி மறைப்பதற்குச் சமம். கீழடியைக் காப்பது என்பது பழைய செங்கற்களையோ, மட்பாண்டங்களையோ காப்பதல்ல. அவை வெளிக்கொண்டு வந்துள்ள தமிழரின் வரலாற்று உண்மையைக் காப்பது! இது, பார்ப்பனியப் போலி வரலாறுகளின் கொடுமையிலிருந்து நமது மூதாதையரின் பெருமையைக் காப்பது!


தமிழ்ச்சுடர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க