மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!

ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்திய பிரதேசத்தில் நீதிபதியாக சில ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அதிதி சர்மா (Aditi Kumar Sharma) உட்பட ஆறு பெண் நீதிபதிகளைப் பணி நீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாநில சட்டத்துறை அமைச்சகம் பணி நீக்க உத்தரவைப் பிறப்பித்தது. தகுதி காண் (Probation period) காலத்தில் அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று அதற்குக் காரணம் கூறியது.

2024 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி வழக்கை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற முழு அமர்வு அந்த 6 பெண் நீதிபதிகளில் அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா சவுத்ரி ஆகிய இருவரைத் தவிர மற்ற நான்கு பேரையும் (ஜோதி வக்கார்டே, சுஷ்ரி சோனாட்சி ஜோஷி, சுஷ்ரி பிரியா சர்மா மற்றும் ரச்னா அடுல்கர் ஜோஷி) மறுபடியும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த இருவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று இந்த பணி நீக்க நடவடிக்கை எதேச்சாதிகாரமானது (தன்னிச்சையானது) மற்றும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இருவரையும் மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. அதன்படி ஷதோல் மாவட்டத்தில் ஜூனியர் சிவில் நீதிபதியாக அதிதி குமார் சர்மா மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

இதனிடையே பெண் நீதிபதியான அதிதி குமார் சர்மா, தான் முன்னர் பதவியிலிருந்த காலத்தில் மூத்த மாவட்ட நீதிபதி ராஜேஷ் குமார் குப்தா தனக்கு இடைவிடாமல் பல வகைகளில் தொல்லை கொடுத்து வந்ததாகவும் சாதி ரீதியாக பாகுபாடு காட்டியதாகவும் தான் அதை எதிர்த்து நிற்பதால் அவரது அளவு கடந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பலவகையிலும் துன்புறுத்தி வருவதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தினார். குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சாத்தியமான எல்லா வழிகளிலும் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். (செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று புதிய பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதன் பின்புலத்தை தற்போது எவரும் புரிந்து கொள்ள முடியும்)


படிக்க: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஜனநாயக விரோதப் போக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!


ஆனால் நீதிமன்ற நிர்வாகமும் மாநில சட்டத்துறை அமைச்சகமும் இவரது குற்றச்சாட்டின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நிரந்தரமாக அமைதி காத்து வந்திருக்கின்றன. இறுதியாக தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு கடந்த திங்கட்கிழமை (28/07/2025) அன்று ராஜேஷ் குமார் குப்தாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்து ஒன்றிய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில்தான் இந்த உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வழங்கப்பட்டிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

ராஜேஷ் குமார் குப்தாவுக்கு இந்தப் பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அவரின் இந்த ராஜினாமா கடிதம் தான் நீதித் துறையின் யோக்கியதையை அம்பலப்படுத்தியுள்ளது.

“நீதி கிடைக்காவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு விசாரணையாவது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். ஆனால் என்னைத் துன்புறுத்தியவர் விசாரிக்கப்படவில்லை என்பதுடன் அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்படி அனுப்ப வேண்டிய சம்மனுக்கு பதிலாக கௌரவமான உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது” என்று தனது அதிருப்தியையும் ஆதங்கத்தையும் இராஜினாமா கடிதத்தில் பதிவு செய்திருக்கிறார் பெண் நீதிபதி அதிதி குமார் சர்மா.

“நான் ஒன்றும் அநாமதேயமாக யார் மீதோ குற்றம் சுமத்தவில்லை. நேரடியாகப் பெயர் குறிப்பிட்டு உரிய ஆவணப்பூர்வமான ஆதாரங்களையும் சமர்ப்பித்து குற்றம் சுமத்தி இருக்கிறேன். ஆனாலும் அவருக்கு ஒரு சம்மன் கூட அனுப்பப்படவில்லை; விசாரணை இல்லை; அவரிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. இப்போது அவர் உயர் நீதிமன்ற நீதி அரசராகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பது குரூரமான நகைச்சுவையே” என்று கூறி ஒட்டுமொத்த நீதி பரிபாலன முறையையே கேள்விக்குட்படுத்தி இருக்கிறார்.

“இப்போதும் யாரையும் நான் பழிவாங்க முயலவில்லை. எனக்கான நீதிக்காக அழுதேன். நான் நம்பிக்கை கொண்டு நேசித்த நீதி துறைக்காகவும் அழுதேன். நான் நிலைநிறுத்துவதாகச் சத்தியம் செய்த இந்த நீதித்துறையிலிருந்து இப்போது வெளியேறுகிறேன். எந்தப் பதக்கங்களும் இல்லாமல், கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல், அதே போது கசப்புணர்வும் இல்லாமல்தான் வெளியேறுகிறேன்.”

“என்னை மீண்டும் பணியமர்த்தினாலும், இழப்பீடு கொடுக்கப் பட்டாலும், மன்னிப்பு கேட்டாலும் குணப்படுத்த முடியாத ஆறாத காயங்களுடன் வெளியேறுகிறேன். இதில் கசப்பான உண்மை என்னவென்றால் நீதித்துறை என்னைத் தோற்கடித்து விட்டது. ஆனால் அதை விடவும் மோசமானது நீதித்துறை தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டது என்பதுதான்”

”நான் இந்த கடிதத்தில் கையொப்பம் இடுவது நீதித்துறையின் ஒரு அதிகாரியாக அல்ல; அதன் மௌனத்தினால் வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலையாகக் கையொப்பமிடுகிறேன். எனது இந்த ராஜினாமா கடிதம் ஒரு எதிர்ப்பு அறிக்கை (Statement of Protest)” என்றும் தன் உணர்ச்சிப் பூர்வமான விமர்சனங்களைத் தனது ராஜினாமா கடிதத்தில் முன் வைத்திருக்கிறார். அதிதி குமார் சர்மாவின் அனுபவப்பூர்வமான அறிக்கை ’சட்டத்தின் ஆட்சி’யை நிலைநாட்டும் நீதித்துறையின் யோக்கியதையை அம்மணமாக்கிக் காட்டிவிட்டது என்றால் மிகையில்லை.


படிக்க: மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!


இந்தியாவில் இந்து மத வெறி கும்பலின் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்எஸ்எஸ். பாஜக. கும்பலை எதிர்க்கும் எவரும் மாற்றாக முன்வைப்பது சட்டத்தின் ஆட்சியைத்தான்.

ஆனால் சட்டத்தின் ஆட்சியில் சட்டம் என்பது தானியங்கி அல்ல. ஆயினும் சட்டத்தைக் கையில் எடுக்கவோ சட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவோ மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சியாளர்களான ஆளுங்கட்சியும் அதிகார வர்க்கமும் தான் சட்டத்தைக் கையாளும் அதிகாரம் கொண்டவை.

அதிகாரத்தின் ஒடுக்கு முறை என்பது பாலின ரீதியில் (பெண்கள்) மட்டுமல்ல, வர்க்க ரீதியிலும் (ஏழை – பணக்காரன்) இனரீதியிலும் (பேரினவாதம்), சாதி ரீதியிலும் (உயர்ந்த – தாழ்ந்த) என எல்லாவகையிலும் மேலோர் கீழோர் மீது செலுத்தும் சர்வாதிகாரமாகவே அமையும். எனவே சட்டம் என்பது மக்கள் பிரதிநிதிகளின் நேரடி கண்காணிப்பிலும், மக்கள் பிரதிநிதிகள் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டால் மட்டுமே உண்மையான சட்டத்தின் ஆட்சியை நிறுவ முடியும்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க