மூன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன்-ரஷ்யா போரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றுக் குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த மாதத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் அடாவடியாக போர் தொடுத்து மூன்றாவது போர்முனையை திறந்தது, உலக அமைதியை விரும்புவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, “ஈரான் இன்னும் சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கப் போகிறது” என்ற பொய் குற்றச்சாட்டை சுமத்தி, ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. “ஆபரேஷன் ரைசிங் லையன்” (Operation Rising Lion) எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிகழ்த்தி ஈரானின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்தது.
ஈரானின் அணுசக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள், ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், மக்கள் குடியிருப்புகளைப் போர் விமானங்கள் மூலம் தாக்கிய இஸ்ரேல், மறுபுறம், இஸ்ரேலின் மொசாத் (Mossad) உளவுப் பிரிவின் மூலம் ஈரானின் “இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படை”-இன் முக்கியத் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகளை ட்ரோன்களால் குறிவைத்துக் கொன்றது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் கார் குண்டுகள் (Car bombs) மூலம் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. போர் என்ற பெயரில் அப்பட்டமான பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. மேற்கத்திய ஊடகங்களோ துளியும் கூச்சமின்றி இஸ்ரேலின் மனிதத்தன்மையற்ற இத்தாக்குதலை “தற்காப்பு தாக்குதல்” என்று குறிப்பிட்டன.
இதனையடுத்து, ஜூன் 15 அன்று இரவு “ட்ரூ ப்ராமிஸ் 3” (True Promise 3) என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் தொடுத்தது.
இதற்கிடையே, ஜூன் 22 அன்று இரவு “மிட்-நைட் ஹாம்மர்” (Midnight Hammer) என்ற பெயரில் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது உலக மக்களை ஆத்திரங்கொள்ளச் செய்தது. அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்பது குறித்து துளியும் கவலைப்படாமல் மேலாதிக்க வெறிப்பிடித்து அமெரிக்கா இத்தாக்குதலை தொடுத்தது.

இந்நிலையில், ஜூன் 23 அன்று ஈரான்-இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலாவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து இரு நாடுகளும் அதனை உறுதிப்படுத்தின. அமெரிக்க மேலாதிக்க நலனிற்காக 12 நாட்களாக தொடர்ந்த இப்போரில் நூற்றுக்கணக்கான மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, இனவெறி இஸ்ரேல் அரசு காசாவை போலவே ஈரான் மக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீதும் குழந்தைகள், பெண்களை குறிவைத்தும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 627 ஈரான் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உலக அமைதி அல்ல, மேலாதிக்கவெறியே காரணம்
ஈரான் இன்னும் சிறுது காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க உள்ளதாகவும் அதனை தடுப்பதற்காகவே ஈரான் மீது போர் தொடுத்ததாகவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் நாடகமாடுகின்றன. ஆனால், “ஈரான் அணு ஆயுதங்களை பெற்றிருக்கவில்லை. இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதங்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும்” என்று அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்டே அம்பலப்படுத்தியிருந்தார் (இவர் ட்ரம்ப் அரசால் மிரட்டப்பட்டு தற்போது மாற்றிப் பேசியுள்ளது தனிக்கதை).
அதேபோல், தங்கள் நாட்டின் எரிசக்தி உற்பத்திக்காகவே யுரேனியத்தை செறிவூட்டி வருவதாக ஈரானும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. மேலும், அணு ஆயுதங்களை உருவாக்கவோ பெறவோ கூடாது; அதிக செறிவூட்டப்பட்ட துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது நாசவேலை எனக் கருதப்படும் போன்ற நிபந்தனைகளை கொண்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT – Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) ஈரான் கையெழுத்திட்டுள்ளது. ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA – International Atomic Energy Agency) ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதற்கும் ஒத்துழைத்து வருகிறது.
அதேசமயம், ஈரான் மீது அபாண்டமாக பொய் குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமின்றி, தற்போதைய சூழலில் இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது; மேலும் 187 முதல் 277 வரையிலான அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு போதுமான புளூட்டோனியத்தையும் வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளிப்படையாகக்கூட அறிவிக்காத இஸ்ரேல், “தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை மறுக்கவும் மாட்டோம், ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்” என்ற அடாவடியான கொள்கையை கொண்டுள்ளது. அதேபோல், வரலாற்றில் இருமுறை அணு ஆயுதங்களை பயன்படுத்திய இழிபுகழ் கொண்ட அமெரிக்கா, 5,550 அணு ஆயுதங்களைக் கொண்டு உலகை மிரட்டி வருகிறது. இதுதான் இவ்விரு நாடுகளின் யோக்கியதை. இந்நாடுகள் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று கூறுவது அயோக்கியத்தனமாகும்.

உண்மையில், மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் அதன் பேட்டை ரவுடியான இஸ்ரேலுக்கும் சவாலாக வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கையும் அதன் அணு ஆற்றலையும் முடக்குவதும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும்தான் அமெரிக்காவின் நோக்கம். இதற்காக அமெரிக்கா பல ஆண்டுகளாக பல்வேறு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், “செயலுக்கான ஒட்டுமொத்தத் திட்டம்” (JCPOA – Joint Comprehensive Plan of Action) என்ற ஒப்பந்தம் ஈரானுடன் போடப்பட்டது. பதிலுக்கு, ஈரான் மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2018-இல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஆனால், இத்தடைகள் ஈரானின் அணு ஆற்றலை கட்டுப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் அக்டோபர் 2025-இல் முடிவடைவதால், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும் இதற்கு இணங்காவிட்டால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் மீது குண்டு வீசப்படும், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அபாயம் எழுந்தது. எனவே, ஈரான் மீது அமெரிக்கா எவ்விதமான இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது என்ற நிபந்தனையுடனும், தனது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் நோக்கத்துடனும், ஓமனின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முன்வந்தது.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், கடுமையான கண்காணிப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட அளவிற்கு ஈரான் யுரேனியத்தை செறிவூட்டிக் கொள்ளலாம் என்று வாதங்களை முன்வைத்த அமெரிக்கா, பின்னர் ஈரான் யுரேனிய செறிவூட்டலையே கைவிட வேண்டும் என்று அநியாயமான வாதத்தை முன்வைத்தது. ஒருபக்கம் 60 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்று ட்ரம்ப் காலக்கெடு விதித்துவிட்டு, இன்னொருபுறம் பூஜ்ஜிய செறிவூட்டல் (Zero Enrichment) என்று நிபந்தனை விதிப்பது பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்கான முயற்சி எனக் கண்டனங்கள் எழுந்தன.
உண்மையில், கடுமையான உள்நாட்டு நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவால், அதனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க முடியாது. இதன் காரணமாகவே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே மறுபக்கத்தில் இஸ்ரேல் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வந்தது. இப்பேச்சுவார்த்தை நடப்பதையே விரும்பாத இஸ்ரேலும் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. எனவே, ஈரான் மீதான போரானது ஈரானின் அணு ஆற்றலை முடக்கி மேற்காசியப் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை வீழ்ச்சியடைய செய்வதற்கான போரே ஆகும். தவிர, ‘உலக அமைதி’-க்காக நடத்தப்படும் போர் என்று அமெரிக்கா கூறும் கதைக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை.
இஸ்ரேல்-அமெரிக்காவின் படுதோல்வி
ஈரான் மீதான போர் தொடங்கிய சமயத்தில், “அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடியில் ஈரான் உள்ளது. அதனிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. அதனால் ஈரானால் இப்போரில் தாக்குப்பிடிக்க முடியாது” என்றே பலரும் பேசி வந்தனர். ஆனால், அக்கருத்துகளையெல்லாம் சுக்குநூறாக்கி அமெரிக்கா-இஸ்ரேலை இப்போரில் பின்வாங்கி ஓடச்செய்துள்ளது ஈரான்.
குறிப்பாக, இஸ்ரேலிடம் ஐயன் டோம் (Iron Dome), டேவிட்’ஸ் ஸ்லிங் (David’s Sling) மற்றும் ஆர்ரோ 3 (Arrow 3) ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதால் அந்நாடு இரும்புக்கோட்டை உள்ளது, அதன் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற பிம்பம் ஊதிப்பெருக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போரில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. மேலும், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டின் பதுங்குக் குழிகளும் சேதமடைந்தன. இதனையடுத்து போர் தொடங்கிய சில நாட்களிலேயே தன்னால் இனி தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இஸ்ரேல் அமெரிக்காவை போருக்குள் இழுத்து தனது தோல்வியை பகிரங்கப்படுத்தியது.
இந்நிலையில், ஃபோர்டோவ் (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, “ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டன. அதனால், ஈரானால் யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி” என்றெல்லாம் ட்ரம்ப் பெருமை பீற்றி வந்தார். ஆனால், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தாக்குதலுக்கு முன்னரே ஈரான் அப்புறப்படுத்திவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், “அணுசக்தி தளங்கள் இருந்த இடத்தில் கதிர்வீச்சுகள் இல்லை” என்று சர்வதேச அணுசக்தி நிறுவனமும் தெரிவித்தது. இது ட்ரம்புக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, “இஸ்ரேலின் தாக்குதலின் விளைவாக ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்”, “ஈரான் மக்கள் சுதந்திர நாளை எதிர்நோக்கியுள்ளனர்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசினார். இது இப்போரின் ஊடாக ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்தையும் அமெரிக்கா-இஸ்ரேல் கொண்டிருப்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. அதன்படி, ஈரானின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் இராணுவத் தலைவர்களைக் கொல்வதன் மூலமும், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குவதன் மூலமும் ஈரான் அரசுக்கு எதிராக மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிடலாம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கனவு கண்டன. ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி காமெனியை கொல்வதற்கான சதி நடந்ததாக செய்திகள் வெளியானதும் இத்திட்டத்தின் அங்கமே ஆகும். ஆனால், இவையெல்லாம் நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தின.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். “எங்களுக்கான ஜனநாயகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உள்ளே வர வேண்டாம்” என்று உரக்க முழங்கினர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரசை நிர்பந்தித்தனர். ஈரான் மட்டுமின்றி மேற்காசிய நாடுகள் முழுவதிலும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர்வெறிக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. இதனால், இஸ்ரேல்-அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டம் படுதோல்வியடைந்தது.
மறுபுறம், இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகளில் அரசியல் நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியது. இஸ்ரேல் இப்போரை தொடங்குவதற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலிருந்து நெதன்யாகு அரசு நூலிழையில் தப்பித்திருந்தது. காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டில் தீவிரமடைந்திருந்தது. இந்த எதிர்ப்பை மடைமாற்றுவதற்கு நெதன்யாகு இப்போரை பயன்படுத்திக்கொள்ள எத்தனித்த நிலையில், இஸ்ரேலை போர் சூழலுக்குள் தள்ளிய நெதன்யாகு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
அதேபோல், அமெரிக்காவிலும் ஈரான் மீதான போருக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன. மேலும், அமெரிக்காவின் காங்கிரசில் அனுமதி பெறாமலேயே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்ததை எதிர்க்கட்சிகளும் ஆளும் பிரிவில் ஒரு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். மேலும், உலகம் முழுவதும் போருக்கு எதிரான உணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீதான போருக்கு எதிராக கண்டனக் குரல்கள் உலகம் முழுவதும் எழத் தொடங்கின. இதன் விளைவாகவே ட்ரம்ப் வேறு வழியின்றி போர் நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனை ஊடகங்கள் ஊதிப்பெருக்கி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா என்று பிரச்சாரம் செய்துவந்த நிலையில், “அமெரிக்கா கெஞ்சியதால்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம்” என்று ஈரான் கூறியது ட்ரம்பின் மூக்கை உடைத்தது.
மேலும், அமெரிக்க-இஸ்ரேலின் போரை சுட்டிக்காட்டி, அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை நிறைவேற்றப் போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதற்கு அப்பட்டமாக துணைபோன சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை இடைநிறுத்துவதற்கான மசோதாவிற்கும் ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு முன்னர் நடந்துவந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து ஈரான் விலகியுள்ள நிலையில், ஈரானுக்கு சில சலுகைகளை அளித்து அதனை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஒற்றைதுருவ உலக மேலாதிக்கம் கடும் வீழ்ச்சி
இப்போர் சமயத்தில் ஈரானின் மக்கள் விரோத போக்கையும் அது பிராந்திய மேலாதிக்க வல்லரசாக வளர விரும்புவதையும் காரணம் காட்டி இப்போரில் ஈரானை ஆதரிக்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஈரான் மீதான இப்போர் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போராகும். அமெரிக்காவின் ஒற்றைதுருவ உலக மேலாதிக்கம் கடும் வீழ்ச்சியடைந்துவரும் சூழலில் பல்துருவ உலக மேலாதிக்கத்திற்கான போக்கு வளர்ந்து வருகிறது. இதில் மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அடியாளான இஸ்ரேலுக்கு போட்டியாக ஈரான் வளர்ந்து வருகிறது.
மேலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துவரும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஈரானின் நெருக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அணுசக்தி திட்டங்களில் தங்களது நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் வெளிப்படையாக அறிவிக்க தீர்மானித்துள்ளன. இதற்கான முதல் சுற்று கூட்டத்தையும் மார்ச் 14 அன்று சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தியுள்ளன.
மேலும், மேற்காசிய நாடான சிரியாவில் ரஷ்ய ஆதரவு பஷர் அல்-அசாத் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதையடுத்து ரஷ்யா ஈரானுடன் அதிக நெருக்கம் பாராட்டத் தொடங்கியுள்ளது. அதேபோல், முன்பு ஷாங்காய் கூட்டுறவில் பங்குதாரராக இருந்த ஈரான் தற்போது அதில் உறுப்பினராகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் உறுப்பினராகியுள்ளது.பல ஆண்டுகளாக பகையாக இருந்த சவுதி அரேபியா-ஈரானுக்கு இடையில் சீனாவின் முயற்சியில் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டதும் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது.
இதன் காரணமாகவே, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, அதனுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகளை மிரட்டுவது என பல்வேறு வழிகளில் ஈரானை அடக்கி ஒடுக்குவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலின் இப்போரை பார்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இப்போரில் தனது சுயாதிபத்தியத்தை பாதுகாத்துகொள்வதற்காக போராடிய ஈரானை ஆதரிக்காதது அமெரிக்க அடிமைத்தனமும் துரோகமும் ஆகும்.
அதேசமயம், ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்திருப்பது நிரந்தரமானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போர் வெடிக்கலாம் என்பதே எதார்த்த நிலை. சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள உலகின் எங்கு வேண்டுமானாலும் அமெரிக்கா தனது போர் முனையை உருவாக்கி அதன் சுமையை உலக மக்களின் தலையில் சுமத்தும்!
துலிபா
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram