கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்

ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர், 26 வயதான கவின் செல்வகணேஷ். இவர் சென்னை டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சார்ந்த கவினும், திருநெல்வேலி கே.டி.சி. நகரில் வசித்துவரும் மறவர் சாதியைச் சார்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும், பள்ளிப்பருவம் முதலே நட்பாக பழகி அதன்பிறகு பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

போலீசு துணை ஆய்வாளர்களாக பணியாற்றிவரும் சுபாஷினியின் பெற்றோர்களான சரவணக்குமார், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் கவின்-சுபாஷினியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கவினின் தாயார் தமிழ்ச்செல்வியை தொடர்புகொண்டும் மிரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஜூலை 27-ஆம் தேதி கவினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தன் குடும்பத்தினருடன் அவரை அழைத்துக்கொண்டு, சுபாஷினி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கவின் சென்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனைக்கு சென்று, “நீங்கள் என் அக்காவை காதலிப்பது எனக்கு தெரியும். இதுகுறித்து உங்களிடம் பேசுவதற்காக என் அப்பா, அம்மா காத்திருக்கின்றனர். நீங்கள் என்னோடு வாருங்கள்” என்று கவினிடம் நைச்சியமாக பேசியிருக்கிறான். அவன் கூறியதை நம்பி கவினும் அவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரின் ஓரிடத்தில் சுர்ஜித் வண்டியை நிறுத்திவிட்டு, கவினை கீழே இறங்க சொல்லியிருக்கிறான். “உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் அக்காவ காதலிப்ப பள்ளத் தேவடியா மகனே” என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினின் கழுத்து, தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறான் மறவர் சாதிவெறியனான சுர்ஜித். படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கல்லூரியில் தங்கப் பதக்கம், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் என கல்வி, வேலை அனைத்திலும் சிறந்து விளங்கினாலும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

கல்வி கற்றால் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளிவந்து விடலாம், சமூகத்தில் மரியாதையுடனும் பாதுகாப்பாகவும் வாழ்ந்துவிடலாம் என்ற கருத்து பொதுச் சமூகத்தில் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கவினின் சாதி ஆணவப் படுகொலை இந்த சாதிய கட்டமைப்பின் கோரத்தை நம் முகத்தில் அறைந்துள்ளது.

மேலும், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, ஆதிக்கச் சாதி பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதாகவும் நாடகக் காதல் செய்வதாகவும் ஆதிக்கச் சாதி வெறியர்கள் செய்துவந்த பொய் பிரச்சாரத்தின் மீது கவினின் ஆணவப் படுகொலை காறி உமிழ்ந்துள்ளது.

திசைதிருப்பப்பட்ட விவாதம்

கவின் சாதி ஆணவப் படுகொலை அரசியல் தளத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவாதங்களை தொடங்கிவைத்த நிலையில், ஆளும் தரப்பும் ஆதிக்கச் சக்திகளும் அதனை திட்டமிட்டே திசைதிருப்பின.

தி.மு.க. ஆதரவு நாளிதழான தினகரனின் ஜூலை 29 தேதியிட்ட செய்தித்தாளில், சுபாஷினி கவினை காதலிக்கவில்லை என்று போலீசிடம் கூறியதாக பொய்யான செய்தியை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுபாஷினி மீது  தனிநபர் தாக்குதல் தொடுக்கும் வகையில் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டன. 2023 மழைவெள்ளம் தொடங்கி அஜித் குமார் லாக்கப் படுகொலை வரை அனைத்து சம்பவங்களிலும் தி.மு.க. மீதான அதிருப்தியை மடைமாற்றும் வகையில் விவாதங்களை திசைதிருப்பிவரும் தி.மு.க. ஆதரவு சமூக ஊடகப் பக்கங்கள் இதிலும் முன்னின்று செயல்பட்டன.

அதேபோல், கவின் தனது பெண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் சமூக ஊடகங்களில் பரப்பிய ஆதிக்கச் சாதிவெறியர்கள் கவினின் நடத்தையை கொச்சைப்படுத்தத் தொடங்கினர். இதன்மூலம் ஆணவப் படுகொலை, ஆதிக்கச் சாதிவெறி குறித்தான விவாதம் தனிநபர் ஒழுக்கம் சார்ந்ததாக மாற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி, கோகுல்ராஜை ஆணவப் படுகொலை செய்த சாதிவெறியன் யுவராஜை கொண்டாடுவது போல, கவினை ஆணவப் படுகொலை செய்த சுர்ஜித்தை, தங்கள் சாதியைக் காக்க வந்த நாயகனைப் போல சித்தரித்து ஆதிக்கச் சாதிவெறி கும்பல் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பரவச் செய்தது. ஹரி நாடார் போன்ற ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்த மிருகங்கள் கவினின் ஆணவப்படுகொலையை நியாயப்படுத்தி பேசின.

ஆனால், இவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது தமிழ்நாடு போலீசு.

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசு

கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவனின் பெற்றோர்கள் இருவரது பெயரும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. ஆனாலும், சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியது போலீசு.

பல வழக்குகளில் சந்தேகம் என்ற பெயரில் அப்பாவி மக்களை விசாரணைக்கு அடித்து இழுத்துச் செல்லும் போலீசு, சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நாடகமாடியது.

ஆனால், ஜூலை 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் சுர்ஜுத், கவினை படுகொலை செய்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் சுர்ஜித்தை அவனது தந்தை சரவணக்குமார் தானே அழைத்துச் சென்று போலீசு நிலையத்தில் சரணடைய வைத்திருக்கிறார். இது, சரவணக்குமாருக்கு தெரிந்துதான் கவின் ஆணவப் படுகொலை செய்ப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. அப்படியிருந்தும் சரவணக்குமாரை போலீசு உடனே கைது செய்யவில்லை.

மேலும், குற்றவாளியான சுர்ஜித்தின் புகைப்படத்தைக்கூட வெளியிடாமல் போலீசும் ஊடகங்களும் கொலைகாரனை பாதுகாத்தன. ஜனநாயக சக்திகள்தான் சுர்ஜித் அரிவாளுடன் நிற்கும் புகைப்படங்களையும் அவனது பெற்றோர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

ஆனால், சுர்ஜித்தின் பெற்றோர்களை கைது செய்தால்தான் மருத்துவமனையிலிருந்து கவினின் உடலை வாங்குவோம் என்று கவினின் குடும்பத்தினர் ஐந்து நாட்களாக உறுதியாக போராடினர். கவின் ஆணவப் படுகொலைக்கு நீதி கேட்டும் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாகவே சுர்ஜித்தின் தந்தை சரவணக்குமாரை மட்டும் ஜூலை 30 அன்று போலீசு கைது செய்தது. ஆனால், இன்றுவரை சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்யவில்லை.

அதிகரிக்கும் சாதியத் தாக்குதல்கள்

சமீபத்தில், கவினின் சாதி ஆணவப் படுகொலை மட்டுமே பொதுச் சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் 65 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதை சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் ஏழு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.

இதனைக் கண்டும் காணாமல் இருக்கும் தி.மு.க. அரசு, அவை சிறிதளவு பேசுபொருளானாலும் மூடிமறைப்பதற்கான வேலையை செய்கிறது. சான்றாக, “தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை இல்லை. திருநெல்வேலியில் இல்லவே இல்லை” என்று தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேசியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தென்மாவட்டங்களில் சாதியக் கொலை-தாக்குதலுக்கு உள்ளாகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்பட்டமாக துரோகம் இழைத்து வருகிறது.

ஆனால், தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறித் தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகள் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துவருவது குறித்தும் அதற்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம் உள்ளதையும் “புதிய ஜனநாயகம்” தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தென்மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் இயங்கும் தேவர் (முக்குலத்தோர்) மற்றும் நாடார் சாதி சங்கங்கள் மக்களிடத்திலும் குறிப்பாக இளைஞர்கள்-மாணவர்களிடத்திலும் சாதிவெறியூட்டி வருகின்றன. இதன்விளைவாக இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே அரிவாள் கலச்சாரம் அதிகரித்துவருகிறது. நாங்குநேரி சின்னதுரை, தூத்துக்குடி தேவேந்திரராஜா போன்ற பள்ளி மாணவர்கள் சக மாணவர்களாலேயே வெட்டப்பட்டது இதனை உணர்த்தியது.

கவினை படுகொலை செய்த சுர்ஜித்திற்கும் 24 வயதுதான். ஆங்கிலப் புலமை, படிப்பு, பணம் இருந்தும் கேடுகெட்ட சாதிவெறியனாக சுர்ஜித் இருந்திருக்கிறான் என்று எவிடென்ஸ் கதிர் தன்னுடைய கள ஆய்வில் தெரிவிக்கிறார். சுர்ஜித்தின் அரிவாள் வெட்டுகள் கூலிப்படைக் கும்பல் போன்று இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும், சுர்ஜித் தன்னுடைய சமூக வலைத்தளங்களில், அரிவாளுடன் கூடிய தன்னுடைய புகைப்படங்களை ஆதிக்கச் சாதிவெறி பாடல்களுடன் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான். “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் எப்படி தன் அக்காவை காதலிக்கலாம்” என்ற சுர்ஜித்தின் ஆதிக்கச் சாதிவெறியே கவினை படுகொலை செய்வதற்கான அடிப்படை. இந்த ஆதிக்கச் சாதிவெறியை சுர்ஜித் போன்ற இளைஞர்களிடையே ஊட்டிவரும் வேலையைத்தான் ஆதிக்கச் சாதி சங்கங்கள் மேற்கொண்டுவருகின்றன.

அதிலும், ஆதிக்கச் சாதிவெறியனான திருமாறன் ஜி போன்ற ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் தமிழ்நாட்டில் இந்து முனைவாக்கத்தின் மூலம் மதக்கலவரங்களை தூண்ட முடியவில்லை. இதனால், ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி சாதியமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்களையும் ஆணவப் படுகொலைகளையும் கலவரங்களையும் நிகழ்த்தி, தன்னுடைய அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் திட்டமிடுகிறது.

மறுபுறம், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற கருங்காலிகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களையும் தன்னுடைய அடித்தளமாக திரட்டிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயல்கிறது. இந்த கருங்காலிகள் தேவேந்திர குல வேளாளர் மக்களிடத்தில் சுயசாதி பெருமையையும் சாதிவெறியையும் ஊட்டி வருகின்றனர். தற்போது கூட கவினின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணசாமியின் மகனான ஷியாம், “உன் அரிவாள் மட்டும் பேசாது; எல்லார் அரிவாளும் பேசும்” என்று இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலோ தனது ஊடுருவலை தீவிரப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் இத்தகைய சாதியக் கொடூரங்களை கட்டவிழ்த்துவிட முயற்சித்து வருகிறது.

ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு ஜனநாயக சக்திகளும் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளும் கூட வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவோம் என்று வாக்குறுதியளித்திருந்த மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து  முதல்வரான பிறகு, “தனிச்சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே இருக்கும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுகிறார். இது தி.மு.க. அரசின் அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஏழு ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்துள்ளது. அதிலும் குற்றவாளிகள் மேல் முறையீடு செய்து தண்டனையிலிருந்து விடுதலை ஆகிவிடுகின்றனர் அல்லது தண்டனையை குறைக்கச் செய்து விடுகின்றனர். இதனால், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு இதுபோன்ற சிறப்புச் சட்டம் தேவையாக உள்ளது” என்று எவிடென்ஸ் கதிர் கூறுகிறார்.

இவ்வாறு இயற்றப்படும் சிறப்பு சட்டங்களில், ஆணவப்படுகொலைகளில் ஈடுபடும் குடும்பங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது; ஆணவப் படுகொலைகளை ஊக்குவிக்கும் வகையில் பேசும், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஆதிக்கச் சாதிவெறியர்களை கைது செய்து சிறையிலடைப்பது; ஆணவப் படுகொலைகளுக்கு மூளையாக செயல்படும் ஆதிக்கச் சாதி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வைக்கவும்  வலியுறுத்த வேண்டிள்ளது.

அதேசமயம், களப்போராட்டங்களே இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, கவினின் ஆணவப் படுகொலையில் ஈடுபட்டுள்ள, சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் போலீசுதுறையை சார்ந்தவர்கள். அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் உள்ளவர்களே ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்தவர்களாக உள்ளனர்.

மேலும், தென்மாவட்ட போலீசுதுறையில் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு நிரப்பப்பட்டு வருகின்றனர். போலீசுதுறையில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த அதிகார வர்க்கத்தின் பலத்துடன்தான் தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

எனவே, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுவது என்பதுடன், ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதற்கான போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டியுள்ளது.

மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கிவரும் இச்சூழலில் இக்கட்டமைப்பானது முன்னெப்போதும் இருந்ததைவிட தலித் மக்களுக்கு விரோதமானதாக மாறி வருகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் உண்மையான ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் வழங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க