பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படலாம் என்று பரவும் செய்தி பாசிச கும்பலின் பரந்துவிரிந்த திட்டத்தை வெளிப்படுத்துகிறது.

ட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்துவரும் மோடி அரசு, சொல்லிக் கொள்ளப்படுகின்ற தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் வகையில் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை போன்ற பாசிச சட்டத்திட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்தி தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளை செல்லாக்காசாக்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த சில ஆண்டுகளாகவே வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க-விற்கு எதிரான வாக்காளர்களை நீக்கியும், பா.ஜ.க-விற்கு ஆதரவாக போலி வாக்காளர்களை இணைத்தும் மோசடிகளை செய்து வருகிறது.

தற்போது, இம்மோசடியை மிகவும் நிறுவனமயமாகவும் ‘சட்டப்பூர்வமாக’வும் செய்வதற்காக “சிறப்பு தீவிர மறு ஆய்வு” (Special Intensive Revision – SIR) என்கிற பாசிச நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் துணையுடன் கையிலெடுத்துள்ளது.

பீகாரில் வருகின்ற நவம்பர் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 24 அன்று பீகார் மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர மறு ஆய்வு செய்ய உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பொதுவாக இந்தியாவில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் குறிப்பிட்ட கால இடைவெளியிலும், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்தும் இறந்தவர்களை நீக்கியும் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொண்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வழிமுறை தேர்தல் ஆணையத்தின் விதிகளில் “சுருக்க மறு ஆய்வு”, “தீவிர மறு ஆய்வு” என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. 2003-ஆம் ஆண்டில் பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர மறு ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பீகார் மாநிலத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “சிறப்பு தீவிர மறு ஆய்வு” என்பது தேர்தல் ஆணையத்தின் விதிகளிலேயே இல்லாத முற்றிலும் புதிய சொல்லாடலும் நடவடிக்கையுமாகும். அதாவது, பீகாரில் இனிவரப்போகும் தேர்தல் அனைத்திலும் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு ஏதுவாக புதிய வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான பா.ஜ.க+தேர்தல் ஆணையத்தின் கூட்டு சதியாகும்.

வாக்குரிமையைப் பறிக்கும் சதி

சிறப்பு தீவிர மறு ஆய்வு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படும். அவற்றை ஜூலை 25-ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பிறகு செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்கத் தவறிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம், வரைவு பட்டியலில் ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம். இதனடிப்படையில், செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், 2003 பீகார் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத ஒட்டுமொத்த வாக்காளர்களும் தங்களது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதன் மூலம் வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதாவது, 1 ஜூலை 1987-க்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் பிறந்த தேதி அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்க வேண்டும்; 1 ஜூலை 1987 முதல் 2 டிசம்பர் 2004 வரை பிறந்தவர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும் அவர்களின் பெற்றோரில் ஒருவரின் பிறந்த தேதி/இடம் ஆகியவற்றை நிரூபிக்க வேண்டும். 2 டிசம்பர் 2004-க்கு பிறகு பிறந்தவர்கள் தங்களது மற்றும் தங்கள் பெற்றோர் இருவரின் பிறந்த தேதி/இடம் ஆகியவற்றை நிரூபிக்க வேண்டும் என்று அறிவித்து மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது தேர்தல் ஆணையம்.

இவ்வாறு வாக்காளர்கள் தங்களது குடியுரிமையையும் இருப்பிடத்தையும் நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. இதில் பிறப்பு சான்றிதழ், கடவுச்சீட்டு (Passport), கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டு பெரும்பாலான மக்களிடத்தில் இல்லாத ஆவணங்களே இடம்பெற்றுள்ளன. மாறாக, மோடி அரசால் இந்திய மக்கள் அனைவரிடத்திலும் திணிக்கப்பட்ட ஆதார் அட்டை, பெரும்பாலான மக்களிடமுள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமிர்த்தனமாக கூறியுள்ளது.

பத்து கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பீகார் மாநிலம் சமூக -பொருளாதார ரீதியாகவும் கல்வி – வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய மாநிலமாகும். இம்மாநிலத்தில் பெரும்பகுதி மக்கள் வறுமையில் வாடுவதுடன் அற்ப கூலிக்கு புலம்பெயர் தொழிலாளர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். எனவே, பெரும்பான்மை மக்கள் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை பெற்றிருக்கவில்லை. மேலும், பீகார் மாநிலம் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் அம்மக்களிடமுள்ள சில ஆவணங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பாக நடத்தப்பட்ட போராட்டம்

மேலும், 2000-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்திய அளவில் குழந்தை பிறப்பு 50 சதவிகிதம் பதிவு செய்யப்படுகிறதெனில், பீகாரில் வெறும் மூன்று சதவிகித அளவிற்கே பதியப்படுகிறது. குழந்தை பிறப்பு பதியப்பட்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் பிறப்பு சான்றிதழை வாங்குவதில்லை. இதுபோன்ற மாநிலத்தில் வாக்காளர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் பிறப்புச் சான்றிதழ் கேட்பது, மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்குரிமை தரப்படும் என்று மிரட்டுவது போன்றவையெல்லாம் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்கும் திட்டமிட்ட சதியே ஆகும்.

மேலும், அரசு அலுவலர்கள், என்.சி.சி. கேடட்கள், என்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் உட்பட சுமார் நான்கு லட்சம் பேரை தன்னார்வலர்கள் என்ற பெயரில் சிறப்பு தீவிர மறு ஆய்வுப் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்துகிறது. பீகாரில் பா.ஜ.க-வுடன் கூட்டணியிலுள்ள நிதிஷ்குமார் அரசு, அரசு-அதிகார வர்க்கத்தின் துணையுடனும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை புகுத்தியும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யும் வாய்ப்பை இது உருவாக்கிக் கொடுத்துள்ளது.

மக்கள் விரோத தேர்தல் ஆணையத்தால் வஞ்சிக்கப்படும் பீகார் மக்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வு குறித்த அறிவிப்பானது பீகார் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, தங்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, அதனால் தங்களுக்கான ரேஷன் பொருட்களும் பிற சலுகைகளும் நிறுத்தப்படுமோ என்று மக்கள் அஞ்சி வருகின்றனர்.

இதனால், பீகாரில் தற்போது நடவுக் காலமாக இருந்தாலும் அதனையெல்லாம் விட்டுவிட்டு வாக்குரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சான்றாக, பீகாரைச் சேர்ந்த பூல்குமாரி என்ற பெண், படிவத்தில் ஒட்டுவதற்கு புகைப்படம் கேட்கப்பட்டதால் வீட்டிலிருந்த ரேஷன் அரிசியை ரூ.100-க்கு விற்று புகைப்படம் எடுத்துக் கொடுத்த அவலம் செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மறுபுறம், ஜூன் 24 அன்று சிறப்பு தீவிர மறு ஆய்வு குறித்து அறிவித்த தேர்தல் ஆணையம், எந்தவொரு முன் தயாரிப்புகளையும் மேற்கொள்ளாமல் மறுநாளிலிருந்தே விண்ணப்பிக்கும் நடவடிக்கையை தொடங்கியது. இது அம்மாநிலத்தில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களுக்காக விண்ணப்பித்ததால் அரசு அலுவலகங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை நகலெடுக்க முடியாததால் பல நாட்களுக்கு மக்களிடம் படிவங்களே சென்று சேரவில்லை. மேலும், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சாவடி நிலை அதிகாரிகள் (BLO – Booth Level Officers) வீடு வீடாகச் சென்று வழங்காததால் அவர்களின் வீடுகளை தேடி மக்கள் அலைந்தனர்.

மேலும், சுபால் மாவட்டத்தின் கோசி அணக்கரை பகுதி உட்பட பீகாரின் பெரும்பகுதி தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் ஆவணங்களை நகலெடுப்பதற்குக் கூட உயிரை பணயம் வைத்து பலமுறை ஆற்றைக் கடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், பீகாரின் 21 சதவிகித மக்கள் வெளிமாநிலங்களுக்கும் பீகாருக்குள்ளும் புலம்பெயர்ந்து வேலை செய்துவருவதால் அவர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகியுள்ளது. ஸ்வான் (SWAN) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பீகாருக்கு வெளியே உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் 90 சதவிகிதத்தினர் பீகாரில் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு தீவிர மறு ஆய்வு குறித்து கேள்விபட்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாநிலத்திற்குள்ளும் நகர்ப்புற மக்கள் உட்பட பீகாரின் பெரும்பான்மை மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வு நடைபெறுவது பற்றி தெரியவில்லை. தலைநகர் பாட்னாவில் உள்ள மக்களுக்கு கூட கணக்கெடுப்பு படிவங்கள் சென்று சேரவில்லை.

அதேசமயம், பி.எல்.ஓ. அதிகாரிகள் மக்களுக்கு படிவங்களை விநியோகிக்காமல் தாங்களே படிவங்களை நிரப்பியும் கையொப்பமிட்டும் மோசடி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அஜித் அஞ்சும் எனும் ஊடகவியலாளர் அம்பலப்படுத்திய நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்

ஜூலை 25-ஆம் தேதியுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வின் முதல் கட்டம் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஜூன் மாதத்தில் பீகார் வாக்காளர் பட்டியலில் 7.89 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், சிறப்பு தீவிர மறு ஆய்வில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு 7.24 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், 7 லட்சம் பேர் பல இடங்களில் பதிவு செய்துள்ளதாகவும் மற்றும் பிறர் வாக்காளராகப் பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் நீக்கத்திற்கான காரணங்களை கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

அதாவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 22 லட்சம் மக்கள் செத்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பொய்யுரைக்கிறது.

ஒரு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு நடத்தப்பட்டால், கணிசமாக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆனால், எங்குமே நிகழாத அதிசயமாக பீகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் குறைந்துள்ளது.

மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2025 ஜூலையில் பீகாரின் வயதுவந்தோர் (Adult) மக்கள்தொகை 8.18 கோடி என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24 கோடி பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து, உண்மையாக நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சம் அல்ல, 94 லட்சம் என்று பாரத் ஜோடோ அபியான் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான யோகேந்திர யாதவ் அம்பலப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜூலை 2 அன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க சென்றபோது, “பீகாரில் 20 சதவிகிதம் போலி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் நீக்கப்பட வேண்டும்” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்ததாக “தி வயர்” யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் யோகேந்திர யாதவ் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, பீகாரில் மொத்தமாக 1.5 கோடி வாக்காளர்கள் (20 சதவிகிதம்) நீக்கப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அதிகளவிலான நீக்கங்கள் நடந்திருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்ட பத்து மாவட்டங்களில், ஐந்து இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களாக உள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் கிழக்கு பீகாரிலுள்ள சீமாஞ்சல் பகுதியில் மட்டும் 2.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இது சிறப்பு தீவிர மறு ஆய்வின் முக்கிய நோக்கம் இஸ்லாமிய மக்களின் வாக்குரிமையை பறிப்பதே என்பதை அம்பலப்படுத்துகிறது.

மறுபுறம், நீக்கப்பட்ட வாக்காளர்களில் 55 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். 243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் 43 தொகுதிகளில் 60 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெண்கள் விரோத பார்ப்பனிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிச கும்பல், பெண்களின் வாக்குரிமையை பறித்து அவர்களை அடிமைத் தலைக்குள் தள்ள துடிக்கிறது.

கடந்தாண்டுகளில் அசாம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் பா.ஜ.க-வால் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அதன்பிறகு அசாமில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பத்து தொகுதிகள் உடைக்கப்பட்டு அவை இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன; பல தொகுதிகள் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாகவும் இருக்கும்படி மாற்றியமைக்கப்பட்டன; பெரும்பாலான தொகுதிகள் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டன.

அதேபோல், தற்போது சிறப்பு தீவிர மறு ஆய்வு என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிலிருந்து இஸ்லாமியர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை காவிமயமாக்குகிறது பாசிச பா.ஜ.க. கும்பல். இதன் மூலம், இஸ்லாமிய வாக்குவங்கியை ஒழித்துக்கட்டவும் துடிக்கிறது.

குடியுரிமை பறிபோகும் அபாயம்

மோடி அரசால் 2020-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அதன் அங்கமான தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC – National Register of Citizens) இஸ்லாமிய மக்களும் ஜனநாயக சக்திகளும் போராடி பின்வாங்கச் செய்தனர்.

இந்நிலையில், சிறப்பு தீவிர மறு ஆய்வில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கு குடியுரிமையை நிரூபிக்கச் சொல்வதன் மூலம் பீகாரில் பின்வாசல் வழியாக என்.ஆர்.சி-யை நடைமுறைப்படுத்துகிறது பாசிச கும்பல். எந்தவொரு சட்டப்பூர்வ அடிப்படையும் உச்சநீதிமன்றத்தின் பெயரளவிலான மேற்பார்வையும் கூட இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ஜூன் 24, 2025 தேதியிட்ட உத்தரவின் 5(b) பிரிவானது, சிறப்பு தீவிர மறு ஆய்வு நடவடிக்கையின் போது உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO), யாரையேனும் வெளிநாட்டவர் என்று சந்தேகித்தால் அவர்களை குடியுரிமை அதிகாரிகளிடம் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம், அவர்களது குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன், வசிப்பிட இழப்பு, தடுப்புக் காவல், நாடுகடத்தல் போன்ற ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளது. குடியுரிமையை சோதிப்பது, சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டடைவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குறுக்குவழியில் இப்பாசிச நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

மேலும், சிறப்பு தீவிர மறு ஆய்வில் விண்ணப்பிக்கும் மக்களின் குடியுரிமையை சரிபார்க்கும் அதிகாரமானது உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தை இ.ஆர்.ஓ-களுக்கு வழங்குகிறது. மேலும், வாக்குரிமை சரிபார்ப்பு என்ற பெயரில் எந்தவித சட்டப் பாதுகாப்புமின்றி குடியுரிமை சரிபார்ப்புக்கான குறுக்கு வழியை உருவாக்குகிறது. இதனால், சந்தேகம் என்ற பெயரில் யாருடைய குடியுரிமை-வாக்குரிமையை வேண்டுமானாலும் கேள்விக்குள்ளாக்க முடியும். அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள சங்கிகளின் மூலம் இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சதித்திட்டமாகவே இதைப்பார்க்க வேண்டியுள்ளது.

இதேபோல், சமீப காலமாக “ஆபரேஷன் புஷ்பேக்” (Operation Push Back) என்ற பெயரில், அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றி வருகிறது மோடி அரசு. தேர்தல் ஆணையமும் அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பலர் பீகாரிலிருப்பதாக கூறியே சிறப்பு தீவிர மறு ஆய்வை அறிவித்தது.

இதன் மூலம், ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கை’ என்ற நிகழ்ச்சிநிரலை உருவாக்கி, இந்தியா முழுவதும் இஸ்லாமிய வெறுப்பு – இந்து மதவெறி – தேசவெறியை ஊட்டுவதற்கு பாசிச கும்பல் அடித்தளமிட்டு வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் அப்பட்டமாக துணைபோகிறது.

மேலும், அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கும் இந்நிகழ்ச்சிநிரலின் மூலம் மதவெறி-தேசவெறியூட்டி பா.ஜ.க. வெற்றிபெற விழைகிறது. மேற்குவங்கத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி சிறையிலடைக்கப்பட்டு வருவது இதனை நிரூபிக்கிறது.

பாசிசமயமாகும் தேர்தல் கட்டமைப்பு

சிறப்பு தீவிர மறு ஆய்விற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஆனால், “தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு உறுப்பு என்பதால் அது ‘தேர்தல் பணி’யை மேற்கொள்வதைத் தடுக்க முடியாது” என்று கூறி சிறப்பு தீவிர மறு ஆய்வை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது, இப்பணியை முழுமையாக முடிப்பதற்கு அனுமதியளித்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் மூலம் இப்பாசிச நடவடிக்கையை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பது நிரூபனமாகிறது.

மறுபுறம், சிறப்பு தீவிர மறு ஆய்விற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவது; நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதிக்க கோருவது; நாடாளுமன்ற வளாகத்தில், பீகார் சட்டமன்றத்தில் போராட்டம் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பாசிஸ்டுகளின் அரங்காக மாறியுள்ள தேர்தல் ஆணையமும் நாடாளுமன்றமும் எதிர்க்கட்சிகளுக்கு முறையான விவாதம் நடத்துவதற்கான ஜனநாயகத்தைக் கூட வழங்குவதற்குத் தயாராக இல்லை.

ஜூலை 9 அன்று நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில், பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அதன் பிறகு பாசிச கும்பலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகள், போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவில்லை. மேலும், தற்போதுவரை இந்தியா கூட்டணி சார்பாக நாடு தழுவிய போராட்டங்களும் கூட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவையெல்லாம், எதிர்க்கட்சிகள் தேர்தல் என்ற வரம்பிற்குள் நின்றுகொண்டும் மாற்று திட்டங்கள் இல்லாமலும் பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதன் தவிர்க்கவியலாத விளைவாகும். ஆனால், சிறப்பு தீவிர மறு ஆய்வு என்பது தேர்தலை பாசிசமயமாக்கும் சதித்திட்டத்தின் அங்கமாகும். இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமான திட்டங்களில் ஒன்றாகும்.

பீகார் மாநிலமானது இத்திட்டத்திற்கான சோதனைசாலை மட்டுமே. 2026-இல் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களிலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதனை அமல்படுத்தி அம்மாநிலங்களில் மோசடியாக ஆட்சியை கைப்பற்றுவதே பாசிச கும்பலின் நோக்கமாகும். நாடுதழுவிய அளவில் சிறப்பு தீவிர மறு ஆய்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அனைத்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது இதை நிரூபிக்கிறது.

மேலும், பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படலாம் என்று பரவும் செய்தி பாசிச கும்பலின் பரந்துவிரிந்த திட்டத்தை வெளிப்படுத்துகிறது.

எனவே, சிறப்பு தீவிர மறு ஆய்வு எனப்படும் இப்பாசிச திட்டத்தின் அபாயங்கள் குறித்து மக்களிடத்தில் கொண்டு சேர்த்து கள நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இத்திட்டத்திற்கெதிரான நாடு தழுவிய போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் இப்பாசிச நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க