தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு!

போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூராரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

0

சென்னை மாநகராட்சியின் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறும், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் கட்டடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் (NULM – National Urban Livelihoods Mission) அடிப்படையில் சென்னை மாநகராட்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் பத்து மண்டலங்களின் தூய்மைப் பணி ஒப்பந்த அடிப்படையில், உர்பசெர் சுமீட் (Urbaser Sumeet), ராம்கி என்விரோ எஞ்சினியர்ஸ் லிமிடெட் (Ramky Enviro Engineers Ltd) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்பட்டது. இதன் மூலம், தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைத்துவந்த குறைந்தபட்ச சலுகைகள், அடிப்படை ஊதியம் கூட பறிக்கப்பட்டு அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொத்தடிமைகளாக்கப்பட்டனர்.

ரூ.7,000, ரூ.8,000 ஊதியத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் மீதான உழைப்பு சுரண்டல் தீவிரமடைந்ததுடன் பெண் தூய்மைப் பணியாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மோசமான நிலையை எட்டியுள்ளது. அன்று முதல் இன்று வரை தூய்மைப் பணியை கார்ப்பரேட்களிடம் தாரைவார்த்த முடிவை திரும்பபெறக் கோரியும் தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் போராடிய தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்த தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலின், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், ஆட்சியமைத்த பிறகு கார்ப்பரேட் ஒப்பந்தம் மூலமே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் முதுகில் குத்தியது தி.மு.க. அரசு.

இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது, ஆறாவது மண்டலங்களிலும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் தாரைவார்க்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில், ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கார்ப்பரேட் நிறுவனமான – ராம்கி குழுமத்திற்கு கீழ் வரும் எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷனஸ் லிமிடெட் (MSW Solutions Limited)-யிடம் பத்து ஆண்டுகளுக்கு ரூ.2,363 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தமிட உள்ளதாக கடந்த ஜூலை 18 அன்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.


படிக்க: வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்


அதனைத் தொடர்ந்து ஜூலை 31-ஆம் தேதியன்று தூய்மைப் பணியாளர்களை தொலைபேசியில் அழைத்து, “நீங்கள் நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம். வந்தால் தனியார் நிறுவனத்தின் கீழ்தான் வேலை செய்ய வேண்டும்” என்று சென்னை மாநகராட்சி அடாவடியாக தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள், மறுநாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். மேலும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுகின்ற பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது; தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து ரிப்பன் கட்டடம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூராரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தினந்தோறும் ரிப்பன் கட்டடத்திற்கு வந்து செல்லும் தி.மு.க. அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் போராடும் தூய்மைப் பணியாளர்களை துளியும் பொருட்படுத்தாமல் திமிர்த்தனமாக புறக்கணித்து வருகின்றனர்.

மேலும், போராடும் தூய்மைப் பணியாளர்கள் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பதாகக் கூறி, அவர்களை கைது செய்வதற்கான ஆணையை ஆகஸ்ட் 7 அன்று சென்னை மாநகர போலீசு பிறப்பித்தது. ஆனால், தொழிலாளர்களோ தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று உறுதிபட தெரிவித்து, பத்தாவது நாளாகப் போராடி வருகின்றனர்.

“புயலாக இருந்தாலும் சரி, கோவிட்-19 ஆக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் முன்னணியில் இருந்தோம். எங்கள் மக்களைக் காப்பாற்ற எங்கள் குடும்பங்களை விட்டுச் சென்றோம். சில தொழிலாளர்கள் உடல்நலக் கேடுகள் இருந்தபோதிலும் விடுப்பு எடுக்காமல் வேலை செய்கின்றனர். ஆனால் யாரும் எங்களது கோரிக்கைகளை கேட்கவில்லை. சமூக வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டோம்” என்று ராயபுரத்தில் பணிபுரியும் முனீஸ்வரி தெரிவித்துள்ளார்.

“சமீபத்தில் பெய்த மழையின் போது குப்பைகளை அகற்றும் போது மின்சாரம் தாக்கியது. ஒரு நாள் சம்பளத்தை கூட இழக்க முடியாததால் நான் தொடர்ந்து வேலை செய்கிறேன்” என்று தன்னுடைய வாழ்நிலையின் அவலத்தை வானதி என்ற தூய்மைப் பணியாளர் கூறுகிறார்.


படிக்க: சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! | தோழர் தீரன்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உரிமைகள் இயக்கத்தை சேர்ந்த தினகரன் கூறுகையில் “தி.மு.க., அ.தி.மு.க. இரு அரசாங்கங்களும் எங்கள் வேலையை மதிப்பதில்லை. அ.தி.மு.க. அரசு இருந்தபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எங்கள் அனைவரையும் நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றுமாறு 2021 ஜனவரியில் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை.

“மேலும் தூய்மைத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.687 வழங்கப்படுகிறது. இந்த குறைந்தபட்ச ஊதியம் கூட பல வருட போராட்டத்திற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு, எங்களது பல வருட அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், மாதத்திற்கு சுமார் ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை மட்டுமே வழங்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச ஊதியம் நடப்பு ஆண்டில் திருத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால், குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் தாரைவார்த்ததன் மூலம் தூய்மைப் பணியாளர்கள் பல ஆண்டுகளாக உழைத்து பெற்ற ஊதிய உயர்வையும் போராடி பெற்ற உரிமைகளையும் ஒரே நாளில் பறித்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துள்ளது தி.மு.க. அரசு.

இந்நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் அம்பத்தூர், பெரம்பூர் மற்றும் இராயபுரம் ஆகிய பகுதிகளில் கழிவுகள் நிரம்பி வழிவதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தொழிலாளர்கள் செய்துவருவது கழிவுகளை சுத்தம் செய்யும் பணி மட்டுமல்ல. கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது மற்றும் நிலத்தடி வடிகாலில் கழிவுகள் வெளியேறுவதை சரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தங்களது பாதுகாப்பு, நலன் குறித்தெல்லாம் கவலைப்படாமல் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் நிலத்தடி வடிகால் அடைப்பு காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆனால், விரைவில் கழிவுகளை அகற்ற வேறு ஒப்பந்ததாரரிடமிருந்து தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திமிர்த்தனமாக தெரிவிக்கின்றனர். ஆனால், போராடும் தொழிலாளர்களுக்கு பிற மண்டலங்களை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்துப் பேசிய சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ் குமார், “கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் முடிவை மாற்ற முடியாது. ஏனெனில் டெண்டர் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது” என்று அராஜக முறையில் பதிலளித்துள்ளார். மறுபுறம், வடசென்னையிலிருந்து வந்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் என்று சொல்லப்பட்ட மேயர் பிரியா, அதே வடசென்னை மக்கள் போராடும் போது எங்கே போனார் என்று போராடும் தொழிலாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன முதல்வர் ஸ்டாலினையும் போராடும் தொழிலாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க-வினர் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளனர்.

ஆனால், உணவு, தண்ணிரீன்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் தி.மு.க அரசு தன்னுடைய கார்ப்பரேட் திட்டத்தை செயல்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் பத்து மண்டைலங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டது, நாங்கள் இரண்டு மண்டலங்களைத்தான் தனியாருக்கு கொடுக்கிறோம் என்று தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை போட்டிபோட்டுக் கொண்டு ஏலத்திற்கு விடுகிறது.

குறிப்பாக, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கில் பல்வேறு துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு துரிதமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில்தான் சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகளின் தூய்மைப் பணியையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

எனவே தி.மு.க அரசின் இப்போக்கிற்கு எதிராக புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளும் குரலெழுப்ப வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான இப்போராட்டத்தில் அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதன் மூலமே தி.மு.க அரசை பின்வாங்க வைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க