பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை மாணவர்கள் உறுதியுடன் மறுக்கின்றனர்.

மார்ச் 14, 2025 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட பாலஸ்தீன ஆர்வலர் மஹ்மூத் கலீலுக்கு (Mahmoud Khalil) ஆதரவாக நடத்தப்பட்ட பேரணி.

யர்கல்வி நிறுவனங்களின் மீதும் பல்கலைக்கழகங்களின் மீதும் அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்ளார்ந்த அச்சத்தை உணர்த்துகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மீது கூறும் விமர்சனங்களும், கொலம்பியா, ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களின் மீது நடத்தும் தாக்குதல்களும், கல்வி நிறுவனங்களான ஜவஹர்லால் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களும் கேள்வி எழுப்பும் கல்வி நிறுவனங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிகரிக்கும் வன்முறைக்குச் சில சான்றுகளாகும். இவை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடப்பதோடு நிற்கவில்லை; ஐரோப்பாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களும் மற்ற பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் இதே போன்ற அச்சுறுத்தல்களைத் தினம் தோறும் சந்தித்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் நிதி உதவிகளை நிறுத்துவது, அரசியல் ரீதியான மிரட்டல்கள், அதிகார வர்க்கத்தின் தொல்லைகள், அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியவர்கள் தாக்கப்படுகின்றனர் – அவர்களது உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் மட்டுமல்ல, அறிவைப் பெருக்கவும் அவர்கள் பெற்ற அறிவை இளைய தலைமுறைக்கு வழங்கவும் விரும்பும் அவர்களது அர்ப்பணிப்பும் அச்சுறுத்தப்படுகிறது.

இத்தகைய தாக்குதல்களில் இருந்து கல்வியைக் காப்பதற்கான உலகக் கூட்டமைப்பு (Global Coalition to Protect Education from Attack – GCPEA) என்ற அமைப்பு வெளியிட்ட ‘2024- ஆம் ஆண்டில் கல்வியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்’ (Education under Attack 2024) என்ற அறிக்கை ஏறத்தாழ 6 ஆயிரம் தாக்குதல்கள் கல்வி நிறுவனங்களின் மீது 2022-2023 ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது என்று கூறுகிறது; இது இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களை விட 20% அதிகமாகும். இத்தகைய தாக்குதல்களின்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் துன்புறுத்தப்பட்துள்ளனர், காயப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக இந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை போர்களினால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் ஆயுத மோதல்கள் நடந்த பகுதிகளிலும் நடந்துள்ளன.

ஏப்ரல் 27 மற்றும் 28, 2023 ஆகிய தேதிகளில் சேதத்திற்கு உள்ளான சூடானின் மேற்கு டார்பூரில் உள்ள பள்ளி மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அகதிகள் முகாம்.

வரலாற்றில் அறிவு ஜீவிகள் மீதும் உயர்கல்வி நிறுவனங்களின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது என்பது புதிய ஒன்றல்ல. நிலப் பிரபுக்கள், மன்னர்கள், காலனி ஆட்சியாளர்கள், பிற்போக்கு மத சக்திகள் மற்றும் சக்தி வாய்ந்த ஆளும் வர்க்கம் ஆகியவர்கள் நீண்ட காலமாகவே பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் ஆளும் அதிகார அமைப்புகளை விமர்சிக்கும் உலகியல் சார்ந்த அறிவு ஆகியவற்றால் அச்சம் கொண்டிருந்தனர். பாரம்பரியமாகவே, உயர் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் விடுதலை சார்ந்த, சுதந்திரமான மற்றும் ஒரு விஷயத்தை பல்வேறு விதங்களிலும் நுட்பமாக ஆராய்வது – ஒரு விஷயத்தை பலவிதமாக கேள்விக்கு உட்படுத்துவது, மேலாதிக்க அதிகாரங்களையும், நிலவும் நிலைமைகளையும் கேள்விக்கு உட்படுத்துவது, எதிர்ப்பது சிந்தனைகளை வளர்ப்பதற்கான சுதந்திரமான தளத்தைக் கொடுப்பவையாக இருந்து வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்கள், அறிவைப் பெருக்கவும் பரப்பவும் மட்டுமல்லாமல் ஆழமான ஜனநாயக உணர்வையும், காலனியவாதத்திற்கு எதிரான உணர்வையும் பரப்புவதில் முக்கியமான பாத்திரம் ஆற்றி வருகின்றன. ஆட்சியில் உள்ளவர்களுக்கு – அவர்களது மேலாதிக்கத்தையும், அவர்களது அதிகாரப் படிநிலைகளையும், மக்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளையும் குலைக்கக் கூடிய அறிவு சார்ந்த பண்புகள், மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட கல்வி அவர்களுக்கு மிகவும் ஆழமான மனக்கலக்கத்தைத் தருவதாக உள்ளது. தற்போது அலை போல தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நீண்ட காலமாக விமர்சன பூர்வமாகச் சிந்திப்பதை வளர்த்தெடுக்கும் கல்வி நிறுவனங்களின் மீது ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களிலிருந்து தங்களுடைய பலத்தைப் பெறுகின்றன.

கல்வியை நுகர்வு பொருள் போலப் பண்டமாக்கியது, வியாபாரம் ஆக்கியது, சந்தைப்படுத்தியது, தனியார் மயமாக்கியது மற்றும் உயர் கல்வியை பல முறைகளில் பிரித்து வகைப்படுத்தியது ஆகியவற்றுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மீதான புதிய தாக்குதல்கள் தொடங்கின. இது வேலைவாய்ப்பு, பயன்பாடு மற்றும் திறன் மேம்படுத்துவதற்கான அறிவைப் பகிர்வது என்ற பெயர்களில் மானுட இயல்கள், சமூக விஞ்ஞானங்கள், சுதந்திரமான கலைகள் மற்றும் அவற்றுக்கான துறைகள் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் திட்டங்களால் தொடர்ந்து மதிப்பிழக்க வைக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல. ஆனால் முதலாளித்துவத்தின் தேவைகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மிகக் கவனமாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களை – பணிபுரியும் இடங்களில் தாங்கள் சுரண்டப்படும் சூழலை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்யும் திறனோ அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு அறைகூவல் விடுக்கும் திறனோ இல்லாத – இணங்கிச் செல்லும் பண்பு கொண்ட உழைப்பாளர்களை உருவாக்கும் நிறுவனங்களாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டே இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. அரசாங்கமும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் இந்த முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றன – மானுடவியல் துறைகள், சமூக விஞ்ஞானம் மற்றும் சுதந்திரமான கலைகளுக்கான துறைகள் ஆகியவற்றை மூடித் தங்களது குறிக்கோளில் வெற்றி அடைந்தன.

அரசுகளும், அரசாங்கங்களும், பல்கலைக்கழக தலைமைகளும், நிதி வழங்கும் அமைப்புகளும் விடுதலை சார்ந்த அறிவு உற்பத்தியை நலிவடையச் செய்த போதிலும், அவர்களால் இளைஞர்களின் உற்சாகம், சுதந்திரம், சமத்துவ மதிப்பீடுகள், மதச்சார்பற்ற சூழல் குறித்த அவர்களது மதிப்பீடுகள் மற்றும் விமர்சனப் பண்பு ஆகியவை பல்கலைக்கழக வளாகங்களிலும் வகுப்பறைகளிலும் வளர்வதைத் தடுப்பதில் தோல்வி அடைந்தனர். இந்த வெளிகளில் ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானபூர்வமான உணர்வை உருவாக்குவதிலும் அதை இளம் தலைமுறையினருக்குப் பகிர்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்; இந்த அறிவுப் பரவல் மூலம் மதவெறியையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும் எதிர்க்கும் வல்லமையை மக்களுக்குள் உருவாக்குகின்றனர்.

ஏப்ரல் 22, 2024 அன்று கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட நியூயார்க் பல்கலைக்கழக (NYU) மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான கண்காணிப்பு, பல்கலைக்கழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் தீவிரவாதிகள், இடதுசாரிகள், மேல் தட்டு அறிவு ஜீவிகள், தேசவிரோதிகள் என்று அவதூறு செய்வது, நிதியைக் குறைப்பதன் மூலம் கல்வி சார்ந்த சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பகைமையான சூழல்களிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த அழுத்தங்களை எதிர்த்து நிற்கின்றனர். மாணவர்கள் தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை உறுதியுடன் மறுக்கின்றனர். அவர்கள் அறிவுப் பெருக்கத்திற்கும், இணங்கிச் செல்வதை எதிர்க்கும் உணர்வை வளர்ப்பதற்கும், விடுதலைக்கான நடைமுறையை மேல் எடுத்துச் செல்வதற்கும் தங்களை ஒப்புவித்துக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஆகையால் உயர் கல்வி நிறுவனங்களின் மீதும் பல்கலைக்கழகங்களின் மீதும் அறிவு ஜீவிகளின் மீதும் தொடுக்கப்படும் தீவிரமான தாக்குதல்கள் ஆளும் வர்க்கங்கள் மத்தியில் நிலவும் பாதுகாப்பின்மை, கருத்து வேறுபாடுகள் பற்றிய அச்சம், கருத்தியல் ரீதியான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக உள்ளன. இந்தப் பரந்த அளவிலான தாக்குதல் ஒரு அடிப்படையான உண்மையை வெளிப்படுத்துகிறது: ஜனநாயக ரீதியான ஒப்புதலுடன் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதற்கான தங்களுடைய திறனில் மேல்தட்டு ஆட்சியாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். மாறாக, அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல், விமர்சனபூர்வமான சிந்தனையைச் சிதைக்கும் நோக்கத்துடன் இணங்கிச் செல்லும் பண்பாட்டைத் திணித்தல், கேள்வி கேட்கத் துணிபவர்கள் மற்றும் இருக்கும் நிலைமையைக் கேள்விக்கு உட்படுத்துபவர்கள் ஆகியவர்களின் வாயை அடைப்பது ஆகிய வழிகளை மேற்கொள்கின்றனர்.

ஆளும் வர்க்கங்கள் கல்வி சார்ந்த வட்டாரங்களின் விமர்சனங்களை மட்டுமல்ல கல்வியை குறித்தே அச்சம் கொள்கின்றன – கல்வியை அரசியல் விழிப்புணர்வு ஊட்டும் ஜனநாயக சக்தியாக, அமைப்புகளையும் மற்றும் சுரண்டப்படும் சூழலையும் தட்டிக் கேட்கும் வல்லமை உடையவர்களாக மக்களை உருவாக்கும் சக்தியாக, நீதியின் அடிப்படையில் அமைந்த மாற்று எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை உருவாக்கும் சக்தியாகக் கருதி அவை அஞ்சுகின்றன. உயர் கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஊமைகளாக்கி – ஜனநாயக உரிமைகளை அழித்து, சமத்துவமின்மை மற்றும் அடக்குமுறை ஆகியவற்றில் வேர் கொண்டுள்ள சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வலுப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தையே ஊமையாக்க ஆளும் வர்க்கங்கள் திட்டமிடுகின்றன.

ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி, காலனிய அடக்குமுறை, இனவெறி, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிரான புரட்சிகரப் போராட்டங்களில் பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும், அறிவுஜீவிகளும் ஆற்றியுள்ள முக்கியமான பங்குக்கு வரலாறு சாட்சியமாக உள்ளது. அதிகமான அடக்குமுறை அதிக அளவு ஓய்வில்லாத உறுதியான எதிர்ப்பை உருவாக்கும் — அதிகாரத்துக்கு சவால் விடும், அதைத் தோல்வி அடையச் செய்து அடியோடு நீக்கும். பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் அவற்றின் வளாகங்களும் எதிர்ப்புக்கான இடங்களாக – அனைத்து வகையான ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட எதிர்காலத்தைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்ட, முற்போக்கான சமுதாய மாற்றங்களுக்கான போராட்டங்களுக்கு வேர் விடும் வெளிகளாக இருக்கட்டும். உண்மையான அறிவு இணக்கப்படுத்துவது இல்லை – அது விடுதலை செய்கிறது.

(வுண்ட்டர் கரண்ட்ஸ் வலைத்தளத்தில் ஏப்ரல் 19, 2025 அன்று வெளியிடப்பட்டு, மே 19, 2025 அன்று செந்தழல் வலைத்தளத்தில் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கட்டுரை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க