தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’

வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.

நேற்றைய தினத்தில் (13.09.2025) தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பான இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

முதல் வழக்கு

பாரிமுனையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதால் அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தார்.

தேன்மொழிக்கு மூத்த வழக்கறிஞர் இராகவாச்சாரி வாதாடினார். தேன்மொழிக்கு ஆதரவாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரும் வாதாடினார்.

தூய்மை பணியாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதாடினார்.

மூத்த வழக்கறிஞர் இராகவாச்சாரியின் வாதம் ஏற்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் நோக்கம் எதுவும் கண்டுகொள்ளப்படாமல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தூய்மைப் பணியாளர்களை ரிப்பன் கட்டட வாசலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த இத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே, நேற்றிரவு போராடும் தொழிலாளர்கள் மீது போலீசு மூலம் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி கைது செய்தது தி.மு.க. அரசு.

இரண்டாவது வழக்கு

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது; தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவின் மீது இடைக்காலத் தடை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து “உழைப்போர் உரிமை இயக்கம்” சார்பில் வழக்கறிஞர் பாரதி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கறிஞர் பாரதியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் தோழர் குமாரசாமியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வி.பி. ராமன், ராம்கி நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆகியோரும் வாதாடினர்.

காலை 11:30 மணிக்கு தொடங்கிய வாதம், மாலை 3:30 மணி வரை நீடித்தது. மூத்த வழக்கறிஞர் தோழர் குமாரசாமி, மிகச்சிறந்த நீண்டதொரு வாதத்தை முன்வைத்தார்.

உண்மையைச் சொல்லப் போனால் அவருடைய வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. மாறாக, மல்டி நேஷனல் கார்ப்பரேட் கம்பெனியின் (ராம்கி கார்ப்பரேட் நிறுவனம்) அருமை, பெருமைகளை மட்டுமே அவர்களால் கூற முடிந்தது.

தொழிலாளர்களின் பணி இழப்பு, பணி மூப்பு இழப்பு, பென்ஷன் இழப்பு உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் வழக்கறிஞர் குமாரசாமி முன்வைத்த போதும் கூட அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

தொழிற் துறை தகராறுகள் சட்டம், பல்வேறு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகள், தொழிலாளிகளின் பிரச்சினைகள், அரசு என்றால் என்ன அதன் பணி என்ன? கார்ப்பரேட் நிறுவனத்தின் இயல்பான தன்மை என்ன? இன்றைக்கு போராடும் தூய்மை பணியாளர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? அவர்கள் தரப்பில் என்ன நியாயங்கள் உள்ளன? அனைத்தையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

மொத்தம் ஐந்து மணி நேரம் நடந்த அந்த வழக்கு வாதத்தில், தோழர் குமாரசாமி மட்டும் ஏறத்தாழ மூன்றரை மணி நேரத்துக்கு மேல் வாதம் செய்தார்.

எதிர்த் தரப்பில் மாநகராட்சியின் சார்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் வி.பி. ராமன் மற்றும் ராம்கி நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் இருவரையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டு தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். தோழர் குமாரசாமி முன்வைத்த வாதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தால் அது தொழிலாளர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக இருக்கும் எனும் அளவிற்கு அவ்வாதங்கள் இருந்தன.

இறுதியாக, அரசின் தலைமை வழக்கறிஞர் வி.பி. ராமன் அவர்கள், “அரசின் கொள்கை தனியார்மயம்தான். அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் இவர்கள் விவாதமாக்குகிறார்கள். இது அரசின் கொள்கை முடிவு” என்றார்.

ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.

வழக்கு முடிந்த கையோடு தோழர்கள் குமாரசாமி, பாரதி உள்ளிட்ட அனைவரும் போராட்டத் திடலுக்குச் சென்றனர்.

சுமார் இரண்டு மூன்று மணி நேரம் போராடுபவர்களைக் கைது செய்வதற்கு போலீசு முனைந்தது. தூய்மைப் பணியாளர்களின் உறுதி காரணமாக தற்காலிகமாகப் பின்வாங்கிய போலீசு இரவோடு இரவாக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்தி கைது செய்தது.

(இப்பதிவு மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் முகநூல் பதிவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க