ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!

ஒரு குறுகிய காட்டுப் பாதையில் கூடியிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பஜ்ரங் தள குண்டர்கள் பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

0

டந்தாண்டில் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அம்மாநிலத்தில் சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று பாலசோர் மாவட்டத்தின் ஜலேஸ்வர் அருகே உள்ள கங்காதர் கிராமத்தில் இரங்கல் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கங்காதர் தேவாலயம் மற்றும் பாலசோர் மாவட்டத்தின் சார்பில் இரண்டு கத்தோலிக்க பாதிரியார்கள், இரண்டு கன்னியாஸ்திரீகள், ஒரு கிறிஸ்தவ போதகர் உள்ளிட்ட ஐந்து பேர் சென்றுள்ளனர்.

இரங்கல் நிகழ்ச்சியை முடித்த பின்பு இரவு 9 மணியளவில் கங்காதர் கிராமத்திலிருந்து தேவாலயத்திற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு குறுகிய காட்டுப் பாதையில் கூடியிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பஜ்ரங் தள இந்துத்துவ குண்டர்கள் அவர்கள் ஐந்து பேர் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பாதிரியார்களும் கன்னியாஸ்திரீகளும் பிரார்த்தனைக்காகவே அழைக்கப்பட்டனர் என இந்துத்துவ கும்பலிடம் தெரிவித்த போதும் பஜ்ரங் தள காவி குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, 45 நிமிடங்களுக்குப் பிறகு சாவகாசமாக வந்த போலீசு ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. ஆனால், தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள் மீது போலீசு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமலும் யாரையும் கைது செய்யாமலும் காவி குண்டர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த கிறிஸ்தவ போதகர் லிஜோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், “சுமார் 70-க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவ கும்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நாங்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். குறிப்பாக ஊடகவியாளர் முன்னிலையில் எங்களை உடல் ரீதியாகத் தாக்கினர். “பிஜு ஜனதா தள ஆட்சியின் நாட்கள் முடிந்துவிட்டன. இப்போது பா.ஜ.க. ஆட்சி. இனி நீங்கள் யாரையும் கிறிஸ்தவர்களாக மாற்ற முடியாது” என்று கூறிக்கொண்டே தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தினர். எங்களது செல்பேசிகளை பறித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பின்பும் எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தது” என்று தெரிவித்தார். இதிலிருந்து காவி கும்பல் சிறுபான்மை மக்கள் மீது நடத்துகின்ற வன்முறைகளுக்கு ஆதரவாகத்தான் போலீசு செயல்படுகிறது என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.


படிக்க: கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதம்


பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீதான காவி கும்பலின் தாக்குதலைக் கண்டித்து “இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் மாநாடு” (Catholic Bishops Conference Of India) அறிக்கை வெளியிட்டுள்ளது. “சமீபத்திய சம்பவம் தனிப்பட்டது அல்ல, மாறாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையின் ஒரு பகுதியாகும். இது நாட்டில் வளர்ந்துவரும் சகிப்புத்தன்மையற்ற சூழலைப் பிரதிபலிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை அப்பட்டமாக மீறுவதாகும். அதிகரித்துவரும் கும்பல் வன்முறை போக்கு அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான சகவாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் ஒவ்வொரு குடிமகனும் அச்சமின்றி வாழ்ந்து தங்கள் நம்பிக்கையைப் பின்பற்ற முடியும்” என்று கேட்டுக்கொண்டுள்ள அவ்வறிக்கை, குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்குத் தொடரவும், அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறும் ஒடிசா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்று காவி கும்பல் கொடுத்த பொய் புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரீகளை அம்மாநில போலீசு கைது செய்தது. பின்னர் பல்வேறு அமைப்புகளின் தொடர் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீதிமன்றம் கன்னியாஸ்திரீகளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. அந்த பதற்றம் தணிவதற்குள் ஒடிசாவில் காவி குண்டர்களால் பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள், போதகர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டு சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ஒடிசாவில் கடந்தாண்டில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி செய்யக்கூடிய உத்தரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைப் போலவே ஒடிசாவையும் இந்துராஷ்டிர சோதனை சாலையாக மாற்றி வருகிறது  பாசிச பா.ஜ.க. கும்பல்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க