உத்தராகண்ட்: காவிமயமாக்கப்படும் பள்ளிகள்!

பாசிச கும்பல் பள்ளிகளில் புராணக் குப்பை கதைகளையும் இஸ்லாமிய வெறுப்பையும் திணிப்பதன் மூலம் மாணவர்களை சிந்தனையற்றவர்களாகவும் மதவெறிப் பிடித்தவர்களாகவும் மாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

த்தராகண்டின், புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த மாதம் ஜூலை 16-ஆம் தேதி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்திடம் (National Council Of Educational Research And Training – NCERT)  இராமாயணம் போன்ற புராணக் கதைகளை மாநில பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, ஜூலை 14-ஆம் தேதி உத்தராகண்ட் அரசு பள்ளிகளின் காலை ‘பிரார்த்தனை’யின் போது, தினமும் ஒரு பகவத் கீதை வசனத்தை சொல்வது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம், “வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்கிற சனாதன தர்ம நம்பிக்கையை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்” என பா.ஜ.க. அரசு தெரிவித்தது.

பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கைக்கு மாநிலம் முழுவதுமுள்ள ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மத நூல்களை பள்ளிகளில் கற்றுக்கொடுப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சஞ்சய் குமார் தம்தா கூறுகையில், “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 28(1), அரசின் முழு நிதியுதவி அல்லது உதவி பெறும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், எந்தவித மத போதனையும் வழங்கப்படக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. பிரார்த்தனைக் கூட்டங்களின் போது மாணவர்களை கீதை வசனங்களை ஓதச் சொல்வது இந்த அரசியலமைப்பு விதியை மீறுவதுடன் அரசுப் பள்ளிகளில் மதச்சார்பற்ற கல்வி முறையை அச்சுறுத்துகிறது. எங்கள் பள்ளிகளில் பல மதங்கள், சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். ஒரு மதத்தின் நூல்களை கட்டாயப்படுத்துவது மற்றவர்களை சங்கடமாகவும் பாகுபாடாகவும் உணர வைக்கும். இது சமூக நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய கல்விக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பை துளியும் பொருட்படுத்தாத மாநில கல்வி இயக்குநர் முகுல் குமார், “கீதையின் போதனைகளானது, சாங்கிய தத்துவம், உளவியல், தர்க்கம், நடத்தை அறிவியல் மற்றும் தார்மீக தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்திலிருந்து மனிதகுலத்திற்கு உலகளாவிய நன்மை பயக்கும் என்பதையும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.” என்று பாசிச கும்பலின் கட்டாய மத நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

ஒருபுறம், பள்ளிகளில் பாடத்திட்டத்தை காவிமயமாக்கும் பாசிச கும்பல் மறுபுறம் இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றை பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி வருகிறது. என்.சி.இ.ஆர்.டி. 7-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்த முகலாயர்கள் குறித்த வரலாற்றை நீக்கி, அதனை திருத்தி, 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இணைத்துள்ளது. இப்புத்தகத்தில் முகலாய மன்னர்களான பாபர், அக்பர், மற்றும் ஔரங்கசீப் ஆகியோரை “கொள்ளையர்கள்”, “வெளிநாட்டு படையெடுப்பாளர்கள்” என மாணவர்களிடையே இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் வகையில் சித்தரித்துள்ளது.

மேலும், திருத்தப்பட்ட பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தான், ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேய-மைசூர் போர்கள் (1767-1799) குறித்தான பகுதியையும் நீக்கியுள்ளது. இதன்மூலம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கை மூடிமறைக்கிறது.

இவ்வாறு பாசிச கும்பல் பள்ளிகளில் புராணக் குப்பை கதைகளையும் இஸ்லாமிய வெறுப்பையும் திணிப்பதன் மூலம் மாணவர்களை சிந்தனையற்றவர்களாகவும் மதவெறிப் பிடித்தவர்களாகவும் மாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

எனவே, கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு பாசிச கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள் போராட்டங்களை கட்டியெழுப்ப வேண்டும். இல்லையெனில், நாளைய இளைய சமுதாயம் பாசிஸ்டுகளின் மதவெறிக்கு பலியாவதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.


இன்குலாப்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க