மதுரை: தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள தூய்மைப் பணியாளர்கள்!

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை (ஆகஸ்ட் 18 ) முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

0

துரை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 18) முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. அவற்றில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தி.மு.க அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் தங்களின் ஊதியம் மாதம் 23,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை எதிர்த்தும் கடந்த சில நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிகளை ”அவர்லேண்ட்” (Ourland) என்கிற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்; அரசாணை 62(2D)-இன்படி தினசரி ஊதியமாக ரூ.754 வழங்க வேண்டும்; பணிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்; தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்காமல் அரசு நேரடியாக மேற்கொள்ள வேண்டும்; அரசு அறிவித்துள்ள அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்; கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ், மற்றும் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட 28 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (ஆகஸ்ட் 18) முதல் மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு, எல்.பி.எஃப், மற்றும் எல்.எல்.எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’


சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 5 மற்றும் 6வது மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளை ”ராம்கி” என்கிற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது தி.மு.க அரசு. இதனைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் ”வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் கட்டடம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைப் பின்பற்றி மற்ற மாவட்டங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் அரசின் கார்ப்பரேட் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் என்று அச்சமடைந்த ‘திராவிட மாடல்’ அரசு, ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று இரவோடு இரவாக கூலிப்படையைப் போன்று போலீசாரை வைத்து தூய்மைப் பணியாளர்களையும் அவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் போராடிய ஜனநாயக சக்திகளையும் கொடூரமாகத் தாக்கி போராட்டத்தை ஒடுக்கியது.

பின்னர் அனைவரையும் 30 பேருந்துகளில் ஏற்றி, வேளச்சேரி, தாம்பரம், தரமணி உள்ளிட்ட 10 இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைத்தது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை அனைவரையும் விடுதலை செய்தது. அரசின் அடக்குமுறைகளுக்கு எல்லாம் அஞ்சாத தூய்மைப் பணியாளர்கள் தங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

அன்றைய தினமே கடலூர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையைப் போன்று மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களும் நாளை (ஆகஸ்ட் 18 ) முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். துப்புரவுப் பணியை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே தி.மு.க அரசைப் பணிய வைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க