அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாடி வருகிறது பாசிச மோடி அரசு. ஜி.எஸ்.டி. மூலம் சிறு-குறு வணிகத்தை ஒழித்துக்கட்டுவது தொடங்கி பிற மாநிலங்களின் முதலீடுகளை குஜராத்திற்கு மடைமாற்றுவது வரை இந்திய சந்தையை அம்பானி – அதானிகளுக்கானதாக மாற்றி வருகிறது.
இப்பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகளோ மக்கள் நலன் கொண்ட மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கி பாசிச சக்திகளை எதிர்கொள்வதற்கு பதிலாக, கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க. உடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக சலுகைகளை வாரி வழங்கியும் நகரமயமாக்கல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும் வருகின்றன. இதற்காக பழங்குடியின மக்கள், தலித் மக்கள், விவசாயிகளின் நிலங்களை பறித்து அவர்களை அகதிகளாக்குகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரசு அரசு அடிபணிந்துள்ளது. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த இவ்வெற்றியை தேவனஹள்ளி விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஒடுக்குமுறைகளை கடந்து வெற்றியடைந்த போராட்டம்
கடந்த 2022-ஆம் ஆண்டில் கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே “உயர் தொழில்நுட்ப விண்வெளி பூங்கா” அமைக்க உள்ளதாக அப்போதைய பா.ஜ.க. அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேவனஹள்ளி தாலுக்காவின் 13 கிராமங்களிலிருந்து சுமார் 1,777 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான தொடக்கக்கட்ட அறிவிப்பை கர்நாடக தொழிற்துறைப் பகுதி மேம்பாட்டு வாரியம் (KIADB) வெளியிட்டது.
ஏற்கெனவே, பெங்களூரு விமான நிலையம், ஹரலுரு தொழிற்துறைப் பகுதி மேம்பாட்டு திட்டம்-1 உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நல திட்டங்களுக்காக தேவனஹள்ளியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கர்நாடக தொழிற்துறைப் பகுதி மேம்பாட்டு வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கார்ப்பரேட் திட்டங்களுக்காக பெங்களூரு முழுவதும் தங்களது நிலங்களைப் பறிகொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்தும், பலர் இழப்பீடு கூட கிடைக்கப்படாமலும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது விண்வெளி பூங்கா திட்டத்திற்காக 13 கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அங்கு வாழும் 800 குடும்பங்களும் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அகதிகளாக்கப்படுவர். இதனை உணர்ந்த கிராம மக்கள் “கெ.ஐ.ஏ.டி.பி. நில கையகப்படுத்துதல் எதிர்ப்பு போராட்டக் குழு” என்ற பெயரில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு சாதி கடந்து ஒன்றிணைந்து போராடத் தொடங்கினர்.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, போராடும் மக்களை சந்தித்த கர்நாடகாவின் தற்போதைய முதல்வரான சித்தராமையா, காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தேவனஹள்ளியில் நில கையகப்படுத்துதலுக்கான அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றாமல், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை மீறி சட்டவிரோதமாக நிலங்களைப் பறிக்க முயன்றது காங்கிரசு அரசு.
மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு மக்களின் முதுகில் குத்தியது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக “டெல்லி சலோ” போராட்டத்தை முன்னெடுத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் (எஸ்.கே.எம்.) அங்கமான “சம்யுக்தா ஹோரட்டா கர்நாடகா” என்ற ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பு இப்போராட்டத்தில் தலையிட்டது. ஜூன் 25 அன்று “தேவனஹள்ளி சலோ” அணிவகுப்பிற்கு இக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்துகொண்ட காங்கிரசு அரசு, அதனை மழுங்கடிப்பதற்காக மூன்று கிராமங்களிலுள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 495 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் கையகப்படுத்துதலிலிருந்து விலக்களிப்பதாக அறிவித்தது. ஆனால், இது போராடும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் 13 கிராமங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் வரை ஒற்றுமையாகப் போராடுவோம் என்றும் அம்மூன்று கிராம மக்கள் உறுதிபடக் கூறினர்.
அதேபோல், தேவனஹள்ளி சலோ அணிவகுப்பிற்கு முந்தைய நாளில், அப்போராட்டத்தை சீர்குலைப்பதற்காக ஓர் ஏக்கருக்கு 10,771 சதுர அடி வணிக நிலங்களை இழப்பீடாக வழங்குவதாக காங்கிரசு அரசு அறிவித்தது. மேலும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலைச் சார்ந்தவர்களை விவசாயிகளாக சித்தரித்து, அவர்கள் நிலங்களை விற்கத் தயாராக இருப்பது போல மோசடி செய்தது.
ஆனால், கர்நாடக அரசின் அனைத்து சதிகளையும் முறியடித்து, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், ஜனநாயக சக்திகளின் பங்கேற்புடன் தேவனஹள்ளி சலோ அணிவகுப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. அணிவகுப்பில் நில கையகப்படுத்துதலுக்கான இறுதி அறிவிப்பை எரித்து, “இந்த அறிவிப்பு இரத்து செய்யப்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். 24 மணி நேரத்திற்குள் அரசு பதிலளிக்கவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை இழுத்து மூடுவோம்” என்று கர்நாடக அரசுக்கு மக்கள் கெடு விதித்தனர்.
ஆனால், மக்கள் போராட்டத்தைக் கண்டு பீதியடைந்த காங்கிரசு அரசு, போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. கர்நாடக அரசின் இவ்வொடுக்குமுறைக்கு எதிராக மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்களில் இறங்கினர். நடிகரும் செயற்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் தலைமையில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் பலர் முதல்வர் வீட்டை நோக்கி பேரணி நடத்தினர். ஜூன் 29 முதல் பெங்களூருவின் சுதந்திர பூங்காவில் பல நூறு விவசாயிகள் “பூமி சத்தியாகிரகம்” போராட்டத்தைத் தொடங்கினர்.
இதனையடுத்து, வேறுவழியின்றி, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கேட்ட முதல்வர் சித்தராமையா, ஜூலை 15 அன்று நில கையகப்படுத்துதலைக் கைவிடுவதாக அறிவித்தார். இந்த வெற்றியை 13 கிராம மக்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்தியா முழுவதுமே கனிமவளச் சூறையாடல், கார்ப்பரேட் லாபவெறித் திட்டங்களை எதிர்த்து உழைக்கும் மக்கள் போரடிவரும் நிலையில், தேவனஹள்ளி விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைந்திருப்பது போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
அதேசமயத்தில், தேவனஹள்ளியில் நில கையகப்படுத்துதலைக் கைவிடுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தபோது, “தேவனஹள்ளி பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே அமைந்திருப்பதால் மாநிலத்தில் அனைவரின் வருமானத்தையும் அதிகரிப்பதற்கு இந்நிலம் தேவைப்படுகிறது. சில விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். அதற்கு மாற்றாக அவர்களுக்கு இழப்பீடும் மாற்று நிலமும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார். இது எதிர்காலத்தில் தேவனஹள்ளி மக்களின் நிலங்களை பின்வாசல் வழியாக பறிக்கும் காங்கிரசு அரசின் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தேவனஹள்ளி விவசாயிகள் விழிப்புடன் இருந்து இச்சதிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு கர்நாடக மாநில உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும்.
பரந்தூரை பாதுகாத்திடுவோம்
தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம் தொடங்கிய அதே சமயத்தில்தான், தமிழ்நாட்டில் ‘பசுமை’ விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூர் மக்களின் போராட்டமும் தொடங்கியது.
‘பசுமை’ விமான நிலையத் திட்டத்திற்காக பரந்தூர் உள்ளிட்டு 20 கிராமங்களிலிருந்து 5,746 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தி.மு.க. அரசு அறிவித்தது. விளைநிலங்கள், நீர்நிலைகளை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த நாசகரத் திட்டத்திற்கு எதிராக 2022-ஆம் ஆண்டில் தொடங்கிய மக்கள் போராட்டம் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியுடன் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், போராடும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் விமான நிலையம் அமைப்பது தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது தி.மு.க. அரசு. மேலும், மக்கள் போராட்டத்தைப் போலீசு மூலம் ஒடுக்குவது; மக்களை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவது என பரந்தூர் மக்கள் போராட்டத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. “திராவிட மாடல்” என்ற பெயரில் அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், தேவனஹள்ளி மக்களைப் போலவே, நிலத்தின் மீதான தங்களது மரபுரிமையை பற்றி நிற்கும் பரந்தூர் மக்கள் 1,100 நாட்களை கடந்து விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கர்நாடகாவில் தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் நேரடியாக பங்கெடுத்தது; முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் நடத்தியது என ஒருங்கிணைந்த வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான் அப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணமாகும்.
இதனை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளும் போராடும் பரந்தூர் மக்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் கோரிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டியுள்ளது.
பானு
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram