ஆயுர்வேதம்-அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு காவிமயமாகும் மருத்துவம்

ஆயுர்வேதத்தை மட்டும் இந்திய மருத்துவ முறையாக உயர்த்திப்பிடிக்கும் மோடி அரசு, தங்களுடைய இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் உள்ளிட்ட பிற மாற்று மருத்துவ முறைகளை நசுக்கி அழிக்கும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

ந்தியாவின் மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவப் படிப்பையும் (BAMS – Bachelor of Ayurvedic Medicine and Surgery) அலோபதி எனும் ஆங்கில மருத்துவப் படிப்பையும் (MBBS – Bachelor of Medicine and Bachelor of Surgery) இணைத்து புதிய ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே 27-ஆம் தேதி, புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் அவசர மற்றும் விபத்து சிகிச்சை மையத்தைத் (Emergency and Trauma Care Centre) திறந்துவைத்த ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், புதிய ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து இந்த புதிய ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு தொடங்கும் என்றும் அறிவித்தார்.

மருத்துவத்தை காவிமயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் பாசிச கும்பல், அதன் அடுத்தக் கட்டமாகவே இந்த ஒருங்கிணைப்பை கையிலெடுத்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாணவர்களுக்கு பாடச்சுமை மக்களுக்கு பாதிப்பு

ஒருங்கிணைந்த எம்.பி.பி.எஸ் – பி.ஏ.எம்.எஸ் பாடத்திட்டம் என்பது இரண்டு வெவ்வேறு கடினமான பாடத்திட்டங்களை இணைத்து மருத்துவ மாணவர்களின் முதுகில் சுமையைக் கூட்டுவதாகும். ஏனெனில், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பாடத்திட்டங்களை கற்றுத் தேர்ச்சி பெறுவது மிகச் சவாலானதாகும்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட ஒவ்வொரு மாற்று மருத்துவப் பட்டப் படிப்புகளும் அலோபதியை போன்றே ஐந்தரை வருடங்களுக்கான பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே, தற்போதுள்ள மருத்துவப் பாடத்திட்டங்களே மிகவும் கடினமானதாக உள்ள நிலையில், ஆயுர்வேதம்-அலோபதியை இணைத்து புதிய பட்டப் படிப்பு உருவாக்கப்பட்டால் அது ஆறிலிருந்து ஆறரை வருடங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவத்தை முறையாக பயின்று தேர்ச்சி பெறும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதன் விளைவாக மக்களுக்கான மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் உள்ளது.

மருத்துவத்தை காவிமயமாக்கத் துடிக்கும் சங்கிக் கும்பல்

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அறிவியலுக்குப் புறம்பான – மக்கள் விரோத – இந்துத்துவ சனாதன பிற்போக்கு கருத்துகளை சங்கிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதிலும், கல்வித்துறை மற்றும் அதிகாரத்தில் உயர்மட்டத்தில் உள்ள சங்கிகள் இப்பிரச்சாரத்தை பொதுவெளியில் செய்து வருகின்றனர்.

டெல்லியில் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா என்பவர் கல்லூரி வகுப்பறைகளின் வெப்பத்தை குறைப்பதற்காக மாட்டுச் சாணத்தை பூசியது; டெல்லி ஐ.ஐ.டி-யில் பஞ்சகவ்யம் (மாட்டு சாணம், மூத்திரம், பால், தயிர், நெய்யின் கலவை) மூலம் இயற்கை மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது; சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குனர் காமகோடி மாட்டு மூத்திரத்தில் கிருமி நாசினி, உணவு செரிமானத்திற்குத் தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுடன் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று கூறியது போன்றவை இதற்கான சமீபத்திய சான்றுகளாகும்.

இவையெல்லாம் இந்திய மருத்துவக் கட்டமைப்பை இந்துத்துவமயமாக்கும் சதி ஏற்கெனவே அரங்கேறி வருவதை உணர்த்துகின்றன. இதன் தொடர்ச்சியாகவே ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற பெயரில் ஆயுர்வேத மருத்துவத்தை அலோபதி மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத்தை காவிமயமாக்கும் சதித்திட்டத்தை மோடி அரசு கையிலெடுத்துள்ளது.

ஏனெனில், இன்றளவும் ஆயுர்வேத மருத்துவத்திற்கென தனி தத்துவ அடிப்படை கிடையாது. இந்தியாவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளை பார்ப்பனியத்தால் சுவீகரித்து உருவாக்கப்பட்டதே ஆயுர்வேதம். ஒவ்வொரு பாரம்பரிய மருத்துவ முறையையும் வேத-சாஸ்திரங்களோடு தொடர்புபடுத்தி, அதற்கு வேத முலாம் பூசிதான் ஆயுர்வேதம் உருவாக்கப்பட்டது. எனவே, ஆயுர்வேத மருத்துவம் பெரும்பாலும் இந்துமத கருத்துகள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கியதாகவே உள்ளது.

இந்தியாவில் தற்போது அலோபதி மருத்துவமானது மிகப்பெரும் அளவிலான மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்ட பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகின்ற துறையாக இருக்கின்றது. இத்தகைய மருத்துவ முறையுடன் ஆயுர்வேதத்தை இணைப்பதானது மிக விரைவில் ஆயுர்வேதத்தை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கான சதி நடவடிக்கையாகும்.

இதன்மூலம், சங்கிகளின் இந்துத்துவக் கருத்துகள் மற்றும் மூடத்தனங்கள் மருத்துவத்துறையில் வேகமாக புகுத்தப்படும். இது மட்டுமல்லாமல் இந்துத்துவக் கார்ப்பரேட் சாமியார்களான பாபா ராம்தேவ் போன்றவர்களின் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கான சதித்திட்டமும் இதில் அடங்கியுள்ளது.

மேலும், ஆயுர்வேதத்தை மட்டும் இந்திய மருத்துவ முறையாக உயர்த்திப்பிடிக்கும் மோடி அரசு, தங்களுடைய இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் உள்ளிட்ட பிற மாற்று மருத்துவ முறைகளை நசுக்கி அழிக்கும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

மாற்றுஒருங்கிணைந்த மருத்துவம்

2022-ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் “ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சித் துறை” நிறுவப்படுவதை கட்டாயமாக்கியது. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகளுடன் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமென கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஆயுர்வேதம், அலோபதி மருத்துவத்தை இணைக்கும் மோடி அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆனால், ஒருங்கிணைந்த மருத்துவம் என்று குறிப்பிடும்போது அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையுடன் மாற்று மருத்துவ முறைகளான சித்தா, ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதே சரியானதாகும். அதாவது, எல்லா மருத்துவமனைகளிலும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவர்களையும் நியமித்து நோயளிகளுக்கு எந்த மருத்துவ முறையில் சிறப்பாக சிகிச்சையளிக்க முடியுமோ அந்த முறையில் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

இந்த அனைத்து மாற்று மருத்துவ முறைகளிலும் ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சில நோய்களுக்கு சில மருத்துவ முறைகளில் நல்ல பயன்கள் ஏற்படும். சான்றாக, டெங்கு நோய் பரவலின்போது சித்த மருத்துவத்தின் மருந்தான நிலவேம்பு கசாயம் அனைத்து மருத்துவமனைகளிலும் கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், கொரோனாவிற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் ஆர்சனிகம் ஆல்பம் (Arsenicum album) என்ற தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு நெருக்கடியான சூழல்களிலும் ஒவ்வொரு மருத்துவமுறைகள் மூலம் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல், ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. அந்த வரம்புகளுக்குள் நல்ல தீர்வுகள் கிடைக்கின்றன. மேலும், இந்த மாற்று மருத்துவ முறைகள் அனைத்தும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. இவற்றிற்கான பாடத்திட்டங்களில் அலோபதி மருத்துவத்தில் பயிலும் மனித உடற்கூறியல் மற்றும் உடல் இயங்கியல் (Anatomy and Physiology) சார்ந்த அனைத்துப் பாடங்களும் உள்ளன. இந்த மாற்று மருத்துவ முறைகளில் நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களும் உள்ளனர். ஆகையால், மேற்குறிப்பிட்ட வகையில் மருத்துவ ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்போதே அது மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

மாறாக, தற்போது மோடி-அமித்ஷா பாசிச கும்பல் முன்னெடுக்கும் ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற இத்திட்டமானது ஒரே நாடு – ஒரே தேர்தல் – ஒரே கல்வி – ஒரே மதம் – ஒரே கலாச்சாரம் என்ற வரிசையில் ஒரே நாடு – ஒரே மருத்துவம் என்ற பாசிச கொள்கையின் அடிப்படையில் ஆயுர்வேதத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மருத்துவத்தினை காவிமயமாக்கும் நோக்கத்துடனும் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையிலும் கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்திற்கெதிராக அனைத்து மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மருத்துவர் சங்கங்களும் குரலெழுப்ப வேண்டும்.


அசுரன்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க