பா.ஜ.க-வின் விஷ்ணுதியோ சாய் ஆட்சி செய்துவருகின்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் காவி குண்டர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹனுமான் பாடல்களைப் பாடிக்கொண்டே மதவெறி கும்பல் அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் காவி கும்பல் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், போலீசார் அதனைத் தடுப்பதற்கு முயல்வதும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அங்குள்ள கிறிஸ்தவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இதற்கு முன்பாக ஜூலை 26 ஆம் தேதி அன்று கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரீகள் கட்டாய மதமாற்றம், ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக காவி குண்டர்கள் கொடுத்த புகாரில் கன்னியாஸ்திரீகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் பல சமூக அமைப்புகளின் போராட்டங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல், மே மாதத்தில் ஒரு தேவாலயத்திற்குள் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த காவி குண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டு அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அசாம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது பாசிச கும்பலால் தாக்குதல் நடத்தப்படுவதைப் போல், விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாசிச பா.ஜ.க ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram