குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்

‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

0

பா.ஜ.க. ஆளும் குஜராத்தின் பாவ்நகரில் உள்ள கும்பர்வாடா பள்ளியில், ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற ‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், ‘இஸ்லாமியர்கள்தான் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்’ என்ற நச்சு கருத்தைப் பள்ளி குழந்தைகளின் மனதிலும் விதைக்கும் கொடுஞ்செயலில் இறங்கியுள்ளது காவி கும்பல். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பள்ளி மாணவர் ஒருவரின் பெற்றோரான ஃபாத்திமா கூறுகையில், “இஸ்லாமியப் பெண்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது தற்செயலானது அல்ல. இது சமூகத்தைப் பிளவுபடுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி” என்று கூறியுள்ளார்.

மேலும், உள்ளூர் ஆர்வலர் ஷாஹித் கான் கூறுகையில், “இது நாடகம் அல்ல, இது நஞ்சு. சுதந்திர தினத்தன்று, சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் பற்றி நாம் பேச வேண்டிய நிலையில், அவர்கள் (பா.ஜ.க. கும்பல்) இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதைக் கையிலெடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஓய்வுபெற்ற பேராசிரியர் இக்பால் அன்சாரி தெரிவிக்கையில், “பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே ஒரு சார்பைக் காட்டும்போது, தற்போது பள்ளிகள் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடும் படியாக நாடகங்களை நடத்தும்போது, அடுத்த தலைமுறை எதை நம்பும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்


மேலும், வழக்கறிஞர் நசீம் அகமது கூறுகையில், “தெருக்கள் முதல் வகுப்பறைகள் வரை இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்து, குற்றவாளி என்று அழைக்கப்படுகிறார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்லாமியர் பயங்கரவாதி என்று அழைக்கப்படுகிறார்” என காவி கும்பலின் இரட்டை நீதியை அம்பலப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீசு தற்போது வரை விசாரணை தொடர்பான அறிக்கையை வெளியிடவில்லை. மேலும், இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டும் செயலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது எந்தவித துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு மத நல்லிணக்கம் மற்றும் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், மாணவர்களிடையே இந்துமதவெறியைப் பரப்புகின்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பிரச்சார கூடாரங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

மேலும், பாசிச கும்பலானது தேசபக்தி என்ற போர்வையில் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துகின்ற, இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புகின்ற முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க