ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்

ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தி 7 பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்துள்ளது.

0

னவெறி இஸ்ரேல் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று காசாவில் உள்ள பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்தி ஏழு பத்திரிகையாளர்களை அநியாயமாகப் படுகொலை செய்துள்ளது.

யூத இனவெறி இஸ்ரேல் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக காசா மீது இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. அப்போரினால் மக்கள் கொல்லப்படுவதையும் இஸ்ரேலின் கொடூர நடவடிக்கைகளையும் அல்ஜசீரா உள்ளிட்ட சில ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து களத்திலிருந்து அம்பலப்படுத்தி வருகின்றனர். இத்தகைய உணர்வுப்பூர்வமான பத்திரிகையாளர்களைப் போர் தொடங்கியதிலிருந்தே குறிவைத்துக் கொன்று குவித்து வருகிறது இனவெறி இஸ்ரேல்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அல் ஜசீரா ஊடகத்தைச் சார்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் அபு – ஷெரீப் (28), முகமது கிரீகே மற்றும் ஒளிப்பதிவாளர்களான (Camera man) இப்ராஹிம் ஜாகர் மற்றும் முகமது நெளபால் ஆகிய நால்வரும் கொல்லப்பட்டனர். இவர்கள் மட்டுமின்றி, ஃப்ரீலான்ஸ் (freelance) பத்திரிகையாளரான முகமது அல்-காலிடி, ஃப்ரீலான்ஸ் ஒளிப்பதிவாளரான மோமன் அலிவா உள்ளிட்ட மூன்று பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அல் ஜசீரா ஊடகவியலாளர் அபு – ஷெரீப் இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் இராணுவத்தினருக்கு தலைமை தாங்கியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் பொய் குற்றஞ்சாட்டி அப்படுகொலையை நியாயப்படுத்தியுள்ளது இஸ்ரேல். ஆனால், அதற்கான ஆதாரங்களை தற்போது வரை இஸ்ரேல் அரசு வெளியிடவில்லை.


படிக்க: காசா இனப்படுகொலை: மறுகாலனியாதிக்க உலகத்தின் சர்வதேச விதிகள்


தங்களது பத்திரிகையாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததைக் கண்டித்துள்ள அல் ஜசீரா ஊடகம், “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மற்றொரு திட்டமிடப்பட்ட தாக்குதல்” என்று இதை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், சர்வதேச ஊடகங்களின் செயல்பாடுகள் இஸ்ரேலால் தடுக்கப்பட்டு வரும் நிலையில், காசாவிற்குள் இருந்து செய்தி வெளியிட்ட கடைசி குரல்களில் அல்-ஷெரீப்பும் அவரது தோழர்களும் அடங்குவர் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், “காசாவின் துணிச்சலான பத்திரிகையாளர்களில் ஒருவரான அனஸ் அல் ஷெரீஃப் மற்றும் அவரது தோழர்கள் மீதான படுகொலையானது, காசா முழுவதுமாக கைப்பற்றப்படுவதையும் ஆக்கிரமிக்கப்படுவதையும் அம்பலப்படுத்தும் குரல்களை அடக்குவதற்கான ஒரு தீவிர முயற்சியாகும். இந்தத் தொடர்ச்சியான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவும் பத்திரிகையாளர்களை வேண்டுமென்றே குறிவைப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று சர்வதேச நாடுகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் அல் ஜசீரா கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், இனவெறி இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட படுகொலையைக் கண்டித்துள்ள அம்னாஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International) அல்-ஷெரீப்பை ஒரு துணிச்சலான மற்றும் அசாதாரணமான நிருபராகக் கௌரவித்து, பத்திரிகை சுதந்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்புக்காக 2024-ஆம் ஆண்டில் “மனித உரிமைகள் பாதுகாவலர்” விருதை வழங்கியதாகத் தெரிவித்துள்ளது. மேலும், “இஸ்ரேல் பத்திரிகையாளர்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. இனப்படுகொலை ஆவணப்படுத்தப்படுவதைத் தடுப்பதன் மூலம் பத்திரிகைத் துறையையே தாக்குகிறது” என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசா மீதான போர் தொடங்கியதிலிருந்து மிகவும் அர்ப்பணிப்பாகச் செயல்பட்டுவந்த அல் – ஷெரீப், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதியன்று வெளியிட்ட பதிவு ஒன்றில், “வலியின் அனைத்து நிலைகளிலும் வாழ்ந்தேன். துக்கத்தையும் இழப்பையும் மீண்டும் மீண்டும் சுவைத்தேன். அப்படி இருந்தபோதிலும், திரிபு அல்லது தவறான விளக்கங்கள் இல்லாமல் – உண்மையை அப்படியே வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்கியதில்லை. அமைதியாக இருந்தவர்களுக்கும் எங்கள் கொலையை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் எங்கள் மூச்சை திணறடித்தவர்களுக்கும் கடவுள் சாட்சியாக இருப்பார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.


படிக்க: காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!


மேலும், “எங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களின் சிதைந்த உடல்கள் கூட அவர்களின் இதயங்களை அசைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்கள் அனுபவித்துவரும் படுகொலைகளை நிறுத்தவில்லை” என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். இத்தகைய பத்திரிகையாளர்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் இஸ்ரேல் அவர்களைக் குறிவைத்து வேட்டையாடி வருகிறது.

குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் ஜசீரா பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லேவின் பெயரில் ஷிரீன் பி.எஸ் (Shireen PS) கண்காணிப்பு வலைத்தளம் செயல்பட்டு வருகின்றது. இதன் புள்ளிவிவரப்படி, காசாவில் 22 மாதத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களால் 270-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 13 பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

நன்றி: அல்ஜசீரா

காசா மீது பேரழிவுப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இனவெறி இஸ்ரேல், காசா மக்களின் அழுகுரல்களும் உரிமைக் குரல்களும் உலகிற்கு கேட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பத்திரிகையாளர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், பத்திரிகையாளர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து இனவெறி இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களை அம்பலப்படுத்தி வருவது உண்மையிலேயே போற்றுதலுக்குரியதாகும்.

இவ்வாறு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதை உலகம் முழுவதுமுள்ள பத்திரிகையாளர்கள், கருத்துச் சுதந்திரத்தை விரும்புவோர் கண்டிக்க வேண்டும். மேலும், இஸ்ரேலின் பேரழிவுப் போருக்கு எதிராகவும் காசா மக்களின் உரிமைக் குரலுக்கு ஆதரவாகவும் உலகம் முழுவதிலுமிருந்து குரலெழுப்ப வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க